Karnan vs Arjunan
Karnan vs Arjunan

கர்ணன் கற்ற வேதமும் அர்ச்சுனனின் பக்தியும்!

Published on

கர்ணன் கற்ற வேதம்:

கர்ணன் பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே? துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தசொல்கிறார் குரு. அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறிபார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான்.

மிகச் சிறந்த வில் வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார்.

"குருவே இது மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன்" என்றானாம்.

கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று.

அர்ச்சுனனின் பக்தி:

தன்னிடம் மல்யுத்தம் பயின்ற மாணவர்களில் தனக்கு மிகவும் பிரியமான துரியோதனனுக்கு தன் தங்கை சுபத்ராவை மணம் முடித்துப் பார்க்க வேண்டும் என்று யாதவ குல மன்னன் பலராமனுக்கு ஆசை. ஆனால் சுபத்ரையோ, வில்லாளன் அர்ச்சுனனையே விரும்புகிறாள்

இந்த சிக்கலான சூழலில் அண்ணனது பகையும் இல்லாமல், தங்கையின் ஆசையை நிவர்த்தி செய்யும் பணி, கண்ணனிடம் விழுகிறது. அர்ச்சுனனை வரவைத்துத் தன் தேரிலேயே ஊரைக் கடக்கும் வரை, காதலர் இருவரையும் அனுப்பி வைத்துத் தப்ப வைக்க வேண்டும் என்று திட்டம் நீட்டினான் கண்ணன்

அர்ச்சுனன் தன் மீது அளவு கடந்த பக்தி வைத்திருக்கிறான் என்று கண்ணனுக்கு தெரியும். இருந்தாலும், இந்த திட்டத்திற்கு முன்பு அதை சோதித்துப் பார்த்து விடுவது என்று எண்ணினான்

இதையும் படியுங்கள்:
அம்மன் ஆலயங்கள்: அதிசய தகவல்கள்!
Karnan vs Arjunan

அர்ச்சுனன் பூங்கா வனத்தில் இருக்கின்ற வேளையில் அவனை அணுகினான். புறா ஒன்று பறந்து சென்றது

"அர்ச்சுனா, அது என்ன புறாவா பறந்து செல்கிறது?"

"ஆம் கண்ணா, அது புறாவே தான்."

"இல்லையே! இது கரிய நிறமாகவல்லவா இருக்கிறது. காக்கை தானே அது?"

"ஆம் பிரபுஅது காக்கையே தான்."

"காக்கையா, நன்றாக உற்றுப் பார்! கழுகு மாதிரி இல்லை?"

"ஆம் கண்ணா அது கழுகு போலத்தான் தெரிகிறது."

"என்ன அர்ச்சுனா, என்னை ஏமாற்றப்  பார்க்கிறாயா? வெள்ளைப் புறாவைக் காக்கை என்கிறாய். கழுகு என்கிறாய். என்ன சேதி?"

"மன்னிக்க வேண்டும் மதுசூதனா, நான் தங்களை ஏமாற்றவிவ்லை. தங்கள் கண்ணுக்கு என்ன தெரிகிறதோ, அதுவே உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் தான் என் கண்கள் உணர்த்தியதைக் கூட நான் நம்பவில்லை."

அர்ச்சுனனின் பக்தி குறையவில்லை என்பதை உணர்ந்த கண்ணன், தன் திட்டப்படி காதலர்களைச் சேர்ப்பதில் முனைந்தார்.

logo
Kalki Online
kalkionline.com