ஆன்மீகக் கதை: பிறவிப் பிணி நீங்க ஒரு துளி பிரசாதம் செய்த அதிசயம்!

Ramanujar childhood
Ramanujarcredit AI Image
Published on
Deepam
Deepam stripe

சிறுவயதில் ராமானுஜரின் குருவாக இருந்தவர் யாதவப் பிரகாசர். இவர் ஒரு நாள் தன்னுடைய பல்லக்கில் ஒரு நாட்டின் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அந்தப் பல்லக்கை ராமானுஜர் உட்பட அவருடைய சீடர்கள் தூக்கிக் கொண்டு சென்றார்கள்.

யாதவப் பிரகாசர் தனது நாட்டின் எல்லைக்குள் வந்திருப்பதை அறிந்த அவ்வரசர், அவரை வரவேற்று வணங்கினார். தன்னுடைய மகளை ஒரு 'பிரம்ம ராட்சசன்' என்ற பேய் பிடித்திருப்பதாகவும், அந்தப் பேயை ஓட்டித் தனது மகளைக் காப்பாற்றுமாறு அவரிடம் வேண்டிக்கொண்டார்.

யாதவப் பிரகாசர் அரசரின் வேண்டுகோளை ஏற்று, அரசனின் மாளிகைக்குச் சென்றார். அங்கு அவரது மகளைப் பார்த்த யாதவப் பிரகாசர், அவளுடைய உடம்பிற்குள் இருந்த பிரம்ம ராட்சசனைப் பார்த்து, "இந்த உடம்பை விட்டு ஓடிப்போ!" என்றார்.

யாதவப் பிரகாசரைப் பார்த்துச் சிரித்த பிரம்ம ராட்சசன், "நீ சொன்னால் நான் போக வேண்டுமா? நான் யார் தெரியுமா? நீ யார் தெரியுமா?" என்று பேச ஆரம்பித்தது.

"நீ சென்ற ஜென்மத்தில் ஒரு உடும்பாகப் பிறந்து ஒரு கோயிலில் கிடந்தாய். கோயிலுக்கு வருபவர்கள் அனைவருக்கும் பிரசாதம் கொடுப்பார்கள்; அந்தப் பிரசாதத்தை அவர்கள் சாப்பிடுவார்கள். அதில் கீழே சிதறும் பிரசாதத்தைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தவன் நீ. அப்படி நீ வாழ்நாள் முழுவதும் கோயில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்ததால், பெரும் புண்ணியத்தைப் பெற்றாய். அந்தப் புண்ணியத்தால் கிடைத்த ஞானத்தை வைத்து, இந்த ஜென்மத்தில் மனிதப் பிறப்பு எடுத்து, வேதம் கற்றுக்கொண்டு பிராமணனாக, குருவாக நிற்கிறாய்."

தொடர்ந்து அந்தப் பிரம்ம ராட்சசன் கூறியது:

"நான் யார் தெரியுமா? நான் அந்தணனாகப் பிறந்து, கோயிலில் வேதம் சொல்லியும் யாகம் வளர்த்தும் வாழ்ந்து வந்தேன். ஆனால், இறைவனைப் பற்றிய சிந்தனை இல்லாமல், மந்திரங்களைத் தவறாகச் சொல்லியும், பெயரளவில் யாகங்களைச் செய்தும், மனம் போன போக்கில் தவறுகள் செய்தும் வாழ்ந்தபடியால் பிரம்ம ராட்சசனாகப் பிறப்பெடுத்தேன். என்னைப் பொறுத்தவரையில் நீ ஒரு உடும்பு; ஆகவே, நீ சொன்னால் நான் போகமாட்டேன். நீ வந்த வழியே திரும்பிப் போ!"

உடனே யாதவப் பிரகாசர், "என்ன செய்தால் நீ இந்த உடம்பை விட்டுச் செல்வாய்?" என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பிரம்ம ராட்சசன், "உன்னுடைய பல்லக்கைச் சுமந்து வரும் இராமானுஜர்(Ramanujar) தனது காலை எனது தலையில் வைத்து, 'நீ போ' என்று சொன்னால், நான் சாப விமோசனம் பெற்று இந்த உடம்பை விட்டுச் சென்றுவிடுவேன்" என்றது.

உடனே, யாதவப் பிரகாசரும் ராமானுஜரை அழைத்து, பிரம்ம ராட்சசன் தலையில் காலை வைக்கச் சொன்னார். ராமானுஜர் அவ்வாறே செய்ய, உடனடியாக அந்தப் பிரம்ம ராட்சசன் சாப விமோசனம் பெற்று அரசனின் மகளின் உடம்பை விட்டு வெளியேறியது.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானே சிவலிங்கத்தை பூஜித்த அதிசயம்! மதுரையில் இப்படி ஒரு இடமா?
Ramanujar childhood

கோயில் பிரசாதத்தைச் சிதறிய நிலையில் சாப்பிட்ட ஓர் உடும்பிற்கே, அடுத்த ஜென்மத்தில் குருவாக உயரும் புண்ணியமும் ஞானமும் கிடைத்துள்ளது என்றால், மனிதப் பிறவி எடுத்த நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு இருக்கிறது!

உடும்புப் பிறப்பை விட மேன்மையானது மனிதப் பிறப்பு. நமக்குக் கோயிலுக்குச் செல்வதற்கும், இறைவனுக்குப் பிரசாதம் படைப்பதற்கும், அதனைச் சாப்பிடுவதற்கும் அத்தனை வாய்ப்புகளும் உள்ளன. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தர்மத்தின்படி வாழ்ந்து, தினமும் சிறிது நேரம் ஒதுக்கி இறைவனை வழிபட்டு, கோயில் பிரசாதத்தைச் சிறிதளவாவது உண்டு வாழ்ந்தால், இந்தப் பிறவிப் பெருங்கடலை எளிதில் கடந்து இறைவனை அடைந்துவிடலாம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com