புண்ணியத் தலமாகப் போற்றப்படும் உனகோடி!

சிவபெருமான்
சிவபெருமான்

திரிபுரா - இந்தியாவின் வட கிழக்கு மூலையில் பசுமை வளத்துடன் திகழ்கின்ற சிறிய மாநிலம். இது, பல அதிசயங்களையும் ஆச்சர்யங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

அந்த மாநிலத்தில் ஓங்கிய பெருங்காடு. அதில் மலைகள் சூழ்ந்த பள்ளத்தாக்கு, மலைச் சரிவுகள், பாறைகள் - அதில் புடைப்புருவ சிற்பங்கள் (bas & relief) அதனூடே சலசலக்கும் நீரோடைகள். அங்கே தனித்து நிற்கும் சிலைகளும் பரவிக் கிடக்கின்றன. இன்னும் பக்கத்துக் காடுகளில் பல மறைந்தும், புதைந்தும் கிடக்கின்றனவாம். மொத்தம் எவ்வளவு? யாரும் கணக்கிட்டதில்லை. ஒரு கோடிக்கு ஒன்று குறைவாக (உனகோடி என்ற வார்த்தையின் பொருள்) இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இதற்கு இரண்டு கதைகள் உள்ளன. ஒரு சமயம் சிவபெருமான் ஒரு கோடி தேவர்களுடன் கைலாயம் செல்லும் வழியில் இங்கு இளைப்பாறினார். பரிவாரங்களும் இரவு அங்கேயே தங்க விரும்பின. அனுமதி வழங்கப்பட்டது - மறுநாள் சூரிய உதயத்துக்கு முன்பு கிளம்பிவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன். ஆனால், மறுநாள் விடியலில் மகேசன் மட்டுமே எழுந்தார். மற்றவர்கள் எழவில்லை.

சினமுற்ற ஈசன், அனைவரும் சிலைகளாகி அங்கேயே இருக்கும்படி சபித்தார். அதனால்தான், இங்கு 99,99,999 சிற்பங்கள் உள்ளனவாம்!

அடுத்தது, பரமனுக்கும் பாமரனுக்கும் இடையே உள்ள கதை. இந்த இடத்தில் உள்ள எல்லா சிற்பங்களும் ‘குல்லு கம்ஹார்’ என்ற சிற்பியால் வடிக்கப்பட்டவை. அவன் சக்தி உபாசகன். ஒருமுறை சிவ கணங்களுடன் பார்வதி-பரமேஸ்வரர் இந்த வழியாக வந்தனர். அப்போது தன்னையும் அழைத்துச் செல்லும்படி வேண்டினான் குல்லு. ஈசனால் இதை ஏற்க முடியவில்லை. உமையவள் ஒரு உபாயம் செய்தாள். இரவு முடிவதற்குள் கோடி கயிலை பதியின் உருவங்களை பொறிக்கச் சொன்னாள். ஆனால், விடிவதற்குள் கோடிக்கு ஒன்று குறைவாகவே சிற்பியால் செதுக்க முடிந்தது. சிவனார் பிடித்தார் ஓட்டம்.

பின்னணி எப்படி இருந்தாலும் இவை எப்படி, யாரால் செதுக்கப்பட்டன என்பது மர்மமாகவே உள்ளது. சரித்திர சான்றுகள் இல்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய புடைப்புச் சிற்பங்களாக கருதப்படும் இவை 30-40 அடி உயரம் உள்ளவை. இங்குள்ள புடைப்புச் சிற்பங்கள் முற்றுபெறாத கச்சாதனத (Rawness) தன்மை வாய்ந்தனவாக உள்ளன. இவற்றின் பற்கள், கண்கள், உடற் கூரமைப்பு , அலங்காரம் எல்லாம் பழங்குடி மக்களின் மரபை (tribal) சார்ந்த வையாக உள்ளன.

இம்மலைப் பிரதேசத்தின் ஒவ்வொரு மூலைக்கும் செல்வதற்கு மேலும் கீழுமாக, குறுக்கும் நெடுக்குமாக ரிப்பன் போன்ற படிக்கட்டுகள் உள்ளன. மலைகளை இணைப்பதற்காக பாலங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உலகத்தின் பார்வையில் படாத ஏதோ ஒரு பழைய புனிதத் தலத்தில் கால் வைத்தாற்போன்ற பிரமிப்போடு மெய்சிலிர்க்கின்றது. அந்தப் பகுதி முழுவதிலும் சிற்றாறுகள், நீரூற்றுகள் இருந்ததற்கான அடையாளங்கள் தென்படுகின்றன.

பெண் தெய்வங்கள்
பெண் தெய்வங்கள்

இன்றும் இங்கு ஈசனுக்கு காலையும் மாலையும் பூஜைகள் நடைபெறுகின்றன. பூசாரிகள் கொஞ்சம் உயரத்தில் குடிசை போட்டு வாழ்கிறார்கள். நமக்கும் ஆராதனை செய்வித்து பிரசாதம் வழங்குகிறார்கள்.  இந்த உருவங்களை மேம்போக்காக நோக்கும்போது ஒருவிதமான அதிர்ச்சிதான் ஏற்படுகிறது. தலையும், பெரிய காதுகளும் புத்தரின் முகத்தை நினைவுறுத்து கின்றன. ஆனால், சற்று மேலே பார்க்கும்போது நெற்றிக்கண், பெரிய காதணிகள்,பழங்குடியை போல சற்றே பகட்டான மீசையும் பௌத்தத்துக்கு ஒவ்வாத அகன்ற பல்லிளிப்பும், தமிழனின் சிற்பக் கலையை காட்டுகிறது. 10 அடி நீளமுள்ள மணி மகுடம் இந்து மதத்தை பறைசாற்றும். அருகில் இதுபோன்று அமைந்துள்ள இரு உருவங்களும் இந்த அற்புத பள்ளத்தாக்கின் மைல் கற்களாக அமைகின்றன. பௌத்த பாரம்பரியத்தில் வந்த திரிபுர மலைவாழ் பழங்குடியினரிடையே ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் நிரந்தரமாகக் குடியேறி விட்டன. அதனால், இந்த சிற்பக்கலையில் பௌத்தம் இழையோடுவதைக் காணலாம்.

சற்று மேல் நோக்கினால் நிறைய உருவங்கள் சிறியதும் பெரியதுமாய் சிதறிக் கிடக்கின்றன. அவற்றில் புன்சிரிப்புடன் தலையில் இறகுகளான கிரீடத்துடன் ஒரு வில்லாளியும் வியத்தகு ஆற்றலுடன் கூடிய இரு பிரம்மாண்டமான பெண் உருவங்களும் கவனத்தை ஈர்க்கின்றன. வடிவமைப்பை காணும் போது இவை 9-12 ஆம் நூற்றாண்டுகளை சார்ந்தவையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ரோடு ரோலர் தெரியும்; கிரிஸ்டல் ரோலர் தெரியுமா?
சிவபெருமான்

இப்போது கீழே இறங்குகிறோம். ஓடை ஒன்று அருவியாக விழுகிறது. அந்தப் பறையில் பெரிய அமர்ந்த நிலையில் கணபதி உருவம். அருகிலேயே நின்ற நிலையில் கணேசரின் உருவங்கள். இவற்றுக்கு சற்றே இடப் பக்கத்தில் இன்னும் நேர்த்தியுடன் விஷ்ணுவின் உருவம். இவை போல இக்காடுகளில் இன்னும் எவ்வளவு ஒளிந்திருக்கின்றனவோ... எவ்வளவு காணாமல் போயினவோ என்று தோன்றுகிறது. இங்கு வழிபடப்பட்டு நடு நாயகமாக இருக்கும் சிவனின் பெயர் ‘உனகோடீச்வர பைரவர்.’ இங்கிருக்கும் மற்ற தெய்வங்கள், துர்கை, கங்கை, கௌரி, வீரபத்திரர், ராமர்-சீதா, கின்னரர், பார்வதி தபஸ் மற்றும் பல உற்று நோக்கத்தக்கவை, சதுர்முக லிங்கங்கள், கல்யாண சுந்தரமூர்த்தி முதலியவை.

உனகோடி சிவபெருமான்...
உனகோடி சிவபெருமான்...

இன்னொரு சிறப்பம்சம், ஜடா முடியுடன் இருக்கும் சிவனின் தலை. அதில் ஒரு ஓட்டை. அதன் வழியாக தண்ணீர் வழிந்தோடுகிறது. இது சிவனின் தலையிலிருந்து கங்கை வழிந்தோடுவதைக் குறிப்பது போல் அமைந்துள்ளது. நரசிம்மர், ஹரன்-கௌரி, ஹரிஹரன், அனுமன், பஞ்சானனன் உருவங்களும் காணப்பட வேண்டியவை. இளவேனிற்காலத்தில் இங்கு ‘அசோகாஷ்டமி விழா’ நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வழிபாட்டுக்காக கூடுகின்றனர்.

பழைய கோயிலின் சிதிலமடைந்த பாகங்கள் ஆங் காங்கே தென்படுகின்றன. ஆதலில், இது ஒரு திருத் தலமாகவே இருந்திருக்கிறது. இப்போதும் இங்கு வர மேற்கொள்ளும் யாத்திரை புனிதமாகவே கருதப்படு கிறது. ஏன் இது இன்னும் பிரபலமாகவில்லை என்று கேள்வி எழும்போதே, ‘வெளிச்சத்துக்கு வராமல் இருப்பதுதான் இதன் மாசு படியாத அழகைப் பாதுகாக்கிறது’ என்ற திருப்தியும் ஏற்படுகிறது.

செல்லும்வழி: அகர்தாலாவிலிருந்து 180 கி.மீ., அகர்தாலாவிலிருந்து ஷில்லாங் நெடுஞ்சாலை (Nஏ-44) வழியாகவே செல்ல முடியும்.

கௌஹாத்தியிலிருந்து அகர்தலாவுக்கு ரயில் வசதி உண்டு. கொல்கத்தாவிலிருந்து அகர்தலாவுக்கு விமான வசதி உண்டு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com