பத்ரி நாராயணர் பிறந்த தினம் இன்று!

பத்ரி நாராயணர் பிறந்த தினம் இன்று!

சிறப்புகள் பல நிறைந்த இந்த ஆடி மாதத்தில், மேலும் சிறப்பு சேர்ப்பது போல அமைந்திருக்கிறது இன்றைய தினம். ஆம், ஆடியும் ஹஸ்த நட்சத்திரமும் கூடிய தினத்தில்தான் பத்ரிகாஸ்ரமத்தில் பத்ரி நாராயணப்பெருமாள் அவதரித்ததாக புராணக் குறிப்புகள் கூறுகின்றன. பத்ரிகாஸ்ரமத்தின் சிறப்புகள் எண்ணிலடங்கா. பத்ரிக்கு பயணம் மேற்கொள்வது அவ்வளவு எளிதான ஒரு விஷயம் கிடையாது. திடீரென கொட்டும் பனி, சரிந்து விழும் மலைகள், சாலையில் விழும் மரங்கள் என வழி நெடுகிலும் தடைகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ள ஒரு திவ்ய தேசம் அது. சாட்சாத் அந்த பத்ரி நாராயணரே, தான் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து அவன் இடத்துக்கு ஒவ்வொரு பக்தரையும் அழைத்துக் கொண்டு சென்று தரிசனம் செய்ய வைத்து திரும்பவும் பத்திரமாகக் கொண்டு வந்து விடுகிறார் என்பது கண்கூடு. பத்ரி  நாராயணரின் பிறந்த நாளாகப் போற்றப்படும் இந்த நன்னாளில் அப்பெருமானின் சிறப்புகளில் ஒன்றிரண்டையாவது தெரிந்து கொள்வோம்!

முன்னொரு காலத்தில் கயிலையம்பதியான சிவனுக்கும் பிரம்மாவுக்கும் ஐந்து தலைகள் இருந்தனவாம். பிரம்மனுக்கும் ஐந்து தலைகள் இருப்பதைப் பார்த்து குழம்பித் தவித்தாளாம் பார்வதி தேவி. இதனால் தனது கணவரான சிவபெருமானிடம் பார்வதி தேவி விவாதத்தில் ஈடுபட, அதைப் பொறுக்க மாட்டாத சிவபெருமான், பிரம்ம தேவனின் ஒரு தலையைக் கொய்து விட்டாராம். இதனால் பிரம்ம தேவன் நான்கு தலைகளோடு இருக்கும் நிலை ஏற்பட, சிவபெருமானின் கையிலோ பிரம்மாவின் கொய்த தலை ஒன்று ஒட்டிக்கொண்டு, அவருக்கு பிரம்மஹத்தி தோஷத்தையும் தந்து விட்டதாம். கையிலிருந்து பிரியாத பிரம்மமனின் தலையும், வாழ்க்கையிலிருந்து பிரியாத பிரம்மஹத்தி தோஷமும் கயிலாய பெருமானை வாட்ட, அவர் நேராக நாராயணனிடம் சென்று தனது நிலையை எடுத்துரைத்தாராம்.

அதற்கு நாராயணர், “கவலைப்படாதே ருத்ரனே. பூலோகத்துக்குச் சென்று ஒரு பதிவிரதையிடம் அவள் கையால் நீ பிக்‌ஷையினை பெற்றால், பிரம்மஹத்தி தோஷம் உன்னை விட்டு நீங்கி விடும்” என்று கூற, பூலோகம் வந்தார் பரமேஸ்வரன். பூலோகத்தில், ஆசார்ய ஸ்வரூபத்தில் பத்ரி நாராயணர் மாணவர்களுக்கு சத் விஷய பாடங்களை நடத்திக்கொண்டிருப்பதையும், அங்கே மஹாலட்சுமி தனது கணவருக்கு பய பக்தியோடு சேவை செய்து கொண்டிருப்பதையும் பார்த்து, சிவபெருமான் லட்சுமி தேவியிடம் பிக்க்ஷை கேட்க, தாயாரும் தயை கூர்ந்து அவருக்கு பிக்க்ஷை கொடுத்தருள, சிவபெருமானின் கையிலிருந்த பிரம்மனின் தலை தானாக அவர் கைலிருந்து  நழுவி விழுந்தது. அப்படி பிரம்மனின் தலை விழுந்த இடமே பத்ரிகாஸ்ரமத்தில் இருக்கும், ‘ப்ருஹ்ம கபாலம்’ என்ற இடம்.

பித்ருக்களுக்கு பிண்டம் வைப்பதற்காகவே பலர் தேடி செல்லும் இடம் இதுவே. பத்ரிகாஸ்ரமத்தை நினைத்தாலோ அல்லது பத்ரி நாராயணரை மனதால் தியானித்தாலோ நமக்கு மறு பிறவியே கிடையாது. ஆதிசங்கரரால் கண்டு பிடிக்கப்பட்டவர் அல்லவா இந்த பத்ரி நாராயணர்? இந்தக் கோயிலை பொறுத்தவரை முதல் மரியாதை என்பது ஆதிசங்கருக்குதான்.

பல விசேஷங்கள் பத்ரிநாத்தில் இருக்கிறது. அதில் வாமன துவாதசி நாள் மிகவும் விசேஷமான ஒரு திருநாளாகும் பத்ரி நாராயணருக்கு. ‘மானா’ என்று அழைக்கப்படும் மணிபத்ரபுரிக்கு பத்ரி நாராயணரின் உத்ஸவரும் அவரது சகோதரரும் சேர்ந்து அவர்தம் அன்னையைக் காணச் செல்லும் நாள் அதுவாகும். வாமன துவாதசி அன்று தமது தாயாரைக் காண உத்தவர், ஆதிசங்கரரோடு சேர்ந்து மானா செல்லும் நாள். வருடத்தில் ஒரே ஒரு நாள் தமது தாயைக் காண ஆசையோடு பத்ரி நாராயணர் செல்லும் அந்த நாளை பத்ரிகாஸ்ரம வாசிகளும் மானா கிராமத்து வாசிகளும் பாசத்தோடு கொண்டாடி பரவசப்படுவார்கள்.

பத்ரி நாராயணரின் திருநட்சத்திர நாளான இன்று பத்ரி நாராயணரின் திருப்பாதத்தைப் பணிவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com