பந்தள மகாராஜா கட்டிய கோவில் எது என்று கேட்டால் நாம் அனைவரும் சொல்வது சபரிமலையையே. ஆனால் அவர் கட்டியது முருகன் கோவில்தான் தென்காசி மாவட்டத்தில் உள்ள திருமலை முருகன் கோவில். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய கோவிலை பற்றி காண்போம்.
முற்காலத்தில் ஒரு வேல் மட்டுமே வைத்து பூஜை செய்து வந்த இந்த திருமலை கோவிலில் பூவன் பட்டர் என்ற அர்ச்சகருடைய கனவில் தோன்றிய முருகப்பெருமான் பட்டரே! இந்த மலை எனக்கு சொந்தமானது. அச்சன் கோவிலுக்கு செல்லும் வழியில் கோட்டைத் திரடு என்ற இடத்தில் நான் சிலை வடிவில் மணலில் புதைந்து இருக்கிறேன் எறும்பு சாரை சாரையாக செல்லும் இடத்தை நீங்கள் தோண்டி பார்த்தால் கிடைக்கும் சிலையை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும் என்று கூறி மறைந்தார்
முருகப்பெருமான் கனவில் தோன்றி கூறிய இடத்தில் கிடைத்த சிலையை எடுத்து வந்து பந்தள மகாராஜாவும் பூவன் பட்டரும் குவளை பொய்கைக்கு அருகில் புளிய மரத்தடியில் வைத்து பூஜைகள் செய்து வந்தனர் பிற்காலத்தில் பந்தளத்தை ஆண்ட மன்னர்கள், முருகப்பெருமானை வழிபடுவதற்கு வசதியாக படிகள் அமைக்கவும், கோவிலை எழுப்பவும் ஏற்பாடு செய்தனர்.
செங்கோட்டையில் இருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் பண்பொழியில் என்ற இயற்கை எழில் சூழ்ந்து, பசுமை படர்ந்துள்ள இடத்தில் சிறிய மலைமீது அமைந்திருக்கிறது அருள்மிகு திருமலைக்குமார சுவாமி திருக்கோவில். இந்த மலைமீது ஏறிச் செல்ல சுமார் 544 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மலையை நெருங்க நெருங்க குற்றால சாரலின் குளிர்ச்சி அதிகரிக்க தொடங்கி அற்புதமான உணர்வை ஏற்படுத்துகிறது. திருமலை கோவிலுக்கு படி ஏற முடியாதவர்களுக்கு கோவில் சார்பாக வேனும் செல்கிறது. வாகனங்களில் மலை மேலே ஏறும்போது ஒருபுறம் ஓங்கி உயர்ந்த மலையும் மறுபுறம் பச்சை பசேல் என்று இருக்கும் இயற்கையையும் பார்க்கும்போது மினி ஊட்டிக்கு வந்து விட்டோமா என்ற உணர்வை நம்முள் ஏற்படுத்திவிடும்.
மலை மீது அமையப் பெற்றுள்ள இந்த கோவிலின் முகப்பில் 16 பேறுகள் கிடைக்கும் வகையில் 16 படிகள் ஏறிச்சென்றால் உச்சிப் பிள்ளையாரின் அருளும் கிடைக்கபெறும்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி தனியாக சிறிய குன்றின் மீதுள்ள இக்கோவிலில் இருந்து பார்த்தால் தென்னை மரங்களும், இயற்கையின் அழகும், உடலை உரசிச் செல்லும் குளிர் காற்றும் உற்சாகத்தை கொடுப்பதால் இது சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடமாகவும் திகழ்கிறது.
இங்கிருக்கும் முருகன் சிலையின் மூக்கில் புதைந்திருந்த சிலையை தோண்டி எடுத்தபோது சிறிய காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காண்டி என்ற பெயர்களும், பெண்குழந்தைகளுக்கு மூக்கம்மாள் என்ற பெயர்களும் வைக்கின்றனர். முருகப் பெருமானை வேண்டிக்கொண்டு மூக்கு குத்தும் வழக்கமும் பின்பற்றப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.
திருமலை முருகன் கோவில் சிறந்த ஆன்மிக தலமாக இருப்பதோடு மிகச்சிறந்த சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது.