
இந்தியாவில் மூதாதையர்களுக்காகச் செய்யப்படும் முன்னோர் கடன் சடங்கின் போது அல்லது இறந்த மூதாதையர்களுக்கான வேண்டுதலின் போது, மரபு வழியில் தருப்பைப் புல் கொண்டு செய்யப்படும் மோதிரம் அணிவது வழக்கமாக இருக்கிறது.
இச்சடங்குகளில் பயன்படுத்தும் தருப்பைப் புல் மோதிரத்துக்குச் சமமான மோதிரமாக, பையனூர் புனித மோதிரம் அல்லது பையனூர் பவித்திர மோதிரம் (Payyannur Pavithra Ring) பயன்படுத்தப்படுகிறது.
நவீன பவித்திர மோதிரம் தங்கத்தால் ஆனது. மோதிரத்தின் வடிவம் தனித்துவமான ஒரு முடிச்சு போல் தோற்றம் தருவதாகும். தற்காலத்தில் செம்பு, ஐம்பொன், வெள்ளி ஆகியவையும் மோதிரம் செய்யப் பயன்படுத்தப்படுகிறது.
புனித மோதிரத்தின் தோற்றம், கேரளாவிலுள்ள பையனூர் சுப்பிரமண்யர் கோயிலின் வரலாற்றுடன் தொடர்புடையது.
இக்கோயிலில் புனித சடங்குகளைச் செய்யும் போது முன்பு தருப்பைப்புல்லால் ஆன பவித்ர மோதிரங்கள் பயன்படுத்தப்பட்டன.
பின்னர் நீண்ட நாட்கள் நீடித்து இருக்க வேண்டுமென்ற நோக்கத்திற்காக பூசாரிகள் தங்க மோதிரங்களுக்கு மாறினர்.
ஒரு பாரம்பரியக் கைவினைஞருக்கு, ஒரு தங்க மோதிரம் செய்ய ஒருநாள் முழுவதும் ஆகும்.
இந்தப் புனித மோதிரத்தைச் செய்யும் கைவினைஞர் தனது வாழ்நாள் முழுதும் இறைச்சி சாப்பிடவோ, மது அருந்தவோ கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.
பையனூரில் உள்ள சுப்பிரமண்யர் கோவிலில் புனிதப்படுத்தப்பட்ட பின்னரே வாடிக்கையாளருக்கு இந்த மோதிரம் வழங்கப்படுகிறது.
கேரளாவிலுள்ள பையனூர் இந்துக்களின் நம்பிக்கையின்படி, புனித மோதிரத்தை அணிவது பிரம்மா, சிவன் மற்றும் விஷ்ணு என்ற இந்து மதத்தின் முப்பரும் கடவுள்களின் சக்தியை எழுப்ப முடியும்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் மோதிரத்தை அகற்ற வேண்டும்.
பையனூர் புனித மோதிரத்தை வலது கையில் மோதிர விரலில் மட்டுமே அணிய முடியும்.
இந்த மோதிர வளையத்தின் வெளிப்புற மேற்பரப்பில் மூன்று கோடுகள் உள்ளன. அவை, மனித உடலின் ஐடா, பிங்கலா மற்றும் சுஷும்னா என்ற மூன்று நாடிகளைக் குறிக்கின்றன.
இந்த மூன்று நாடிகளின் அடிப்பகுதியில் குண்டலினி சக்தி அமைந்துள்ளது. மேலும், இது மனித உடலில் சக்தி வாய்ந்த உணர்ச்சிகளைத் தூண்டும் என்றும், மூன்று நாடிகளின் கலவையானது மனிதர்களில் உள்ள உயிர் சக்தியை அல்லது 'குண்டலினி சக்தியை' எழுப்பக்கூடும் என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். பையனூர் மோதிரம் இதனை அடிப்படையாகக் கொண்டதே என்கின்றனர்.
பையனூர் புனித மோதிரம் பயன்படுத்தும் நபருக்கு அதிக அளவிலான அறிவொளியையும், உத்வேகத்தையும் கொண்டு வர முடியும் என்று பொதுவாகக் கருதப்படுவதால், இதற்கு வணிக வழியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
புனித மோதிரத்தின் தரம் மற்றும் வரம்பிற்கு ஏற்ப விலையில் வேறுபாடுகள் இருக்கின்றன.
உலகம் முழுவதும் உள்ள பல அருங்காட்சியகங்களில் பையனூர் புனித மோதிரம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.