உலகத்தில் முட்டையிடும் உயிரினங்கள் எவை? குட்டி போடும் உயிரினங்கள் எவை? - சித்தர் கூறிய குட்டிக் கதை!

Siddhar
Siddhar
Published on

அந்த வளர்ந்து விட்ட நாட்டின் ஒவ்வொரு நகரிலும் சித்தருக்குப் பெருங்கூட்டம்  கூடிற்று! செல்லுமிடத்திலெல்லாம் தமிழின் அருமையையும், தமிழ் நாட்டு மூலிகைகளின் மகத்துவத்தையும் சித்தர் சிலாகித்துப் பேச, மக்கள் மகிழ்ந்து ரசித்தார்கள்!

மனிதர்களுக்கு 4,448 நோய்கள் வரலாமென்றும், அவை அனைத்தையும் கட்டுப்படுத்தும் மருந்துகள் சித்த வைத்தியத்தில் உண்டென்றும் அவர் போகுமிடங்களில் எல்லாம் உறுதியாகக் கூற, அதைக் கேட்ட மக்கள் புளகாங்கிதம் அடைந்தார்கள்.

வாழ்க்கைக்கு வேண்டிய அத்தனை வழிகாட்டல்களும், வருகின்ற நோய்களைப்  போக்கும் உபாயங்களும் இந்தச் சித்தர்களுக்கு எப்படி அத்துபடியானது என்று  அனைவரும் வியந்தார்கள்!

வியப்பவர்கள் எண்ணிக்கை கூடக் கூட, பொறாமை காரணமாக வெறுப்பவர்கள் எண்ணிக்கையும் கூடுவதுதானே உலக இயற்கை! ஆமாம்! சித்தரின் மீது பொறாமை கொண்ட ஒரு கூட்டம், அவரைக் கூட்டத்தினரிடையே  வைத்து, விடை கூற முடியாத கேள்விகளைக் கேட்டு மூக்கறுத்து, அவரின் புகழை மங்கச் செய்யத் திட்டமிட்டது!

அன்று ஞாயிற்றுக் கிழமை! நகரின் முக்கிய சதுக்கத்தில் கூட்டம். மக்கள் வெள்ளமாகத் திரண்டிருக்க இதுதான் தக்க சமயமென்று கூட்டத்தில் கலந்தனர் பொறாமைப் பேய்கள்! முன் வரிசை இருக்கைகளில் இடமும் பிடித்துக் கொண்டனர்.

சித்தர் பேச ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே குறுக்கிட்ட அவர்கள், அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளித்து விட்டு அதன் பிறகு பேசுமாறு சித்தரை நிர்ப்பந்தித்தனர்! சித்தரின் ஆதரவாளர்களோ அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பிக்க, கூட்டத்தில் சலசலப்பு அதிகரித்தது!

பேச்சை நிறுத்தியிருந்த சித்தர், கூட்டத்தினரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், சந்தேகம் என்று கூறிக்கொண்டு அமர்ந்திருந்தவர்களை மேடைக்கு வருமாறு அழைத்தார்.

பத்துப் பதினைந்து பேர் முண்டியடித்துக் கொண்டு மேடையில் ஏற, அனைவருக்கும் இருக்கை அளிக்கச் சொன்ன சித்தர், அவர்கள் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, ஒவ்வொருவராகத் தங்கள் சந்தேகங்கள் என்னவென்று அனைவருக்கும் கேட்கும்படியாகக் கூறுமாறு வேண்டிக்கொண்டார். அவர்களில் ஒருவர் மட்டும் எழுந்து, “எங்கள் எல்லோரின் சந்தேகம் ஒன்றே ஒன்றுதான்! அதனை மட்டும் தீர்த்து வைத்தாலே போதுமானது!” என்றார்.

இதையும் படியுங்கள்:
சிவபெருமானுக்கே மிகவும் பிடித்த சிவன் கோவில் - திருவாசி மாற்றுரைவதீஸ்வரர் திருக்கோவில்!
Siddhar

“ஓ! ஒரேயொரு சந்தேகந்தானா? கேளுங்கள்! பதில் தெரிந்தால் சொல்கிறேன்!” என்றார் சித்தர்.

“தெரிந்தால் சொல்கிறேன் என்று கூறித் தப்பிக்க முடியாது! பதில் சொல்லி விட்டுத்தான் பேச வேண்டும்! பதில் தெரியா விட்டால் ஊரை விட்டு ஓடி விட வேண்டும்.” அதட்டல் தொனியில் அருகிலிருந்தவர் பேசினார்!

மெல்லச் சிரித்தபடி, ”இறைவன் சித்தம் அதுவானால் அப்படியே ஆகட்டும்! நீங்கள் உங்கள் சந்தேகத்தைக் கூறுங்கள்!” என்றார் சித்தர்.

“இதோ பாருங்கள்! எங்கள் சந்தேகத்துக்கு நேரடியான, சுருக்கமான பதில் சொல்லணும். சும்மா சீரியல் மாதிரி இழுத்துக்கிட்டுப் போகக் கூடாது! சரியா?”

“சந்தேகத்தைச் சொல்லுங்க! அப்புறந்தானே அதுக்குச் சுருக்கமா பதில் கூறுவதா? நீண்ட பதிலில் விளம்புவதா? என்று முடிவு செய்ய இயலும்!” என்ற சித்தரிடம்,

“உங்களுக்குத் தான் நிறைய விஷயங்கள் தெரியுமே! சும்மா எங்களைச் சுற்றி விடக் கூடாது! வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுங்கற மாதிரி பதில்தான் எங்களுக்கு வேணும்!”

இதனைக் கேட்ட சித்தரின் ஆதரவாளர்கள், ”சந்தேகத்தைக் கூறாமலே இவ்வளவு புதிர் போடறதில் இருந்தே புரியுது சாமி! இவங்க சந்தேகத்தை நிவர்த்தி செய்துக்கிட வரல! நம்ம கூட்டத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தவே வந்திருக்காங்கன்னு!” என்று சப்தமிட, சாமி சிரித்தபடியே, ”உங்கள் சந்தேகத்தைக் கூறுங்கள்!” என்றார்.

“ரொம்ப சிம்பிள் சாமி! உலகத்தில் முட்டையிடும் உயிரினங்கள் எவை? குட்டி போடும் உயிரினங்கள் யாவை? இவற்றிற்கான விடை எங்களுக்குத் தெரியணும்!எங்க சொல்லுங்க பார்ப்போம்?” என்ற குரலில் எகத்தாளம் மிகுந்திருந்தது!

இதையும் படியுங்கள்:
இராவணன் சீதையை இலங்கைக்கு இங்கிருந்துதான் கடத்திச் சென்றான்... எங்கிருந்து?
Siddhar

சாமி இப்பொழுது வாய் விட்டே சிரித்து விட்டார்! அவரின் சிரிப்பைக் கண்ட கேள்வியாளர்கள் ஒரு விதமாக மிரண்டாலும், சுதாரித்தபடி, ”சிரிச்சிட்டா போதுமா?எங்களுக்கு உடனடியா விடை தேவை!” என்று சப்தமிட்டனர்!

சாமி பேச எழுந்ததும் கூட்டத்தில் அமைதி நிலவியது. கம்பீரக் குரலில் பேசினார் சித்தர் சாமியார்!

“ரொம்ப சிம்பிள் சபையோர்களே! காதுகள் வெளியேயுள்ள உயிரினங்கள் எல்லாம் குட்டி போடும்! காதுகள் வெளியே தெரியாத உயிரினங்கள் எல்லாம் முட்டையிடும்!"

அவ்வளவுதான்! கை தட்டல்கள் விண்ணைப் பிளக்க, கேள்வி கேட்டவர்கள் எங்கே சென்றார்கள் என்றே தெரியவில்லை! சாமி தன் வழக்கமான பேச்சைத் தொடர, கூட்டம் முன்னிலும் அமைதியாக அவர் பேச்சை ரசித்தது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com