எவ்வுள் படுப்பது என்று கேட்ட திருமால்: திருவள்ளூர் வீரராகவர் கோவில் உருவான ஆச்சரிய வரலாறு!

Veeraraghava Perumal - திருவள்ளூர் வீரராகவர்
Veeraraghava Perumal - திருவள்ளூர் வீரராகவர்AI Image
Updated on

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூரில் அருளும் வீரராகவப் பெருமாள் அங்கே எப்படி வந்தார்? திருவள்ளூர் என்ற பெயர் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?

முன்னொரு காலத்தில் புருபுண்யர் என்ற முனிவர் தன் மனைவி சத்தியவதியுடன் வசித்துவந்தார். அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாததால் வருத்தமடைந்தனர். எனவே மக்கட்பேறு வேண்டி புத்திர காமேஷ்டி யாகம் (சாலியாகம்) செய்தார் முனிவர்.

மிகுந்த பக்தியுடன் அந்த யாகத்தைச் செய்து முடித்தபோது, ஹோமத்தின் ஜுவாலையில் இருந்து திருமால் தோன்றினார். முனிவரின் ஹோமத்தால் மகிழ்ந்ததாகச் சொல்லி, வேண்டும் வரம் கேட்கும்படி சொன்னார். முனிவரும் தனக்குப் புத்திர பாக்கியம் அருளினால் மகிழ்வோம் என்று கூறினார். திருமாலும் அவருக்குப் புத்திர பாக்கியம் அளித்து, சாலியாகம் செய்ததால் பிறக்கும் குழந்தைக்கு யாகத்தின் பெயரையே சூட்டி வளர்க்குமாறு அருள்கூறி மறைந்தார்.

திருமாலின் திருவருளால் அந்தத் தம்பதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இறைவனின் ஆணைப்படி குழந்தைக்கு சாலிஹோத்திரன் என்று பெயரிட்டு வளர்த்துவந்தனர். சாலிஹோத்திரர் வளரும்போதே நற்குணங்களுடனும் திருமால் மீது மிகுந்த பக்தியுடனும் வளர்ந்தார்.

பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்றவர், திருவள்ளூர் வந்து சேர்ந்தபோது, அங்கிருந்த ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் பிரம்மா மற்றும் தேவர்கள், முனிவர்கள் அனைவரும் நீராடுவதைக் கண்டார். அவருக்கும் அங்கு நீராடி தவம் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

எனவே சாலிஹோத்திரரும் அங்கு நீராடி, திருமாலை எண்ணி ஒரு ஆண்டு கடுமையான தவம் மேற்கொண்டார். ஒரு ஆண்டு கழிந்ததும் ஹிருதாபநாசினி தீர்த்தத்தில் நீராடி, இறைவனுக்கு பூஜை செய்தார். அரிசிமாவில் பிரசாதம் தயார் செய்து அதை மூன்று பாகங்களாகப் பிரித்தார். முதல் பகுதி இறைவனுக்கும், இரண்டாவது பகுதி அடியார்கள் யாராவது ஒருவருக்கும், மூன்றாவது பகுதி தனக்குமாக வைத்துக்கொண்டார்.

சாலிஹோத்திரர் பூஜை செய்து கொண்டிருக்கும்போது பெருமாள் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்தார். முனிவர் பூஜை முடித்து இறைவனுக்கு பிரசாதம் நிவேதனம் செய்தார்.

அதிதிக்குப் படைக்க வைத்திருந்த உணவை யாருக்காவது கொடுக்க வேண்டுமே என்று தேடியபோது, முதியவர் வேடத்தில் இருந்த ஸ்ரீமந் நாராயணன் கண்ணில்பட்டார்.

சாலிஹோத்திரர் அவரைக் கண்டதும் உபசரித்து, அவருக்கு ஒரு பங்கு உணவைத் தந்தார். ஆனால் முதியவர் வேடத்தில் வந்த திருமால் விடுவதாக இல்லை. நான்கைந்து நாட்களாக எதுவும் உண்ணாமல் மிகவும் பசியோடு இருப்பதாகவும், சாலிஹோத்திரர் படைத்த உணவு போதவில்லை என்றும் சொன்னார்.

Veeraraghava Perumal - திருவள்ளூர் வீரராகவர்
Veeraraghava Perumal - திருவள்ளூர் வீரராகவர்AI Image

வந்த விருந்தினரை நிறைவாக உபசரிக்க வேண்டுமே என்பதால், முனிவரும் தனக்காக வைத்திருந்த ஒரு ஒரு பகுதி உணவை அந்த முதியவருக்குப் படைத்தார். அதை உண்டதும் முதியவரும் திருப்தி அடைந்து அங்கிருந்து மறைந்தார். ஒரு வருடத் தவத்தை முடித்து உணவு உண்ண இயலாததால், மீண்டும் ஒரு வருட காலத்திற்கு தன் தவத்தைத் தொடர்ந்தார் முனிவர்.

ஒரு வருடத் தவம் முடிந்து மீண்டும் ஹிருதாபநாசினியில் நீராடி, பூஜை செய்யும்போது வழக்கம்போல் முதல் பகுதியை இறைவனுக்குப் படைத்துவிட்டு இரண்டாவது பகுதியை அதிதிக்கு வழங்குவதற்காக எடுத்து வந்தபோது, திருமாலே முதியவர் வேடத்தில் வந்து பிரசாதத்தை வாங்கி உண்டார்.

“நான் நன்றாக சாப்பிட்டதால் படுத்து ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும். எவ்வுள் படுப்பது?” என்று கேட்டார்.

சாலிஹோத்திரர் தன் பர்ண சாலையைக் காட்டி, “இந்த இடத்திலேயே நீங்கள் சயனிக்கலாம்,” என்றார்.

முதியவரும் தெற்கே தலை வைத்து அங்கே படுத்துக்கொண்டார். அப்போது தேவர்கள் மலர் மாரி பொழிய, மங்கல இசை வாத்தியங்கள் முழங்க, அங்கே சயனிருந்த முதியவர் நாராயணனாகத் தோன்றி சாலிஹோத்திரருக்கு அருளினார். சாலிஹோத்திர முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அங்கேயே தங்கிவிட்டார். திருமாலே படுக்க ‘எவ்வுள்’ என்று கேட்டதால் இது ‘திருஎவ்வுள்’ என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் திருவள்ளூர் என்று மாறியதாக வரலாறு சொல்கிறது. இறைவனுக்கும் ‘எவ்வுள் கிடந்தான்’ என்ற திருநாமம் இருந்தது.

இதையும் படியுங்கள்:
சிவப்பு குங்குமம் அறிவோம்... அதென்ன பச்சை குங்குமம்? அதிர்ஷ்டம் தரும் குபேர ரகசியம்!
Veeraraghava Perumal - திருவள்ளூர் வீரராகவர்

இத்தலத்தில் இறைவனுக்கு கிங்கிருஹேசன் என்ற திருப்பெயர்தான் முன்னர் இருந்தது. அவர் எப்படி வீரராகவர் ஆனார் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.

தர்மசேனர் என்ற அரசருக்கு மகளாக ஸ்ரீதேவித் தாயார் பிறந்தார். வசுமதி என்ற பெயரில் இந்த மகளை போற்றி வளர்த்தார் அரசர். மகள் திருமண வயது அடைந்த நேரத்தில், திருமால் வீரராகவர் என்ற பெயரில் வேட்டைக்குச் சென்று தாயாரை சந்தித்து மணமுடித்துக் கொண்டார்.

அதன் பிறகுதான் இறைவனுக்கு வீரராகவப் பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவரை இவர் ‘கிங்கிருஹேசன்’ என்று அழைக்கப்பட்டு வந்தார். தாயாரை மணந்துகொண்ட பிறகு வீரராகவர் என்ற திருநாமம் ஏற்பட்டது.

திருவள்ளூர் பெயர் எப்படி வந்தது என்று தெரிந்து கொண்டீர்களா. தீராத நோய்களைத் தீர்க்கும் வீரராகவர் என்றுதான் இப்போதும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இக்கட்டுரையின் மூலம் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் திருவள்ளூர் திருத்தலத்தின் வரலாற்றுப் பெருமைகளை முழுமையாக உணர்ந்து கொள்வதோடு, தீராத பிணிகளையும் துயரங்களையும் தீர்க்கும் வீரராகவப் பெருமாளின் திருவருளைப் பெற்று, வாழ்வில் மன அமைதியையும் சகல சௌபாக்கியங்களையும் அடையும் உன்னத வழியைப் பெறலாம்.

சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் ரயில் தடத்தில் திருவள்ளூர் ரயில் நிலையம் அமைந்துள்ளது. அங்கிருந்து 5 கி.மீ தொலைவில் கோவில் உள்ளது.

logo
Kalki Online
kalkionline.com