விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருக்கிளியனூர் சிவாலயம் மிக சிறப்பு வாய்ந்தது இந்த ஆலயம் பற்றி பார்ப்போம்.
ஒவ்வொரு சிவாலயங்களிலும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. அதிலும் நாம் அறிந்திடாத சிவாலயங்கள் சில கிராமங்களில் உள்ளன. அவைகளில் மிகச் சிறப்பு வாய்ந்த தலங்கள் ஏராளம் அப்படி ஒரு தலத்தைப் பற்றி பார்ப்போம்
மனிதன் நோய் நொடி இல்லாத வாழ்க்கை வாழ வேண்டும் அதுவே வாழ்க்கையின் மிகப்பெரிய வரம். என்ன செய்வது ஏதோ ஒரு காரணத்தினால் நமக்கு கொடிய நோய்கள் தொற்றிவிடுகிறது. அப்படிப்பட்ட கொடிய நோயிலிருந்து விடுவிக்கும் ஒரு ஈசன் ஆலயம் தான் இது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தும், அம்மன் கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார். இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 276 வது தேவாரத்தலம் ஆகும்.
சோழர் காலத்தில் தோன்றிய கிள்ளியநல்லூர் என்ற ஊர்ப்பெயர் நாளடைவில் கிளியனூர் என்று மருவியிருக்கலாம். ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் காலத்தில் இவ்வூர் திருக்கிளியன்னவூர் என்று வழங்கி வந்துள்ளதை இவர் பாடி அருளியுள்ள தேவாரத் திருப்பதிகம் மூலம் நாம் அறிய முடிகின்றது.
திருஞானசம்பந்தர் காலத்தில் செங்கற்கோயிலாக இருந்திருக்கக்கூடிய இத்திருக்கோயில், இடைக்காலத்துச் சோழநாட்டையாண்ட மன்னர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பட்டிருக்கிறது. இப்போதும் இக்கற்கோயில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இத்தல பெருமான் அகத்திய முனிவருக்கு அருள்பாலித்தவர். ராகு, கேது என்ற கிரகங்களுக்கும் அருள்பாலித்தவர்.
காளவ மகரிஷி தனது இரு பெண் குழந்தைகளின் தீராத மிக கொடிய நோய் நீங்க இத்தலம் வந்து பல ஆண்டுகள் வழிபாடு செய்தார். சிவனின் திருவருளால் அவரது குழந்தைகளின் நோய் நீங்கியது. சுகப்பிரம்ம மகரிஷி இத்தல சிவனை வழிபட்டு தனது வயிற்றுவலி நோய் நீங்கப்பெற்றார்.
திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடியருளிய தேவாரத் திருப்பதிகத்தில் கிளியன்னவூர் பெருமானுடைய திருவடிகளை வழிபடும் அடியவர்கள் தீங்குகளிலிருந்து விடுபட்டுப் புகழுடன் வாழ்வர். வன்மை செய்யும் வறுமை வந்தாலுமே, தன்மை இல்லவர் சார்பு இருந்தாலும், புன்மைக் கன்னியர் பூசல் உற்றாலுமே, நன்மை உற்ற கிளியன்னவூரனே மிகக்கடினமான வறுமை, இயல்பற்றவர்களின் தொடர்பு, மகளிரால் ஏற்படும் பூசல் இவற்றிலிருந்து விடுபடுவர்.
1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட இக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அடியவர்களுக்கு அருள்பாலித்துவரும் கோயில்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
இத்தல தேவாரப் பதிகத்தை ஓதுபவர்கள் இவ்வுலகக் கொடுமைகளிலிருந்து விடுபட்டு ஒரு குறையும் இல்லாது நல்வாழ்வு வாழ்வர்.