
திருநெல்வேலியில் ஆழ்வார்குறிச்சிக்கு அருகே அத்ரி மலை உள்ளது. இந்த மலையில் புலி மற்றும் வனவிலங்குகள் வாழ்கின்றன. இங்குதான் அத்ரி முனிவர் தன் மனைவியோடு வாழ்ந்தார். அந்த மலையில் கோரக்க நாதர் ஆலயம் உள்ளது. அத்ரிமலை அடிவாரம் உள்ள அணையின் மேல்மட்டத்தில் சுமார் 6 கி. மீட்டர் உயரத்தில் உள்ள கோவிலில் இறைவன் பெயர் அத்ரி பரமேஸ்வரன். இறைவி பெயர் அத்ரி பரமேஸ்வரி.
இக்கோவில் தீர்த்தத்தில் வெள்ளை ஆமை உள்ளதாம். ஆனால் அதை காண்பது எளிதல்ல என்று கூறப்படுகிறது. இது ராகு பரிகார ஸ்தலமாக கருதப்படுகிறது.
நாக தோஷம், திருமணத்தடை மற்றும் காலசர்ப்ப தோஷ பரிகார ஸ்தலமாக இது விளங்குகிறது.தென் கங்கை என்று கூறப்படும் கடனா நதி இங்குதான் உற்பத்தி ஆகிறது. அத்ரி மலைக் கோவில் அருகே பாலை மரம் என்ற அரிய வகையான மரம் இருக்கிறது. இந்த மரத்தில் தான் பன்னீர் மழை பொழியும் அதிசயம் வருடா வருடம் நடக்கிறது.
பங்குனி மாத கடைசி 5 நாட்கள் மற்றும் சித்திரை முதல் 5 நாட்கள் ஆகிய பத்து நாட்களில் ஏதாவது இரண்டு நாட்கள் மட்டுமே இந்த அதிசய நிகழ்வு நடக்கும். அந்த இரண்டு நாட்களும் ஒரு வகையான வண்டுகள் இந்த மரத்தில் அமர்ந்து கொள்கின்றன. ஒரே நேரத்தில் இவ் வண்டுகள் அனைத்தும் திரவம் போன்ற நீரை பீச்சி அடிக்கின்றன. அது மழையாக பொழிகிறது. அந்த நீரை நுகர்ந்தால் பன்னீர் வாசனை வரும். ஆனால் இந்த நீர் மிக விரைவில் காய்ந்து விடும். மரத்தின் அடியில் இருந்து பார்த்தால் ஒரு வண்டு கூட கண்ணுக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்க ஆச்சரியம்!