
ஆதிகாலத்தில் கோவில்களை ஒன்பது வகைகளாகப் பிரித்து வைத்து வழிபட்டு வந்தனர். அவை,
1. பெருங்கோவில்:
பெரிய கோபுரம், பெரிய விமானம், உயர்ந்த சுவர்கள் அகலமான மண்டபம் முதலியவற்றுடன் விளங்கும் கோயில்.
2. கரக்கோயில்:
பெரிய மரங்களின் நிழலில் ஓடு போட்டு, அல்லது கூரை வேய்ந்து காணப்படும் கோயில்.
3. கொகுடிக் கோயில்:
'கொகுடி' என்றால் முல்லைக்கொடி என்று பொருள். முல்லைக் கொடிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள கோவில் கொகுடிக் கோவில் எனப்பட்டது.
4. இளங்கோயில்:
கர்ப்ப கிரகம் மட்டுமே இருக்கும் கோவில் இளங்கோயில் எனப்பட்டது.
5. ஞாழற்கோயில்:
மேற்கூரை இல்லாமல் மர நிழலில், மர மேடையில், மரக்கால்களை ஊன்றி அமைக்கப்பட்ட கோயில்.
6. ஆலக் கோயில்:
நான்கு புறமும் நீர் சூழ்ந்த இடத்தில் அமைந்த கோவில் ஆலக்கோயில் எனப்பட்டது.
7. மணிக்கோயில்:
அழகிய வண்ண சிற்பங்களுடன் சுதை வேலைபாடு அமைந்த கோயில்.
8. மாடக்கோயில்:
யானை முதலிய விலங்குகள் ஏற இயலாத படிகள் கொண்ட உயரமான இடத்தில் கருவறை அமைந்த கோயில்.
9. தூங்கானை மாடக் கோயில்:
தூங்குகின்ற யானையை போல வடிவத்தில் கட்டப்பட்ட கோயில்.
வித்தியாசமான வடிவில் கோவில்கள், கருவறைகள்
1. சிதம்பரம் பாண்டிய நாயகம் கோவிலில், முருகன் மயில் மீது வள்ளி, தெய்வானையுடன் அமர்ந்து காட்சி தருகிறார். இக்கோவில் யானைகளாலும், யாளிகளாலும் இழுக்கப்படும் தேர்வடிவில் அமைந்துள்ளது.
2. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சோமங்கலம் சோமநாத சுவாமி கோவிலில் நடராஜ சதுர தாண்டவ கோலத்தில் காட்சி தருகிறார். கோவிலும் சதுர அமைப்பில் உள்ளது.
3. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் கருவறை முக்கோண வடிவில் உள்ளது. இதற்கு மூன்றரை சுற்று பிரகாரம்தான்.
4. கேரள மாநிலம் திருச்சூர் வடக்கு நாத சுவாமி கோவில் கருவறை வட்ட வடிவில் உள்ளது. மற்ற சந்நிதிகளும் வட்ட வடிவமாகவே உள்ளன.
5. குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவில், சங்கு வடிவத்தில் உள்ளது.
6. திருச்சி அருகே உள்ள திருநெடுங்குளம் கோவில் கருவறை எண் கோண வடிவில் உள்ளது.
7. கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கருவறை, நான்கு சக்கரங்களுடன் பெரிய தேர் வடிவத்தில், கல்லில் அமைக்கப்பட்டுள்ளது.
8. கம்போடியா அங்கோர்வாட் எனும் இடத்தில் உள்ள விஷ்ணு கோவில், தாமரைப்பூ வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது.