நெல்லை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவ தலமான இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அழகிய நம்பிராயர் மூலவராகவும் குருங்குடி வள்ளி நாச்சியார் தாயாராகவும் அருள் பாலிக்கிறார்கள். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது திருக்குறுங்குடி நம்பி கோவில். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருக்குறுங்குடி என்ற ஊரில் அமைந்துள்ளது.
இது திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரிய ஆழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். இங்கு மகாவிஷ்ணு லட்சுமி உடன் வராக வடிவத்தில் தங்கி இருந்ததால் குறுங்குடி எனப்பட்டது.
நம்பாடுவான் என்ற பாணர் குலத்தை சார்ந்த விஷ்ணு பக்தர் மகேந்திர கிரி மலையில் வசித்து வந்தார். அவர் திருக்குறுங்குடியில் உள்ள நம்பியை தரிசிக்க கீழே இறங்கி வந்தார். அப்போது அந்த காட்டுப் பகுதியில் இருந்த பிரம்ம ராட்சசன் என்ற அரக்கன் நம்பாடுவானை பிடித்து வைத்து தன் பசியை போக்க அவரை உணவாக புசிக்க எண்ணினான்.
நம்பாடுவான் அந்த அரக்கனிடம் நான் நம்பிப் பெருமாளை தரிசித்துவிட்டு பிறகு உனக்கு இரையாகிறேன் என்றார். பின்னர் நம்பாடுவான் நம்பியை தரிசிக்க சென்றார்.. கோவில் முகப்பில் உள்ள கொடிமரம் அவரை உள்ளே விடாதபடி மறித்தது. உடனே நம்பாடுவான் பக்தி பாடல்களை பாடவும் கொடிமரம் நகர்ந்து நம்பிப் பெருமாளை தரிசிக்க உதவி செய்தது. மீண்டும் பிரம்ம ராட்சசன் அரக்கனை சந்திக்க நம்பாடுவான் சென்றார்.
போகும் வழியில் ஒரு பிராமணர் நம்பாடுவானிடம் ஒரு கனியை கொடுத்தார். அந்தக் கனியை அவர் அந்த அரக்கனிடம் கொடுத்தார். அரக்கன் அந்தக் கனியை சாப்பிட்டதும் அவனது பசி அடங்கி விட்டது. அரக்கன் நம்பாடுவானை விடுவித்தார்.
பிராமணர் வடிவில் வந்தது நம்பி என அறிந்து கொண்டார் அவர். இந்த கோவில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. திருநெல்வேலியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் களக்காட்டில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது .
கொடி மரத்தில் அழகிய சிற்பங்கள் உள்ளது. மணவாள மாமுனிவருக்கு தனி சன்னதி உள்ளது. மூலவர் நம்பிக்கு பரிபூரணன் என்ற பெயரும் உண்டு. நம்பி உற்சவருக்கு அருகில் நீலாதேவி குறுங்குடி வள்ளி ஆகியோர் உள்ளனர். திருக்குறுங்குடி நம்பி இருந்த நம்பி மலை மேல் உள்ள கடவுள் நம்பி என அழைக்கப்படுகிறார். இக்கோவிலின் தலவிருட்சம் பனை மரம் ஆகும். இந்த மரம் பூக்கும் ஆனால் காய்க்காது. இந்த பெருமாளை வழிபட்டு வந்தால் நாம் நினைத்த காரியம் நடைபெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.