
‘கர்ணம்’ என்றால் காது. ‘தோர்பி’ என்றால் கைகள். கைகளால் காதுகளைப் பற்றிக் கொண்டு, விநாயகர் முன் நாம் செய்யும் ஒருவகை வழிபாடு.
தோர்பி கர்ணம். இதை மனம், மொழி, மெய் மூன்றையும் ஒருங்கிணைத்து விநாயகர் முன், ‘எனது தவறுகளையெல்லாம் மன்னிச்சுடுப்பா, நான் இனி செய்யற செயல் அனைத்தும் தடையின்றி நிறைவேற வழி காட்டுப்பா’ என்று வேண்டியபடி செய்ய வேண்டும்.
காலங்காலமாக நாம் விநாயகரை கும்பிடறப்போ தோர்பி கர்ணம் போடணும்னு சொல்வாங்க. நெற்றி பொட்டில மூன்று முறை குட்டிக் கொண்டு வலக் கையால் இடக்காதையும், இடக்கையால் வலக்காதையும் பிடிச்சுகிட்டு மூன்று முறை உட்கார்ந்து உட்கார்ந்து போடறதுதான் தோர்பி கர்ணம். இதிலுள்ள நன்மைகள் நமக்கு தெரியாததாலேயே இது இன்று அமெரிக்காவுக்கு ‘சூப்பர் பிரெய்ன் யோகா’ என்று உரிமையாயிடுச்சு.
விநாயகரிடம் முதன் முதலா தோர்பி கர்ணம் போட்டது சாட்சாத் ஸ்ரீமகாவிஷ்ணுதான். ஒருமுறை மகா விஷ்ணுவோட சக்ராயுதத்தை விநாயகப் பெருமான் விளையாட்டா விழுங்கி விட்டார். எப்படியாவது விநாயகரிடமிருந்து அதை வாங்க மகாவிஷ்ணு தோர்பிகர்ணம் போடறாரு. வித்தியாசமான இந்தச் செயலைப் பார்த்த பாலவிநாயகர் விழுந்து விழுந்து சிரிக்க, சக்ராயுதம் வெளியே வந்து விழுந்துடுச்சு. மகாவிஷ்ணு மகிழ்வா அதை எடுத்துக் கொண்டார். இதன் மூலம் விநாயகரை மகிழ்விக்க புது வழிபாட்டு முறையும் நமக்கெல்லாம் கிடைச்சது.
அறிவியல் உண்மைகள்: நெற்றிப்பொட்டுல குட்டிக் கொள்வதால் மூளை நரம்புகள் தூண்டப்படுகின்றன. இதனால் ஞாபக சக்தி மேம்படுகிறது. கழுத்து, காதுகளின் பின்புறம், தாடைப்பூட்டு ஆகிய பகுதிகளின் அருகில் உள்ள இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்தும் வேகஸ் நரம்பு முடிச்சுகள் தூண்டப்பட்டு இதயம் சீராக இயங்க உதவுகிறது. பதில் சொல்ல மறந்த மாணவனை ஆசிரியர் காதைப்பிடித்து திருகுவதும் ஞாபக சக்தியைத் தூண்டத்தான்.
தோர்பிகர்ணம் போடும்போது கை, கால் மூட்டுகளிலுள்ள சக்தி மையங்களில் அழுத்தம் உண்டாகிறது. தோள், கை, மணிக்கட்டு இணைப்பு, இடுப்பு - தொடை, தொடை - கால், கால் - பாதம் இணைப்புகள் அனைத்திலும் உள்ள தசை, எலும்பு, நரம்புகள் மடங்கி, நீட்டி நிமிர்த்தப்பட்டு வலிமையடைகின்றன. இனி, கோயிலுக்குப் போனா விநாயகர் முன்பு தோர்பிகர்ணம் போட மறக்க மாட்டீங்கதானே.