திருமண பிரார்த்தனையை நிறைவேற்றித் தரும் ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி!

Valli Devasena Sametha Sri Subramanya Swamy
Valli Devasena Sametha Sri Subramanya Swamy
Published on

முருக பக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தமிழ்நாட்டின் செங்குந்த வம்சத்தை சேர்ந்த ஆன்மிக அன்பர்களால் கேரளாவின் பாலக்காட்டு மாவட்டத்தில் கொடும்பு என்னும் இடத்தில் கட்டப்பட்ட முருகன் கோயிலே கொடும்பு ஸ்ரீ கல்யண சுப்ரமண்ய சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் உள்ள தமிழ் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆனால், இங்கே பூஜை வழிபாடு நடத்துபவர்கள் வழிவழியாக வந்த தமிழ் செங்குந்தர் பூசாரிகள்தான்.

இந்தக் கோயிலையொட்டி, 'சோகநாசினி' என்னும் ஆறு ஓடுகிறது. இந்தத் தீர்த்தத்தில் குளிப்பவர்களின் சோகங்கள் கரைந்து போய்விடும் என்னும் நம்பிக்கை பக்தர்களுக்கு உள்ளது. இந்தக் கோயிலின் முக்கிய தெய்வம் ஸ்ரீ கல்யாண சுப்ரமணிய சுவாமி.  கோயிலின் வட பகுதியில் சிவபெருமான் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இந்தக் கோயில் பழனியில் பாதி என்றும் கேரள பழனி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயில் வந்ததன் பின்னணியில் ஒரு சுவாராசியமான நிகழ்வு இருக்கிறது.

தமிழ் நெசவாளர்களான செங்குந்த முதலியார் வம்சத்தினர் ஒரு சமயம் இங்கே மிகக் கடுமையாக வரி விதிக்கப்பட்டதால் தாங்கள் வசித்து வந்த காஞ்சிபுரத்தை விட்டு வெளியேறி கேரள மாநிலம், பாலக்காட்டில் கொடும்பு என்னும் இடத்தில் குடியேறி நெசவுத் தொழில் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் தாங்கள் நெய்த நூல் பண்டில்களை மாட்டு வண்டியில் ஏற்றி கோயம்புத்தூருக்கு அருகில் இருக்கும் அவிநாசி என்னும் ஊருக்கு விற்பனைக்காகக் கொண்டு செல்வது வழக்கம்.

ஒரு சமயம் அவிநாசியிலிருந்து மாட்டு வண்டியில் திரும்பும்போது அவர்களுக்கு வழியில் ஒரு குரல் கேட்டது, "நானும் வருகிறேன்! நானும் வருகிறேன்!" என்று.   சுற்றுமுற்றும் பார்த்தபோது அங்கு யாரும் காணப்படாததால் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர முடிவு செய்தபோது, வண்டியில் கட்டப்பட்டிருந்த காளை மாடு நகராமல் அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டது. அவர்கள் அதைக் கிளப்ப எவ்வளவு முயற்சி செய்தும் பலிக்கவில்லை. அப்போது திரும்பவும் அந்தக் குரல், "நானும் வருகிறேன்! நானும் வருகிறேன்!" என்று  கேட்டது.  குரல் கேட்ட திசையில் இருந்த புதர்களை விலக்கிப் பார்த்தபோது அங்கே வள்ளி தேவசேனா சமேதராக ஒரு சுப்ரமண்யர் சிலை ஒளி வீசிக்கொண்டிருப்பதை பார்த்து வியந்து போனார்கள்.

Kodumbu Sri Subramania Swamy Temple
Kodumbu Sri Subramania Swamy Temple

"நான் உங்களோடு வருகிறேன். உங்களையெல்லாம் காப்பாற்றவே நான் வந்திருக்கிறேன்!" என்று சிலையிடமிருந்து அசரீரி குரல் வந்தது. அவர்கள் பயபக்தியுடன் அதை எடுத்து தங்கள் மாட்டு வண்டியில் ஏற்றியதும் அதுவரை அமர்ந்திருந்த காளை மாடு நகர்ந்து வண்டியை இழுக்க ஆரம்பித்தது.  கொடும்புவிற்கு வந்ததும் ஏற்கெனவே அங்கேயிருந்த மகாதேவர் கோயிலில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தனர்.

இதையும் படியுங்கள்:
அழிந்துவரும் உயிரினப் பட்டியலில் முதலிடம் பெறும் புனுகுப் பூனைகள்!
Valli Devasena Sametha Sri Subramanya Swamy

முருகனுக்குரிய விசேஷ நாட்கள் அனைத்திலும் சிறப்பான வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தனர். இக்கோயிலில் பிரதானமாக முருகன் சன்னிதி இருக்கிறது.  கல்யாணத்திற்காக பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வதால் இவருக்கு கல்யாண சுப்ரமண்ய சுவாமி என்னும் திருநாமம் ஏற்பட்டது. இங்கே முருகன் சிவனைத் தவிர, அம்பாள் உமா தேவி, ஸ்ரீ பரசுராமர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ பைரவர் ஆகியோருக்கும் சன்னிதிகள் அமைக்கப்பட்டு மிக சிறப்பாக வழிபாடு நடைபெற்று வருகிறது. இங்கே அமைக்கப்பட்டிருக்கும் ராஜகோபுரம் கேரளாவிலேயே இரண்டாவது உயரமான கோபுரமாக விளங்குகிறது.

ஐப்பசி மாதத்தில் கந்த சஷ்டி விழாவும், தை மாதத்தில் தைப்பூசத் திருவிழாவும் இங்கே கோலாகலமாக நடைபெறுகிறது. இங்கே முருகனுடைய  சிலையிலேயே வள்ளி தெய்வானையும் வடிவமைக்கப்பட்டு ஒன்றாக இருப்பதால்,  கணவன் மனைவி ஒற்றுமைக்கும் இங்கே வழிபாடு செய்வது நன்மையளிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள். கேரள மாநிலம் பாலக்காட்டில் இந்தக் கோயில் அமைந்திருந்தாலும் தமிழ் முறைப்படியே பூஜை, வழிபாடுகள் செங்குந்த வம்சத்தை சேர்ந்த பூசாரிகளால் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com