63 நாயன்மார்கள் பற்றி சுந்தரர் பாடிய அதிசயப் பதிகம்! பெரிய புராணம் பிறந்த கதை...

Lord shiva and nayanmars
Thiruthondar thogai
Published on
deepam strip
deepam strip

சைவ சமயத்தைப் போற்றி வளர்த்தவர்களில் 63 நாயன்மார்களுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த அறுபத்துமூவரையும் ஒரே பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடிவிட முடியுமா? முடியும். அந்தப் பதிகத்தை நாம் தினமும் சொன்னால் எல்லா சிவனடியார்களையும் வணங்கிய பலன் கிடைக்கும்.

சமயக்குரவர் நால்வரில் ஒருவரான சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடிய திருத்தொண்டத் தொகையில் சிவனடியார்களை, நாயன்மார்களை வரிசையாகக் குறிப்பிட்டுள்ளார். முதலில், இந்தப் பதிகத்தை சுந்தரர் பாடக் காரணமான நிகழ்வைத் தெரிந்து கொள்ளலாம்.

சுந்தரர் ஒரு முறை திருவாரூர் ஆலயத்திற்கு வந்தார். சிவபெருமானின் அணுக்கத் தொண்டர் என்பதால் சிவனைப் பற்றிய சிந்தனையிலேயே இருந்தார். அதனால் அவர் கோயிலுக்குள் செல்லும்போது, அங்குள்ள தேவாசிரியன் மண்டபத்தில் கூடியிருந்த சிவனடியார்களைக் கவனிக்காமல் சென்றார். இதனால் சிவனடியார்கள் சற்று கோபமடைந்தனர்.

சுந்தரர் மனம் வருந்தி, சிவபெருமானிடம் தன் வேதனையைத் தெரிவித்தார். சிவபெருமான், தன் அடியார்களின் பெருமைகளை அசரீரியாக எடுத்துரைத்தார்.

“பெருமையால் தம்மை ஒப்பார்

பேணலால் எம்மைப் பெற்றார்

ஒருமையால் உலகை வெல்வார்

ஊனம் மேல் ஒன்றும் இல்லார்

அருமையாம் நிலையில் நின்றார்

அன்பினால் இன்பம் ஆர்வார்

இருமையும் கடந்து நின்றார்

இவரை நீ அடைவாய்”

என்று அடியார்களின் பெருமையை இறைவன் எடுத்துரைக்கக் கேட்ட சுந்தரர் மனம் மகிழ்ந்தார்.

“அடியார் பெருமைகளை விரித்து நீ பாடுக,” என்று சிவபெருமான் ஆணையிட்டு, 'தில்லைவாழ் அந்தணர்கள்' என்று அடி எடுத்துக் கொடுக்க, சுந்தரர் பதிகம் பாடினார். இது ‘திருத்தொண்டத் தொகை’ எனப்படுகிறது.

திருத்தொண்டத் தொகை 11 பாடல்களால் ஆனது. இதில் காரைக்கால் அம்மையார், மங்கையர்க்கரசியார் ஆகிய இரு பெண் அடியார்கள், 58 ஆண் அடியார்கள் பற்றிப் பாடியுள்ளார். 60 தனியடியார்களும், ஒன்பது தொகையடியார்களும் குறிப்பிடப்பட்டுள்ளார்கள். பதிகத்தைப் பாடிய சுந்தரர், அவரின் தந்தை சடையனார், தாயார் இசைஞானியார் ஆகிய மூவரையும் 60 தனியடியார்களுடன் சேர்த்து மொத்தம் 63 நாயன்மார்கள் என்று கொண்டாடப்படுகிறார்கள்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஒரு குழுவாக உள்ளவர்களைத் தொகுத்துச் சுட்டுவதை 'தொகை அடியார்கள்' என்பர். இவர், இன்னார் என்று குறிப்பிட்டுச் சொல்ல இயலாத பலரையும், தன் காலத்துக்கு முன்பு வாழ்ந்தவர்களையும், பின்னால் வர இருப்பவர்களையும் போற்றும் நோக்கில், தொகையடியார்களை சுந்தரர் வணங்கி இணைத்துள்ளார்.

திருத்தொண்டத் தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒன்பது தொகை அடியார்கள்:

1. தில்லைவாழ் அந்தணர்கள்

2. பொய்யடிமை இல்லாத புலவர்

3. பத்தராய்ப் பணிவார்கள்

4. பரமனையே பாடுவார்

5. சித்தத்தை சிவன்பால் வைத்தார்

6. திருவாரூர் பிறந்தார்

7. முப்போதும் திருமேனி தீண்டுவார்

8. முழு நீரு பூசிய முனிவர்

9. அப்பாலும் அடிச்சார்ந்தார்

63 நாயன்மார்களுடன் 9 தொகையடியார்களையும் சேர்த்து மொத்தம் 72 சிவனடியார்களைப் போற்றி இந்த திருத்தொண்டத் தொகையைப் பாடினார் சுந்தரர்.

“தில்லைவாழ் அந்தணர்தம்

அடியார்க்கும் அடியேன்

திருநீல கண்டத்துக்

குயவனார்க் கடியேன்

இல்லையே என்னாத

இயர்பகைக்கும் அடியேன்

இளையான்றன் குடிமாறன்

அடியார்க்கும் அடியேன்

வெல்லுமா மிகவல்ல

மெய்ப்பொருளுக் கடியேன்

விரிபொழில்சூழ் குன்றையார்

விறன்மிண்டர்க் கடியேன்

அல்லிமென் முல்லையந்தார்

அமர்நீதிக் கடியேன்

ஆரூரன் ஆரூரில்

அம்மானுக் காளே.”

இந்தப் பதிகத்தை மூலமாகக் கொண்டுதான் சேக்கிழார் பெரிய புராணத்தை இயற்றினார். இரண்டாம் குலோத்துங்க சோழ மன்னன் கேளிக்கைகளில் மனதினைச் செலுத்தியதால், அவரின் அமைச்சராக இருந்த சேக்கிழார் வருத்தம் கொண்டார். இம்மைக்கும் மறுமைக்கும் துணையாக இருக்கக்கூடிய சிவபெருமானின் தொண்டர்களின் வரலாற்றை மன்னனுக்குச் சொன்னார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய திருத்தொண்டத்தொகையை சோழ மன்னனுக்கு எடுத்துரைத்தார். அத்துடன் நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியையும் விளக்கினார். இவற்றைக் கேட்ட மன்னன் மனம் திருந்தி, நாயன்மார்களின் வரலாற்றை விரிவாகப் படைக்கும்படி சேக்கிழாரிடம் வேண்டினான்.

இதையும் படியுங்கள்:
ஆன்மீகக் கதை: கேட்டது வரம்.. கிடைத்தது மரணம்!
Lord shiva and nayanmars

எனவே சேக்கிழார், திருத்தொண்டத் தொகையில் உள்ள தொண்டர்களின் விவரங்கள் மற்றும் பல்வேறு கல்வெட்டுகளில் உள்ள தகவல்கள், செவிவழிச் செய்திகள் ஆகியவற்றைத் தொகுத்து பெரிய புராணத்தை இயற்றினார். சிவாலயங்களில், பிரகாரங்களில் அருளும் நாயன்மார்கள், திருத்தொண்டத் தொகையில் உள்ள அதே வரிசையில் இருப்பதை இப்போதும் காணலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com