

மதுரை ஐகோர்ட்டு தீர்ப்பின்படி, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதை தடை செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 14.11.22 முதல் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஐகோர்ட்டு உத்தரவை முழுமையாக செயல்படுத்துவதற்காக வருகிற ஜூலை 1-ம்தேதி முதல் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையானது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் (Tiruchendur Subramanya Swamy Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இந்த கோவில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள இக்கோவில், 2000-3000 ஆண்டுகள் வரை பழமை கொண்டதாகக் கருதப்படுகின்றது. முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள ஒரே கோவில் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது.
முருகப்பெருமான் இத்தலத்தில் கடலைப் பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 7-ம்தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் கடந்தாண்டு ஜூலை மாதம் 7-ம்தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூரில் மட்டுமின்றி, தமிழ்நாடு, அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கடலில் புனித நீராடி திருச்செந்தூர் முருகனை காண, நீண்டநேரம் வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக, வார இறுதி நாட்கள், செவ்வாய்கிழமை, கிருத்திகை, சஷ்டி போன்ற விசேஷ தினங்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதேபோல் ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்குள்ள கடற்கரையில் இரவு முழுவதும் தங்கி, அதிகாலையில் முருகனை தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் இந்த கோவிலில் முகூர்த்த நாட்களில் அதிகளவில் திருமணங்கள் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த கோவில் அமைந்துள்ள கடற்கரையை ஒட்டிய பகுதி, பாரம்பரிய சடங்குகள் செய்வதற்கும் புனிதம் நிறைந்ததாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில் தான் இந்த கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை உத்தரவு வருகிற ஜூலை 1-ம்தேதி முதல் தீவிரப்படுத்தப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி வரும் 1-ம்தேதி முதல் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100 விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை என அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் முழுமையான பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோவிலுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
எனவே பக்தர்கள் கோவிலுக்கும் வரும் போது தங்களது செல்போன்களை தாங்கள் தங்கியிருககும் இடங்களிலோ அல்லது தங்களது வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்து விட்டு சாமி தரிசனம் செய்ய வருகை தர வேண்டும். அல்லது பக்தர்கள் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே கோவில் நிர்வாகம் சார்பில் கைபேசி பாதுகாப்பு வைப்பகங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அதை பயன்படுத்தி பக்தர்கள் தங்களது செல்போன்களை பாதுகாப்பாக வைத்துவிட்டு திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் பரிசோதனையின் போது பக்தர்களிடம் செல்போன்கள் இருப்பது கண்டறிப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்து பாதுகாப்பு பெட்டகங்களில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே ஐகோர்ட்டு உத்தரவின்படி கோவிலுக்குள் செல்போன் இன்றி தரிசனம் செய்வதை முழுமையாக நடைமுறைப்படுத்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கோட்டுக்கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் அல்லது கோவில் பகுதிகளில் ட்ரோன் கேமரா பறக்க விடவும், செல்போன் அல்லது வீடியோ கேமரா மூலம் ரீல்ஸ் எடுப்பதற்கும், திரைப்படப் பாடல்களைப் பாடி நடனமாடுதல், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்தல் போன்ற செயல்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உத்தரவை மீறி கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பவர்களின் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
இதுபோன்ற தடைகள், திருப்பதி, காளஹஸ்தி போன்ற பிற கோவில்களிலும் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் தற்போது திருச்செந்தூர் கோவிலிலும் இந்த புதிய உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பது, சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.