
ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தியை நாம் முழு முதற் கடவுள் என்று போற்றி வணங்கும் விநாயகரின் பிறந்த நாளாக, விநாயக சதுர்த்தியாக வழிபடுகிறோம். சதுர்த்தி விரதம் என்பது மாதாமாதம் வளர்பிறை சதுர்த்தியில் (அமாவாசை கழிந்த நான்காம் நாள்) அனுசரிக்கப்படுகிறது. அதேபோல், மாதாமாதம் தேய்பிறை சதுர்த்தியில் சங்கடஹர சதுர்த்தியாக விநாயகர் வழிபாடு செய்யப்படுகிறது. மாதந்தோறும், வளர்பிறை சதுர்த்தியன்று கோயில்களில் காலை நேரங்களில் கணபதி ஹோமம் செய்யப்படும்.
சிவ கணங்களுக்கு அதிபதியான விநாயகரை கணபதி, கணேசன், கணநாதன் என்று பலவிதமாகப் போற்றி வணங்குவர். வக்ரதுண்டர், ஹேரம்பர், லம்போதரர், ஏகதந்தர் போன்ற பல திருநாமங்களால் விநாயகர் அழைக்கப்படுகிறார். குழந்தைகளின் பிரியத்திற்குரிய வழிபாட்டு தெய்வம் ஆனை முக கணபதி. பள்ளி செல்லும் வழியில் எங்கு பிள்ளையார் கோயிலைக் கண்டாலும் நின்ற நிலையிலேயே தலையில் குட்டிக் கொண்டு, பாவனையாகத் தோப்புக் கரணமும் போட்டு விட்டுச் செல்வார்கள் குழந்தைகள்.
விநாயகரை வணங்காமல் எந்த ஒரு காரியமும் ஆரம்பிக்கப்பட மாட்டாது. பூஜைகள், ஹோமங்கள், யாகங்கள் எல்லாவற்றுக்கும் ஆரம்பம் விநாயகரின் வழிபாடுதான். எல்லா பூஜைகளிலும் மஞ்சளில் பிள்ளையாரைப் போலப் பிடித்து வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து பூஜை செய்வார்கள். இதற்கும் ஆதாரமாக ஒரு நிகழ்வு சொல்லப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் அமிர்தத்திற்காகப் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வாசுகிப் பாம்பு கக்கிய விஷம்தான் வந்தது.
இதைக் கண்டு பயந்துபோன தேவர்கள், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் முறையிட அவர், ‘முழுமுதற் கடவுளான பிள்ளையாரை பூஜை செய்யாமல் பாற்கடலைக் கடைய ஆரம்பித்ததால்தான் இது ஏற்பட்டது’ என்றார். கடற்கரையில் பிள்ளையாரைப் பிடிப்பது எப்படி என்று யோசித்து சட்டென்று கடல் நுரையில் ஒரு பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜை செய்து விட்டு பாற்கடலைக் கடைய உடனே அமிர்தம் பொங்கி வந்தது. எந்தக் காரியம் செய்தாலும், எந்தவிதமான விக்கினமும் இல்லாமல் அந்தக் காரியம் சித்தியாக, விநாயகர் பூஜை செய்ய வேண்டுமென்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வைச் சொல்லலாம். இந்த நுரையால் பிடித்து வைக்கப்பட்ட பிள்ளையார் இன்றும் நமக்கு கும்பகோணத்திற்கு அருகில் திருவலஞ்சுழி என்ற தலத்தில் 'நுரைப் பிள்ளையார்' என்னும் திருநாமத்துடனேயே காட்சியளிக்கிறார்.
விநாயகர் சதுர்த்தியன்று களிமண்ணால் செய்த பிள்ளையார் சிலையை வாங்கி வீட்டில் வைத்து பக்தி சிரத்தையுடன் பூஜை செய்து, ஐந்து நாட்கள் கழித்து அதை நீர்நிலைகளில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைத்து விடுவாகள். விசர்ஜனம் செய்வது என்று அதைச் சொல்வார்கள். இதற்கும் அறிவியல் ரீதியாக ஒரு காரணம் இருக்கிறது. ஆடிப் பெருக்கின்போது வெள்ளப் பெருக்கெடுப்பு ஏற்படும். ஆற்று நீர் மிக வேகமாக ஓடி, கடலில் கலந்து விடும். அதைத் தடுக்கவே ஆற்றிலிருந்து களிமண்ணையெடுத்து விநாயகர் சிலைகள் செய்து, பூஜைக்குப் பின் ஐந்து நாட்கள் கழித்து அதை ஆற்றிலேயே கரைத்து விடுவர்.
அந்தக் களிமண் நிலத்தடி நீரைச் சேமிக்க உதவும். ஆனால், காலப்போக்கில் வெறும் களிமண் மட்டுமல்லாது, ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் என்று வேறு பலவிதங்களிலும் சிலைகள் அதுவும் மிகப் பிரம்மாண்டமாகச் செய்யப்படுவதால் அவை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. தற்போது சுற்றுசூழல் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் விதை விநாயகர் சிலைகள் கூடத் தயாரிக்கப்படுகின்றன. காகிதக் கழிவிலிருந்தும் விநாயகர் பொம்மைகள் தயாரிக்கப்படுகின்றன.
விநாயக சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு எருக்கமாலை அணிவித்து, அஷ்டோத்திரம், போற்றி அகவல் படித்து அருகம்புல் மற்ற பூக்களைக் கொண்டு அர்ச்சனை செய்து, விநாயகரின் பிரசித்திப் பெற்ற பாடல்களைப் பாடி நைவேத்தியங்கள் வைத்து, ஆரத்தி காண்பித்து நம் கோரிக்கைகள் எல்லாவற்றையும் அவரிடம் சமர்ப்பித்து வணங்கி வழிபட வேண்டும்.
பிள்ளையார் சதுர்த்திக்கு நிவேதனமாக, மோதகம் என்று சொல்லப்படும் பருப்பு, தேங்காய் வெல்ல பூர்ண கொழுக்கட்டை, உளுந்து கொழுக்கட்டை, சிமிலி என்று சொல்லப்படும் எள், வெல்லம் பூரணம் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டைகள்தான் பிரதான நிவேதனம். கொழுக்கட்டையின் மேலே இருக்கும் மாவுப் பொருள்தான் அண்டம். இனிப்பான பூரணம்தான் பிரம்மம். உலக வாழ்க்கையை பற்றற்றுக் கடந்து சென்றால் இனிப்பான கடவுளை அடையலாம் என்ற தத்துவத்தையும் உள்ளடக்கியது விநாயகருக்குப் படைக்கப்படும் கொழுக்கட்டை.
பருப்புப் பாயசம், அப்பம், லட்டு என்று எண்ணற்ற வகைகள் விநாயகருக்கு நிவேதனமாக வைக்கப்படும். இதைத் தவிர, அரிசிப்பொரி, பொட்டுக்கடலை, அவல், நாட்டுச் சக்கரை கலந்தும் நிவேதனமாக வைப்பார்கள். பழங்கள் என்று எடுத்துக் கொண்டால் வழக்கமான முக்கனிகளான மா, வாழை, பலா தவிரவும், கொய்யா, சாத்துக்குடி, மாதுளை, நாகப்பழம் என்று விதவிதமாக நிவேதனம் செய்யப்படும். ஆனைமுகத்தோனாகிய பிள்ளையாருக்கு ஒரு துண்டு கரும்பு கூட நிவேதனமாக வைப்பார்கள்.
நம்முடைய வாழ்க்கைப் போராட்டத்தில் ஏற்படும் இடையூறுகள் நீங்க, குறைகள், துக்கங்கள் விலகி ஓட, இந்த பிள்ளையார் சதுர்த்தியன்று பயபக்தியோடு, ஆனை முகத்தானை, வினை தீர்க்கும் விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டு சகல சௌபாக்கியங்களையும் பெறுவோம்.