
பிரம்மம் அசைவில்லாததாக இருக்கிறது. அந்த பிரம்மத்தின் காரியங்களைச் செய்யும் சக்தியே பராசக்தி. அம்பிகையே பரமாத்மா. அனைவருக்கும் சக்தி தருபவள், தன்னை நம்பி வருபவர்களை காக்கவே காளி அவதாரம் எடுக்கிறாள். காளி என்றாலே பயம் உண்டாகும். துஷ்ட நிக்ரகம் காரணமாகவே அம்பிகை எடுத்த உருவம் காளி.
திருவக்கரையில் அம்பிகை அம்ருதேஸ்வரி, வடிவாம்பிகை என்ற பெயர்களுடன் காட்சி தந்தாலும் அவளின் வக்கிரகாளி ரூபமே பிரசித்தம். குண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்ராசுரன் என்ற அசுரனை அழிக்க காளி அவதாரம் செய்து போர் புரிந்து அவனை வெற்றி பெற்றாள். அதனால் ஆணவம் அடைந்த அவன் மக்களை துன்புறுத்தினான். அவனை அழிக்க மகாவிஷ்ணுவை சிவபெருமான் அனுப்புகிறார். விஷ்ணுவும் அவனை அழிக்கிறார்.
அவனின் தங்கை துன்முகி அவனைப்போலவே கொடூர குணம் நிறைந்தவள். இவள் பல கொடுமைகள் செய்ய, சிவன், பார்வதி தேவியை அனுப்பி அழிக்கப் சொல்கிறார். கயிலையில் இருந்து துன்முகியை அழிக்க காளியாக உருவெடுக்கிறாள். அப்போது துன்முகி நிறைமாத கர்ப்பிணி. 'அவளை அழிக்கலாம். ஆனால் அந்த சிசு என்ன பாவம் செய்தது' என நினைத்து பார்வதி அன்னை குழந்தையை தன் காதில் பத்திரமாக குண்டலமாக மாட்டி, துன்முகியை வதம் செய்தார்.
வராகநதி எனப்படும் சங்கராபரணி ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக உள்ளது இக்கோவில். இங்கு மூலவர் மும்முடி லிங்கமாக காட்சி தருகிறார். வக்கிராசுரன் பூஜித்த லிங்கம் இது. இந்த இடம் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலங்களில் வெப்பமுடன் இருக்கும். ஆதிசங்கரர் இங்கு வந்து அன்னையை சாந்தப்படுத்தி இடது பாதத்தில் சக்கரம் பிரதிஷ்டை செய்திருக்கிறார். இதை வக்ர சாந்தி திருத்தலம் என்றும் அழைக்கிறார்கள்.
ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தில் நுழைவு வாயிலுக்கருகே பிரமிப்பூட்டும் திருக்கோலத்துடன் விஸ்வரூபமாய் காளி காட்சி தருகிறாள்.
தலைக்குப் பின்புறம் சுடர் விடும் தீக்கங்குகள், மண்டை ஓட்டுக் கிரீடம், இடது காதில் சிறுவனின் குண்டலம், வலக்கையில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் என்று அசுரர்களின் தலைகளையே மாலையாக அணிந்திருக்கிறார்.
இது ராகு கேதுவுக்கு அதிபதி என்பதால் வலதுபுறம் 5 சுற்று, இடதுபுறம் 5 சுற்று என்ற கணக்கில் சன்னதியை சுற்ற வேண்டும். இங்கு எல்லாமே வக்ரமாக அமைந்துள்ளது. ராஜகோபுரம், கொடிமரம், நந்தி ஆகியவை ஒரே நேர் கோட்டில் இல்லாமல் விலகி வக்ரநிலையில் காட்சி தருகிறது. இவளை தரிசிக்க, ஜாதக ரீதியாகவும் வக்ரங்கள், கர்ம வினைகள் நீங்குகின்றன.
காளிக்கு எதிரில் உள்ள தீப லட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சை தீபம் ஏற்ற, திருமணம் கைகூடும் என்று நம்பப்படுகிறது. பௌர்ணமி இரவு பன்னிரண்டு மணிக்கும், அமாவாசை பகல் 12 மணிக்கும் வக்கிர காளி அம்மனுக்கு ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. கோவில் ராஜகோபுரம் சோழ ராஜன் கண்டராதித்யனின் மனைவி செம்பியன் மாதேவியால் திருப்பணி செய்யப்பட்டது.