
நாம் செய்த பாவங்களுக்கேற்ப தகுந்த தண்டனை கொடுத்து நம்மைத் திருத்த வேண்டும் என்று நினைப்பாராம் திருமால். ஆனால், அவருக்கு அருகில் இருக்கும் தாயார் திருமகளோ, 'தண்டனை எதுவும் வேண்டாமே, அவர்கள் செய்த தவறுகளுக்கு அவர்களைக் கண்டித்து மட்டும் விட்டு விடுங்கள். பெரிய தண்டனையைக் கொடுத்து விடாதீர்கள்' என்று நமக்காக திருமாலிடம் கெஞ்சுவாராம். இப்படி, நம் தண்டனைகளைக் குறைத்து விடக்கூடிய மகாலக்ஷ்மி தாயாரின் கருணையை என்னவென்று சொல்வது?
நிலையான செல்வத்தை அளிக்கக்கூடியவள் மகாலக்ஷ்மி தாயார்தான். வறுமையின் பிடியில் நின்று தவிப்பவர்களுக்கு தங்க மழையைப் பொழிய வைத்து அவள் காட்டிய அதிசயத்தை, ஸ்வாமி ஸ்ரீ நிகமாந்த மகா தேசிகனின் 'ஸ்ரீ ஸ்துதியும்', ஆதிசங்கரரின் 'கனகதாரா ஸ்தோத்திரமும்' நமக்கு என்றுமே எடுத்துக்காட்டி கொண்டேதான் இருக்கின்றன அல்லவா?
மகாலக்ஷ்மி தாயாரின் கல்யாண குணங்களைப் பற்றியும், அவரது திருவருள் யார் யாருக்கு எப்படியெல்லாம் கிடைத்திருக்கிறது என்பதைப் பற்றியும் இந்தத் தொடரின் வழியே அனுபவித்து அவளது திருவருளைப் பெறுவோமா?
அயோத்தியில் திருமகள் பொழிந்த தங்க மழையைப் பற்றிய அபூர்வமான கதை ஒன்றை 'ரகு வம்சம்' சொல்கிறது.