

மகாராஷ்டிராவின் சத்தாரா (Satara) மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான நடராஜர் கோவில் இது. இது தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் கோயிலின் பிரதியாக இருப்பதால் 'உத்தர சிதம்பரம்' என்று அழைக்கப்படுகிறது. இது பஞ்சபூத தலங்களில் ஒன்றான 'ஆகாய' ஸ்தலத்தை குறிக்கிறது. இது காஞ்சி மகாபெரியவரின் விருப்பப்படி, கிருஷ்ணா மற்றும் வெண்ணா நதிகளின் சங்கமத்தில் 1985 இல் நிறுவப்பட்டது.
இப்பகுதியை சுற்றி ஏழு(சத்) மலைகள் (தாராஸ்) இருப்பதால் இப்பெயர் பெற்றது. சத்தாராவில் உள்ள உத்தர சிதம்பரம் நடராஜர் கோவில், தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தின் நடராஜர் கோவிலைப் போலவே கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற 4 மாநிலங்களின் கட்டடக்கலை பாணிகளின் கலவையில் அமைந்துள்ளது. சிதம்பரம் கோவிலின் கோபுரங்களை ஒத்த அழகான கோபுரங்களை கொண்டு விளங்குகிறது.
1980 ஆம் ஆண்டு சத்தாராவிற்கு வருகை தந்த ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் சிதம்பரம் நடராஜர் கோவிலின் மாதிரியில் சத்தாராவில் நடராஜருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று விரும்ப, சங்கராச்சாரியாரின் விருப்பத்தை ஏற்று சத்தாராவை சேர்ந்த சாமண்ணா என்பவர் கோவிலை கட்டுவதற்கு போதுமான நிலத்தை நன்கொடையாக வழங்கினார்.
இங்கு நடராஜரைத் தவிர சிவலிங்கம், ஹனுமான், ராதாகிருஷ்ணன், கணபதி, நவகிரகங்கள், ஆதிசங்கரர் மற்றும் ஐயப்பன் சன்னதிகள் உள்ளன. இங்கு சிதம்பரம் தீட்ஷிதர்கள் சுழற்சி முறையில் பூஜைகள் செய்கிறார்கள். இக்கோவிலுக்கு அருகிலேயே காஞ்சி காமகோடி பீடத்தால் நடத்தப்படும் வேத பாடசாலையும் உள்ளது. இக்கோவில் காஞ்சி சங்கர மடத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரி வீற்றிருக்கும் சித்சபைக்கு பின்னால் அமைந்துள்ள நான்கு தூண்கள் 4 வேதங்களை குறிக்கும் வகையில் அமைந்துள்ளன. பிரதான மண்டபத்தின் 18 தூண்களையும், கோவிலில் உள்ள மற்ற 6 தூண்களையும் முறையே இந்து மதத்தின் 18 புராணங்கள் மற்றும் 6 சாஸ்திரங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்தை சுற்றியுள்ள நடராஜரின் 108 கரணங்களின்(நடன நிலைகள்) கல் சிற்பங்களைக் காணலாம். இவை ஒவ்வொன்றும் பரதநாட்டிய நடன வடிவத்தின் வெவ்வேறு முத்திரையை சித்தரிக்கின்றன.
இக்கோவிலில் நாடு முழுவதிலும் இருந்து கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக பாரம்பரிய நடன கலைஞர்கள் வருகை தருகின்றனர். புகழ்பெற்ற சிற்பி எம்.எஸ். கணபதி ஸ்தபதி மற்றும் அவரது சகோதரர் எம். முத்தைய ஸ்தபதி ஆகியோர் சிதம்பரம் நடராஜர் கோவிலின் அதே வடிவமைப்பு மற்றும் கோபுரங்களுடன் வடிவமைத்துள்ளனர்.
இங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அஜிங்க்யதாரா கோட்டை (Ajinkyatara Fort) அமைந்துள்ளது. அதையும் சென்று பார்வையிடலாம்.
பார்வையிட சிறந்த நேரம்:
கோடை காலமான மார்ச் முதல் ஜூன் வரை வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயரும் என்பதால் அச்சமயத்தில் செல்வதை தவிர்ப்பது நல்லது. கோவில் காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
இக்கோவில் சத்தாராவையும் சோலாப்பூரையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை NH4ல் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் சத்தாரா ரயில் நிலையம். சத்தாரா பேருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆட்டோ, டாக்ஸி வசதிகள் உள்ளன.