
இந்தியாவில் இறைவழிபாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்தவகையில் ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கடவுளை வழிபடும் மரபு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும் விநாயகரை வணங்கி விட்டு தொடங்கும் வழக்கம் தமிழகத்தில் தொன்று தொட்டு இன்றும் வழக்கத்தில் உள்ளது. அதேபோல் முருகப்பெருமானை சஷ்டி, கிருத்திகை போன்ற விசேஷ நாட்களில் விரதம் இருந்து வழிபாடு செய்யும் வழக்கமும் உள்ளது.
‘ஆனைமுகன் ஆறுமுகன்’ என்பது பொதுவாக விநாயகரையும் (ஆனைமுகம்) முருகனையும் (ஆறுமுகம்) குறிப்பிடும் ஒரு சொற்றொடராகும். மேலும் விநாயகர் தடைகளை நீக்குபவராகவும், முருகன் வீரத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறார்.
யானை முகம் கொண்ட கணபதி அல்லது விநாயகர் தடைகளை நீக்கும் கடவுளாகவும், ஞானத்திற்கு உரியவராகவும் வணங்கப்படுகிறார். ஆறு முகங்கள் கொண்ட முருகப்பெருமான் வீரத்திற்கும், வெற்றிக்கும் உரிய கடவுளாகவும், தமிழ் கடவுளாகவும் போற்றப்படுகிறார்.
சில கோவில்களில், ஆனைமுகனும் ஆறுமுகனும் ஒரே சன்னதியில் அருள்பாலிக்கும் அரிய நிகழ்வும் உள்ளது. அந்த வகையில், 'ஸ்ரீ வழிவிடு முருகன்' கோவில் கர்ப்பகிரகத்தில் ஆனைமுகனும் ஆறுமுகனும் சேர்ந்து அருள்பாலிப்பது மிக விசேஷமானதும் அரிதானதுமான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
இன்று (அக்டோபர் 10-ம்தேதி) விநாயகரையும், முருகப்பெருமானையும் வழிபட உகந்த நாளாகும். அதாவது, விநாயகருக்கு உகந்த ‘சங்கடஹர சதுர்த்தி’யும், முருகப்பெருமானுக்கு உகந்த ‘கிருத்திகை’யும் ஒரே நாளில் வந்துள்ளது.
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதமிருந்து முருகனை வழிபாடு செய்தால் துன்பங்கள் நீங்கி, வாழ்வில் செல்வங்கள் பெருகும் என்றும் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.
அதேபோல் சங்கடஹர சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானுக்கு உகந்த நாளாகும், இது சந்திர மாதத்தில் வரும் கிருஷ்ண பட்சத்தின் (தேய்பிறை) நான்காம் நாள் அன்று அனுசரிக்கப்படும் புனித விரதமாகும், இது வாழ்வில் ஏற்படும் சங்கடங்களை நீக்குகிறது. வளர்பிறை சதுர்த்தியில் காலையிலும், தேய்பிறை சதுர்த்தியில் மாலையிலும் விநாயகரை வழிபட வேண்டும்.
மகா சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருந்து விநாயகரை வழிபடுவது, அந்த ஆண்டில் உள்ள மற்ற 11 சங்கடஹர சதுர்த்திகளை வழிபட்டதற்கு சமமான பலனைத் தரும் என்று நம்பப்படுகிறது.
அதாவது, ஓர் ஆண்டில் வரும் 11 சங்கடஹர சதுர்த்திகளை வழிபடத் தவறியவர்கள் இன்று (அக்டோபர் 10-ம்தேதி) மகா சங்கடஹர சதுர்த்தி நாளில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலனைப் பெறலாம்.
இன்றைய தினம் அமைதியாக மனதிற்குள் இரு கடவுள்களுக்கும் உகந்த பாடல்களையும், ஸ்லோகங்களையும், போற்றிகளை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
இன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு பூஜையறையில் விநாயகர் மற்றும் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றிய பின்னர் விரதத்தை தொடங்க வேண்டும். இன்று முழுவதும் விரதம் இருக்க முடிந்தவர்கள் உபவாசம் இருப்பது நல்லது. இயலாதவர்கள் அரிசி தவிர்த்த உணவுகளை உட்கொள்ளலாம். அதன்பிறகு காலையிலும், மாலையிலும் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலையும், முருகனுக்கு செவ்வரளியும், நெய் தீபமும் ஏற்றி அவர்களை வழிபட்ட பின்பு மாலையில் பால், பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இன்றைய தினம் அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். யாரிடமும் கடுமையாக நடந்து கொள்ளவோ, தகாத சொற்களை பயன்படுத்தவோ கூடாது. உங்களால் முடிந்த தானதர்மங்களை செய்ய வேண்டும்.
விரதம் இருக்கும் நாட்களில் இரவில் படுக்கையில் படுக்காமல் பாய், சாதாரண துணி ஆகியவை விரித்துத் தலையணை இன்றிப் படுக்க வேண்டும்.
விநாயகருக்கு உகந்த ‘சங்கடஹர சதுர்த்தி’ அன்றும், முருகப்பெருமானுக்கு உகந்த ‘கிருத்திகை’ அன்றும் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நம்முடைய பண கஷ்டங்களும் சங்கடங்களும் தீரும். நினைத்த காரியங்கள் கைகூடும்.