
ராமாயாணத்தில் பெரிதும் பேசப்படாத கதாபாத்திரம் என்றால், அது லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளா ஆவார். என்னதான் அரண்மனையில் ராஜபோகமாக இருந்தாலும் தன் கணவனை 14 ஆண்டுகள் பிரிந்து இருந்த ஊர்மிளாவின் தியாகத்தை பற்றி யாரும் பெரிதாக அறிந்திருக்கமாட்டார்கள். அப்படி ஊர்மிளா செய்த தியாகம் என்னவென்பதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
பதினான்கு ஆண்டுகள் உறங்கி ராமன் போரில் வெற்றி பெற காரணமாக இருந்தார் லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளா என்று சொன்னால் நம்பமுடிகிறதா? வனத்திற்கு போவதற்காக ராமனும், சீதாதேவியும், லக்ஷ்மணனும் தயாராகிக் கொண்டிருந்த சமயம் ஊர்மிளா ராஜ அலங்காரம் செய்துக்கொண்டு நின்றாள். இதைப்பார்த்த லக்ஷ்மணன் அவள் மீது அதிக கோபத்துடனே காட்டுக்கு சென்றான்.
லக்ஷ்மணன் தன் மீது அதிக கோபத்துடன் சென்றால் தான். தன்னுடைய நினைவு சிறிதும் வராமல் அண்ணன், அண்ணியைக் காக்க முடியும் என்று எண்ணினால் ஊர்மிளா. பதினான்கு ஆண்டுகள் ஒரு நொடியும் தூங்காமல் லக்ஷ்மணன் அவர்களை காவல் காக்க வேண்டும் என்பதற்காக ஊர்மிளா தூக்கத்தின் கடவுளான நித்திராதேவியிடம் வேண்டினாள். ஆனால், நித்திராதேவி அதற்கு சம்மதிக்கவில்லை. தன்னுடைய கணவரின் கடமையில் எந்த தவறும் வந்துவிடக்கூடாது என்று அவருடைய தூக்கத்தையும் சேர்த்து தானே தூங்கும் வரத்தை நித்ராதேவியிடம் பெற்றுக்கொண்டாள்.
ராவணனின் மகன் இந்திரஜித் மிகபெரிய வீரனாவான். அவனை எளிதாக எவராலும் வதைக்க முடியாது. இதற்கான முக்கிய காரணம், ‘எவன் ஒருவன் பதினான்கு ஆண்டுகள் தூங்காமல் இருக்கிறானோ அவனுடைய கையாலேயே இந்திரஜித்தின் மரணம் நிகழும்’ என்ற வரத்தை பெற்றிருந்தான். அதனால் லக்ஷ்மணனால் இந்திரஜித்தை எளிதாக வதைக்க முடிந்தது.
இதுவே ராமர் போரில் வெற்றியடைய மிகப்பெரிய காரணமாகும். இது சாத்தியமானது ஊர்மிளாவின் தியாகத்தினால் ஆகும். ராமர் விஷ்ணுவின் அவதாரம், சீதை லக்ஷ்மிதேவியின் அவதாரம், லக்ஷ்மணன் ஆதிசேஷனின் அவதாரம். இவர்கள் மூவரும் தன் கடமையினால் செய்த தியாகத்தை விட மனிதப் பிறவியான ஊர்மிளா தன் கணவனின் மீது இருந்த காதலால் செய்த தியாகமே மிகப்பெரியதாகும்.