
யுனஸ்கோ ஆசிய – பசிபிக் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் விருதுகள் வழங்கும் அமைப்பு, தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தியதற்காக தஞ்சாவூர் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு சிறப்பு விருதை அறிவித்தது, சமீபத்தில் அனைவரையும் கவர்ந்த செய்திகளில் ஒன்று. இந்தக் கோவிலில் அப்படி என்ன சிறப்பு?
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், மாமன்னர் விக்கிரம சோழர் காலத்தில் கட்டப்பட்ட 1,300 ஆண்டுகள் பழமையானது என்பதே சிறப்புதானே?
துர்க்கை ஆட்சி செய்யும் இத்தலப் பெருமை மிகச் சிறப்புடையதாகும். பாதிரிவனம் சூழ்ந்த இடத்தில் முன்பே அமைந்திருந்த இத்திருக்கோயில் இராஜராஜ சோழன் காலத்திலும் பின் குலோத்துங்க சோழன் காலத்திலும் நிர்மாணிக்கப் பட்டு, பின்னர் ஆட்சி செய்த விக்ரம சோழப்பேரரசனாலும் திருப்பணி செய்யப்பட்டதாக சான்றுகள் கூறுகின்றன.
இக்கோயில் தென் திருக்காளத்தி என்றும் அழைக்கப்படுகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள திருக்காளத்தி என்ற தலமானது காற்று பூத தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதைப் போல, மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளுடன் விளங்கும் இக்கோயில் அதற்கு இணையாக தென் திருக்காளத்தியாக விளங்குவதும் சிறப்பு.
அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் திகழும் இக்கோயில் அன்று ஏழு திருச்சுற்றுகளுடன் இருந்ததாகவும் தற்போது மூன்று திருச்சுற்றுகளே உள்ளதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள சரபேசுவரர் சன்னதி கும்பகோணம் வட்டத்திலுள்ள சரபேசுவரர் சன்னதிகளில் முதலாவது என்ற பெருமையும் சிறப்பானது.
இங்கு கருவறை மூலவர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் மற்றும் அம்பாள் ஸ்ரீ செளந்தரநாயகி. இருவரும் பக்தர்கள் வேண்டும் மகத்தான பலன்களைத் தரும் தெய்வங்களாக போற்றப்படுகின்றனர்.
அம்பாள் பரமேஸ்வரி, இவ்வாலயத்தின் தல விருட்சமான பாதிரி பூக்களைக் கொண்டு மூலவரை பூஜித்து, ஈசனின் அருள் பெற்று, தன்னுடைய தோஷம் நீங்கப்பெற்ற ஒரே தலம் எனப் போற்றப்படுகிறது.
சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூன்று தேவிகளும் ஒன்று சேர்ந்த சக்தியான ஸ்ரீசிவதுர்க்கையம்மன் இவ்வாலயத்திற்கு வருகை புரிந்த போது தன்னுடைய சக்தியான பார்வதியை "சௌந்தரமாக வா" என சிவபெருமான் அழைக்க பார்வதி அழகிய சொரூபமாக வெளிப்பட்டதால் இத்தல இறைவிக்கு சௌந்தர்ய நாயகி (சௌந்தரம் என்றால் அழகு) எனப்பெயர் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
மேலும் பல ஆன்மீக வரலாற்று சிறப்புமிக்க இந்தக் கோயிலுக்கு இறுதியாக எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்றே அறியப்படாத நிலையில் ரூ.5 கோடியில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 2023-ல் வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தி பாதுகாத்தமைக்காக கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலை 2024-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுக்கு தேர்வு செய்துள்ளது என்பதுதான் இத்தலத்தின் மாபெரும் சிறப்பு.