

திருப்பனந்தாளில் உறையும் ஈசனின் பெயர் அருணஜடேஸ்வரர் என்றும் ஜடாதரர் மற்றும் தாலவனேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பாள் அருள்மிகு பெரியநாயகி. இக்கோவிலில் சொக்கநாதர், நர்த்தன வினாயகர், சப்த கன்னியர், அறுபத்தி மூவர், பஞ்சபூத லிங்கங்கள், பைரவர் சூரியன் சந்திரன் மற்றும் குங்கிலியம் கலயனார் உள்ளனர். தீர்த்தம் பிரம்மதீர்த்தம், ஐராவததீர்த்தம் மற்றும் தாடகை தீர்த்தம் ஆகும். தலவிருட்சம் பனை.
ஆலய வரலாறு
இத்தலத்திற்கு தாடகையீஸ்வரம் என்று பெயர். இத்தலத்தில் தாடகை எனும் பெண் புத்திரப்பேறு வேண்டி பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருநாள் அவள் இறைவனுக்கு மாலை சாற்றும்போது மேலாடை நெகிழ அதை இருமுழங்கைகளாலும் பற்றிக்கொண்டு மாலைசாத்த முடியாமல் வருந்த அவளுக்கு இரங்கி பெருமான் திருமுடியை சாய்த்து மாலையை ஏற்றார். அன்று முதல் லிங்கம் சாய்ந்த நிலையில் இருந்தது.
அந்த ஊர் மன்னன் லிங்கத்தை நிமிர்த்த யானையைக் கொண்டு முயற்சித்தும் பயனில்லை. அவர் குங்கிலிய நாயனாரிடம் வேண்ட அவர் தன் கழுத்தில் கயிறு கட்டி இழுக்க சிவலிங்கம் நேரானது. இவ்வூரில் திருப்பனந்தாள் காசி மடம் உள்ளது.
முன் காலத்தில் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே யார் பெரியவர் என்ற போட்டி எழுந்தது. அப்போது சிவபெருமான் என் அடி முடியை யார் அறிகிறாரோ அவரே பெரியவர் என்று கூறினார். ஈசனின் அடியையும் முடியையும் தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் புறப்பட்டனர். இருவராலும் முடியையும் அடியையும் காண முடியவில்லை. லிங்கோத்பவராக திருவண்ணாமலையில் தன் அடிமுடி தெரியாவண்ணம் சிவராத்திரிப் பொழுதில் நள்ளிரவு 12மணிக்கு ஜோதி வடிவில் சிவபெருமான் காட்சியளித்தார். அதுவே லிங்கோத்பவ காலம் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் இந்த லிங்கோத்பவகாலத்தில் சிவனை வழிபட வேண்டும்.
பிரம்மாவாலும் மகாவிஷ்ணு வாலும் ஈசனின் அடி முடியைக் காணமுடியவில்லை. மகாவிஷ்ணு தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். ஆனால் பிரம்மாவோ தாழம்பூவை பொய் சாட்சி கூற வைத்து பொய்யுரைத்தார். இதனால் கோபமுற்ற ஈசன் பிரம்மதேவனுக்கு பூலோகத்தில் கோவில்கள் இல்லாமல் போகட்டும் என்றும் தாழம்பூ சிவ பூஜைக்கு அருகதை இல்லாமல் போகட்டும் என சபித்தார். பிரம்மா சாப விமோசனம் கேட்க பொய் சொன்ன பாபம் ஒழிய திருப்பனந்தாள் சென்று பொய்கை தீர்த்தத்தில் நீராடி வழிபட வேண்டும் என்று கூற, பிரம்மாவும் அவ்வாறே செய்ய பொய் கூறிய பாபம் அகன்றது.
அகமகிழ்ந்து பிரம்மா இத்தலத்தில் அருண ஜடேஸ்வரருக்கு சித்திரை மாதம் பெருவிழா நடத்தி இன்புற்றார். ஒவ்வொரு வருடமும் பிரம்மனே இந்த விழாவை நடத்துவதாக ஐதீகம். பிரம்மா நீராடிய பொய்கை தீர்த்தம் தற்போது பிரம்மதீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆவணி மாத அமாவாசையில் பிரம்ம சாப நிவர்த்தி தீர்த்தவாரி பொய்கை குளத்தில் நடக்கிறது. இத்தலத்தில் தாழம்பூவுக்கும் ஈசன் சாபவிமோசனம் தந்தார்.
சிவராத்திரியில் மூன்றாம் ஜாம பூஜையில் மட்டுமே ஏற்றுக் கொள்வதாக சிவபெருமான் தாழம்பூவுக்கு விமோசனம் அளித்தார். இத்தலத்து அம்பாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இங்கு சந்திர பகவான் ஈசனை துதித்து தன் தோஷங்களை போக்கிக்கொண்டார். இங்கு வழிபட சந்திர தோஷங்கள் நீங்கும்.
இங்குள்ள தலவிருட்சத்தின் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தை அடுத்துள்ள கிணறு நாககன்னிகைபிலம் எனப்படும். இதன் வழியாக நாக கன்னிகைகள் வந்து வழிபடுவதாக கூறப்படுகிறது இவ்வூரைச்சுற்றிலும் பனைமரங்கள் நிறைந்துள்ளதாலா திருப்பனந்தாள் என்று அழைக்கப்படுகிறது.
குங்கிலியக்கலயனார் இத்தலத்தில் இருந்த காலத்தில் அவர் மகன் இறந்தான். மகனை எடுத்துக் கொண்டு ஈமக்கடன்களை முடிக்கச் சென்றார். வழியில் உள்ள வினாயகர் அசரீரியாக அவ்வுடலை நாககன்னிகை தீர்த்தத்தில் நனைக்கக் கூற அவரும் அப்படியே செய்ய மகன் உயிர் பெற்றான். இவ்வினாயகர் பிணமீட்ட விநாயகர் என்ற திருநாமத்துடன் திருவீதியின் வாயு மூலையில் எழுந்தருளியுள்ளார்.
இக்கோவிலை கட்டியவன் தக்கன் தரணி என்பவன். கருங்கல்லால் இக்கோவிலை அமைத்தான் இரண்டாம் ராச ராச சோழமன்னன் கோவில் திருப்பணிகள் செய்ததாகத் தெரிகிறது. திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.
இக்கட்டுரையை வாசிப்பதன் மூலம் திருப்பனந்தாள் திருத்தலத்தின் மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்களை நீங்கள் முழுமையாக உணர்வதோடு, சந்திர தோஷங்கள் நீங்கவும் கல்வி-கேள்விகளில் சிறந்து விளங்கவும் எந்தக் காலத்தில், எப்படி இறைவனை வழிபட வேண்டும் என்ற தெளிவான ஆன்மீக வழிகாட்டலையும், மன அமைதியையும் அடைவீர்கள்.