சாப விமோசனமும், வையகம் போற்றும் வைகாசி விசாகமும்!

சாப விமோசனம் நிகழ்வு...
சாப விமோசனம் நிகழ்வு...

வைகாசி விசாகத் திருவிழா சமயம் திருச்செந்தூரில் நடக்கும் ‘சாப விமோசனம்’ நிகழ்வு முக்கியமானதாகும்.

அது என்ன  சாப விமோசனம்?

பராசர முனிவருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளும் சுட்டித்தனம் செய்யும் வால்கள் எனலாம். ஒரு சமயம் அருகே இருக்கும். குளத்திற்குச் சென்று குளிக்கையில், குதித்து கும்மாளமிட நீர் அசுத்தமாக, அதில் வாழ்ந்து வந்த மீன்களும், தவளைகளும் வேதனையடைந்தன.

“தண்ணீர் கடவுளுக்குச் சமம். நீரை வழிபட வேண்டுமே தவிர அசுத்தப்படுத்துதல் கூடாது. வெளியே வாருங்கள்!” என பராசர முனிவர் கூறியும் கேட்காமல் அவர்கள் விளையாட, அநேக மீன்கள் இறந்து போயின- கோபமடைந்த பராசர முனிவர், தன்னுடைய ஆறு புதல்வர்களையும் மீன்களாக மாறக் கடவது என் சாபமிட்டார்.

தவறுக்கு வருந்திய புதல்வர்கள், சாப விமோசனம் எப்போது கிடைக்கும் என முனிவரிடம் வேண்டுகையில், பார்வதி தேவி கடாட்சம் மூலம் விமோசனம் கிடைக்குமெனக் கூறினார்

மீன்களாக மாறியவர்கள் பலகாலம் நீரிலேயே வாழ்ந்து துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.

ஒரு நாள் சிவலோகத்தில் அமர்ந்திருந்த உமையாள் தேவி, மடியினில் பால முருகனை அமர்த்திக்கொண்டு, தங்கக் கிண்ணத்தில் இருந்து ஞானப்பாலை எடுத்து ஊட்டுகையில் அதிலிருந்து சிறு துளிப் பால் எதேச்சையாக இந்த மீன்கள் வாழ்கின்ற குளத்தில் விழ, மீன்கள் அதைப் பருக, ஆறு புதல்வர்களும் முனிவர்களாக மாறினர்.

அச்சமயம், ‘திருச்செந்தூர் சென்று நீங்கள் ஆறு பேரும் தவம் செய்யுங்கள். முருகப் பெருமானின் அருள் கிடைக்குமென’ அசரீரி கேட்க ஆறு பேர்களும் அவ்வாறே செய்தனர். வைகாசி விசாக தினத்தன்று, நிறைந்த பெளர்ணமி தினம், முருகனின் அருள் அவர்களுக்குக் கிடைத்தது.

திருச்செந்தூர் கோயிலில் இருக்கும் வசந்த மண்டபத்திலுள்ள நீர்தொட்டியில் ஆறு மீன் பொம்மைகளைப் போடுவது; ஞானப்பாலை அருந்தி சாப விமோசனம் அடைந்தது; ஆறு முனிவர்களாக வெளியே வந்தது என பராசர முனிவரின் புதல்வர்களை நினைவுபடுத்தும் வகையில் ‘சாப விமோசனம்’ நிகழ்வு விமர்சையாக நடைபெறும். வேறு எந்த முருகன் கோயிலிலும் இதுமாதிரி கிடையாது.

முருகப் பெருமான்
முருகப் பெருமான்

முருகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாகத் திருநாளன்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும்.

உலகத்திலுள்ள உயிர்களனைத்தையும் உய்விக்கும் பொருட்டு சிவனார் நடத்திய திருவிளையாடல் மூலம் ஆறுமுகப் பெருமான் அவதரித்த வைகாசி விசாக தினத்தன்று முருகப் பெருமானை பக்தர்கள் நினைத்து விரதமிருந்து அபிஷேகம் மற்றும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம்.

பூஜை வழிபாடு முறை

பூஜையறையை நன்றாக சுத்தம் செய்து கோலமிட்டு அதன் நடுவே ஐந்து முக குத்துவிளக்கை வைத்து, சந்தனம் மற்றும் குங்குமம் இட வேண்டும். விளக்கில் ஐந்து வகையான கலந்த எண்ணெயை விட்டு, நல்ல பஞ்சுத்திரி போட்டு ஏற்ற வேண்டும். முருகப் பெருமான், விநாயகர், சிவன் – பார்வதி படங்களை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

முதலில் விநாயகரை வழிபட்டு பிறகு முருகனுக்கு பிரியமான செம்பருத்தி, அரளி, சிகப்பு ரோஜா போன்ற மலர்களால் முருகரை பூஜித்து கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும். சிறு பருப்பு பாயாசம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சை சாதம் மற்றும் ஐவகை பழங்களை இறைவன் முன்பு படைத்து, நிவேதனம் செய்து தீபாராதனை காட்டி, பிறகு நிவேதன பிரசாதத்தை எல்லோருக்கும் விநியோகித்தல் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஆட்டுப்பால் அருந்துவதால் ஒவ்வாமை ஏற்படுமா?
சாப விமோசனம் நிகழ்வு...

இதர வழிபாடுகள்

நல்லெண்ணெய், பசும்பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், பன்னீர், தேன், திருநீறு, மாம்பழம் மற்றும் எலுமிச்சை சாறுகள் கொண்டு முருகரை அநேகர் அபிஷேகம் செய்வார்கள். ஒவ்வொருவிதமான அபிஷேகத்திற்கும் ஒவ்வொருவிதமான பலன் கிடைக்குமெனக் கூறப்படுகிறது.

பல்வேறு முருகன் திருத்தலங்களில் பக்தர்கள், பால் காவடி, பால்குடம், தேன் காவடி, மச்சக்காவடி எடுத்தும் வாயில் அலகு குத்தியும் வழிபடுவது வழக்கம்.

வையகம் போற்றும் வசந்தகால வைகாசி விசாகத்தன்று எம்பெருமான் முருகனை மனதார எண்ணி வழிபட்டு அவன் அருள் பெறுவோமாக!

‘ஆறு முகமான பொருள் நீ யருளல் வேண்டும்!

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!’

வெற்றிவேல் முருகருக்கு அரகரோகரா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com