

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானக்கு உலகெங்கிலும் கோவில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் (Tiruchendur Subramanya Swamy Temple) கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது.
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக மலைமீது அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகில் உள்ள நன்னீர்ச் சுனையான நாழி கிணறு கடலுக்கு அருகில் இருந்தாலும் நல்ல தண்ணீர் தருவது தனிச்சிறப்பாகும்.
முருகப்பெருமான் சூரபதுமனை வதைத்து சம்ஹாரம் செய்த புனித இடம் என்ற பெருமை கொண்டது திருச்செந்தூர். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருசெயந்திபுரம்' (செயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியதாக வரலாறு கூறுகிறது.
பொதுவாக திருச்செந்தூர் கோவிலுக்கு தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் உள்ளூரில் இருந்து மட்டுமின்றி வெளியூரில் இருந்தும் வருவார்கள் என்பதால் கோவில் நடை அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். இடையிலேயும் நடை அடைக்கப் படுவதில்லை. மேலும் தினந்தோறும் 9 கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. குறிப்பாக செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன. இத்தலத்தில் மூலவர் குருபகவான் அம்சமாகவும் விளங்குவதால் இந்நாளில் தரிசனம் செய்வது சிறப்பு.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடலில் நீராடிவிட்டு, அதன்பிறகு நாழிக்கிணற்றில் புனித நீராடுதல் வேண்டும். அதன்பின்னர் கொடிமரத்தை வணங்கி, மூலவரை தரிசித்து முறையே வழிபட வேண்டும்.
இந்த கோவிலுக்குள் ஆண்கள் மேல் சட்டை அணியாமல், வேட்டி மற்றும் துண்டுடன் மட்டுமே செல்ல வேண்டும். அதேபோல் பெண்கள் பாரம்பரிய உடைகளான சேலை, சுடிதார் அல்லது பாவாடை தாவணி அணிந்து செல்லலாம்.
தீராத கடன், நோய் மற்றும் செவ்வாய் தோஷங்கள் நீங்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலிலும் பின்னர் நாழிக்கிணற்றிலும் புனித நீராடி, அங்கிருக்கும் தூண்டுகை விநாயகரை வழிபட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது மிகச்சிறந்த பரிகாரமாக நம்பப்படுகிறது. செவ்வாய் மற்றும் குரு தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க செவ்வாய்க்கிழமைகளில் செந்திலாண்டவரை தரிசிப்பது சிறப்பு.
இந்த கோவிலில் கந்த சஷ்டி, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா வரும் ஆகஸ்ட் 31-ம்தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஆவணித்திருவிழா வருகிற 31-ம்தேதி (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (செப்டம்பர்) 11-ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது.
ஆகஸ்ட் 31-ம்தேதி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்ற பின்னர் 5.15 மணிக்கு மேல் திருவிழா
ஒவ்வொரு நாளும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வரும் செப்டம்பர் 4-ம்தேதி மேலக்கோவிலில் இரவு 7.30 மணிக்கு குடைவருவாயில் தீபாராதனையும், பின்னர் சுவாமி, அம்பாள் தனித்தனி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கின்றனர்.
அதனை தொடர்ந்து. 6, 7-ம்தேதிகளில் காலை சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், அலங்காரமும், மாலை 4 மணிக்கு மேல் சுவாமி சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
7-ம்தேதி காலை சுவாமி சண்முகர் பெரிய வெள்ளிச்சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்திலும், பகல் 12 மணிக்கு மேல் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் செப்டம்பர் 9-ம்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் பல்வேறு ஊர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என்பதால் கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.