அரம் நாகம் வழிபட்ட திருவட்டத்துறை அரத்துறைநாதர்!

Thiruvatthura Arathuranathar...
Anmiga katturaigal
Published on

ல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம்.

திருஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துச்சிவிகை, முத்துக்குடை, பொற்சின்னங்கள் அருளிய தலம், மூவரால் பாடல் பெற்ற நடுநாட்டின் முதலாவது திருத்தலம், மகாவிஷ்ணு, ஆதிசேஷன், வான்மீகி முனிவர், செவ்வாய், சனி பகவான், ஜனக மன்னர் முதலானவர்கள் வழிபட்டுப் பேறுபெற்ற கோவில், சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பெயரில் லிங்க மூர்த்தங்கள் அமைந்த தலம், நீவா நதிக்கரையோரம் அமைந்த தலம் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாகத் திகழ்வது, திருநெல்வாயில் அரத்துறை எனும் திருவட்டத்துறை திருத்தலம்.

ஆற்றங்கரையோரம் அமைந்த தலம் என்பதாலும், அரம் எனும் நாகம் வழிபட்டதாலும், அரத்துறை என வழங்கப்படுகிறது. இத்திருக்கோவிலின் அருகே ஓடும் வெள்ளாறு நதியில், பிரளய காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது இறைவனின் ஆணைக்கிணங்க, நந்திதேவர் ஆற்றினை திரும்பிப்பார்க்க, வெள்ளத்தின் வேகம் கட்டுப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் ஐதீகமாகவே இந்த ஆலயத்தில் அமைந்திருக்கும் நந்தி சிலை, ஆற்றின் திசைநோக்கி பார்க்கும் விதமாக அமைந்துள்ளது.

இதேபோல், இப்பகுதியில் சப்தரிஷிகள் ஏழு துறைகளில் தவம் இயற்றினர். அவை ஆதித்துறை, திருவாலந்துறை, திருமாந்துறை, திருஆடுதுறை, திருவதிட்டத்துறை, திருநெல்வாயில் அரத்துறை என்னும் திருவட்டத்துறை, திருச்சந்துறை. இந்த ஏழு துறைகளில் அரத்துறைநாதர் ஆலயம் ஆறாவது துறையாக அமைந்துள்ளது.

திட்டக்குடியில் ஓடிய வெள்ளாற்றை, திருஞானசம்பந்தர் இத்தலம் நோக்கி ‘நீ வா’ என்று அழைக்க, வெள்ளாறு, திட்டக்குடியில் இருந்து அருகில் வந்ததாக தலவரலாறு சொல்கிறது. இதனால் இந்நதி ‘நீவா நதி’ என்று பெயர் பெற்றது.

இத்தலத்தை, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் என மூவரும் பாடி மகிழ்ந்துள்ளனர். இது தவிர, சேக்கிழாரின் பெரியபுராணம், வள்ளலாரின் திருவருட்பாவிலும் இத்தலம் குறித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

தீர்த்தபுரீஸ்வரர்

மூலவர் திருப்பெயர் தீர்த்தபுரீஸ்வரர். இவரே ஆனந்தீஸ்வரர், அரத்துறைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவன் கிழக்கு முகமாய் வட்ட வடிவ ஆவுடையாரில் ஒளிவீசும் திருமுகத்துடன் காட்சி அளிக்கின்றார். திருவட்டத்துறை உடைய மகாதேவர், திருவட்டத்துறை மகாவேதர், திருவட்டத்துறை உடைய நாயணார் என கல்வெட்டுகளில் இறைவனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானுக்கு உகந்த மலர் எது தெரியுமா?
Thiruvatthura Arathuranathar...

அன்னை திரிபுரசுந்தரிக்கு, ஆனந்தநாயகி, அரத்துறை நாயகி என்ற திருப்பெயரும் உண்டு. அன்னை அரத்துறை நாயகி, மேல் இரு கரங்களில் பாசம், அங்குசம் தாங்கியும், கீழ் இருகரங்களில், அபய வரத முத்திரை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.

மகம் வாசல்

இக்கோவிலில் கருவறைக்கு இடதுபுறம் மகம் வாசல் அமைந்துள்ளது. கணவனை இழந்த பெண்கள், ஓராண்டு முடிந்த பிறகு, இத்தல ஆற்றிற்கு சென்று குளித்துவிட்டு, மகம் வாசல் வழியே ஆலயத்திற்குள் சென்று இறைவனை தரிசிப்பார்கள். பின்னர் அந்த வாசல் வழியாகவே மீண்டும் வெளியில் செல்வது ஐதீகமாக உள்ளது. இப்படிச் செய்வதால், இறந்த தன்னுடைய கணவர் நற்கதி பெறுவார் என்று அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com