
நந்தனார் சிறந்த சிவபக்தர். சிதம்பரத்தில் வீற்றிருக்கும் நடராஜ பெருமானே தரிசிக்க மிகுந்த ஆவல் கொண்டிருந்தார். ஆனால் கூலி வேலை செய்து பிழைக்கும் அவரால் உடனடியாக சிதம்பரம் செல்ல முடியவில்லை. அவர் வேலை செய்யும் இடத்திலும் அனுமதி கிடைக்கவில்லை. நாளை போகலாம் நாளை போகலாம் என்றே இருந்தார். அதனால், அவருக்கு திருநாளை போவர் என்று கூட பெயர் உண்டு.
ஒரு நாள் நந்தனார் சிதம்பரம் செல்வதற்கு முதலாளியின் அனுமதி கிடைத்தது அதை அடுத்து அவர் சிதம்பரம் புறப்பட்டார் வழியில் 'திருப்புன்கூர்' திருத்தலத்திற்கு வந்தார். கோவிலில் உள்ளே செல்ல முடியாமல் சிலர் தடுத்தார்கள் ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை கருவறைக்கு முன்பாக இருந்த நந்தி மூலவரையும் மறைத்துக் கொண்டிருந்தது நந்தனாருக்கு இறைவனை தரிசிக்க முடியவில்லை என மன வருத்தம் ஏற்பட்டது.
என்ன செய்வேன் இறைவா என்ற சிவனை மனமுருக வேண்டினார். தன் மனவலியை சொல்லி இறைவனை பாடினார். நந்தனாருக்காக கருவறை முன்பிருந்த துவாரபாலகர்களும் இறைவனிடம் சுவாமி நந்தனார் வந்திருக்கிறார் என்றனர். நந்தனாரின் பக்தியை மெச்சிய சிவபெருமான் தனக்கு முன்பாக இருந்த நந்தியை சற்று விலகி இருக்கும்படி சொன்னார். நந்தியும் அதன்படியே விலகிக் கொண்டது. இப்போது இறைவனின் திருக்காட்சி நந்தனாருக்கு நன்றாக தெரிந்தது. இப்படி பக்தனுக்காக நந்தியை விலகி இருக்கச் சொன்ன இறைவன் வீற்றிருக்கும் சிறப்பு வாய்ந்த தலம் இதுவாகும். இப்போதும் இந்த ஆலயம் சென்றால் இறைவனின் கருவறைக்கு நேராக இல்லாமல் சற்று ஒதுங்கி இருக்கும் நந்தியை நாமும் தரிசிக்கலாம்.
எல்லா கோவில்களிலும் நந்திக்கு நாக்கு வெளியே தெரிந்த படி இருக்கும். ஆனால், இங்கிருக்கும் நந்திக்கு நாக்கு உள்ளமைந்தபடி இருக்கும். துவாரபாலகர்கள் எல்லா கோவில்களும் நேராக இருப்பார்கள். ஆனால் இங்கு தலை சாய்த்து காணப்படுவார்கள். இறைவனிடம் நந்தனார் என்ற பக்தன் வந்துள்ளார் என்று கூறுவது போல் அமைந்த தோற்றம் இது என்று சொல்லப்படுகிறது.
இந்த தலத்தில் முதலில் தோன்றியது புற்று வடிவமான லிங்கமே. அதன்பிறகே வந்தது நந்தி இவை இரண்டும் தான் இந்த ஆலயத்திற்கு பெருமையும் புகழும் சேர்த்தன.
இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் புற்று வடிவமாக மூலவர் வீற்றிருக்கிறார் இறைவனின் திருநாமம் சிவலோகநாதர் என்பதாகும் புற்று வடிவமாய் அமைந்துள்ள சிவலோகநாதருக்கு வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் இரவு 8.30 மணியளவில் புனுகு சட்டம் சாத்துகிறார்கள். சுவாமி மீது திருக்குவளை சாத்தி பக்தர்கள் பூஜைகள் நடத்துகிறார்கள்.
நாக தோஷத்தினால் நீண்ட நாள் கல்யாணம் ஆகாமல் இருப்பவர்கள் தங்கத்தில் நாகத்தகடு செய்து உண்டியலில் போடுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணம் தடை நீங்கி உடனே கல்யாணம் நடக்கிறது. நாக தோஷம், பூர்வ ஜென்ம பாவ தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டால் அவர்களின் தோஷம் நிவர்த்தியாகும் என்பது நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் குளம் வெட்டிய பிள்ளையார் மிகவும் பிரசித்தம் பெற்றவர். நந்தனார் இத்தல இறைவனை தரிசிக்கும் முன்பாக நீராடுவதற்காக ஒரே இரவில் பூதங்களைக் கொண்டு இங்கு திருக்குளம் அமைத்தார் விநாயகர். இதனால் இத்தல விநாயகர் குளம் வெட்டி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார் இந்த ஆலயத்தின் தல விருட்சம் புங்க மரம்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது 'திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில்'.