

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்திற்குள் அமைந்த வல்லக்கோட்டை முருகன் கோவில் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இங்கு முருகப்பெருமான் 7 அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். அருணகிரிநாதர் இத்தலம் குறித்து பாடல்கள் பாடியுள்ளார். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மூலவர் சுப்ரமணியசுவாமி
தல விருட்சம் பாதிரி மரம்
தீர்த்தம் வஜ்ர தீர்த்தம்
தல சிறப்பு
மூலவர் கிழக்கு நோக்கியபடி ஏழடி உயரத்தில் கோடையாண்டவர் என அழைக்கப்படும் சுப்பிரமணியசுவாமி வள்ளி, தேவசேனாவுடன் அருள் புரிகிறார். முருகனுக்கு எதிரே இரட்டை மயில் உள்ளது. வல்லன் என்ற அசுரனை வதம் செய்த பின் அந்த அசுரனின் வேண்டுகோளுக்கிணங்க முருகப்பெருமான் அந்த ஊருக்கு 'வல்லன் கோட்டை' என்று பெயர் வழங்கியதாகவும் காலப்போக்கில் மருவி வல்லக்கோட்டை என்றானதாகவும் கூறப்படுகிறது.
ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ள இக்கோவிலில் உள்ள அர்த்தமண்டபத்தில் தூண்களில் காமாட்சி தவம் செய்வது போன்ற சிற்பங்களும், அனுமனை ராமர் தழுவிய சிற்பங்களும் வெகு அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆலயத்தின் உட்பிரகாரத்தில் அகத்தியர், அருணகிரிநாதர், பட்டினத்தார், பாம்பன் சுவாமிகள், வள்ளலார் போன்றோரின் திருமேனிகள் உள்ளன.
இத்தலத்தில் ஒவ்வொரு வியாழன் அன்றும் முருகப்பெருமானுக்கு வைரம் பதித்த வேல் சார்த்தப்படுகிறது. வியாழக்கிழமை இரவு தங்கி, வஜ்ர தீர்த்தத்தில் நீராடி வெள்ளிக்கிழமை வழிபாடு செய்வதனால் வல்வினைகள் போய் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஏழு வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட, இழந்த செல்வம் திரும்ப கிடைக்கும் என்பது நம்பிக்கை.
***********
இந்திரன் இத்தலத்தில் தனது வஜ்ராயுதத்தை ஊன்றி திருக்குளத்தை உண்டாக்கி, அந்த நீரால் முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு தனது இஷ்ட சித்திகளை பெற்றான். எனவே, இத்தல தீர்த்தம் வஜ்ரத் தீர்த்தம் என்றும், இந்திர தீர்த்தம் என்றும் வழங்கப்படுகிறது.
அருணகிரிநாதர் தலயாத்திரை செய்து திருப்போரூர் முருகனை வழிபட்டு மறுநாள் திருத்தணி செல்ல நினைத்துக் கொண்டு இரவில் தூங்கும் பொழுது கனவில் கோடை நகர் குமரன் தோன்றி, "வல்ல கோட்டையினை மறந்தனையே" என்று கூறி மறைந்ததாகவும், கண் விழித்த அருணகிரிநாதர் திருத்தணி செல்வதற்கு முன்பு வல்லகோட்டை முருகனை தரிசித்து 8 திருப்புகழ் பாடல்களை பாடியதாகவும் வரலாறு.
இலஞ்சி தேசத்து பகீரதன் என்னும் மன்னன் நாரதரை ஆணவத்தால் மதிக்காமல் அவமதித்தான். கோபம் கொண்ட நாரதர், கோரன் என்னும் அசுரனிடம் "தன்னை யாரும் வெல்ல முடியாது என்று எண்ணும் பகீரத மன்னனை வெற்றி கொண்டால்தான் உன்னுடைய திக்விஜயம் முழுமை அடையும்" என்று கூற, பகீரத மன்னன் மீது போர் தொடுத்து அவனைத் தோற்கடித்தான் கோரன்.
நாட்டையும் செல்வங்களையும் இழந்து காட்டிற்குச் சென்றவன் தன் தவறை எண்ணி மனம் வருந்தி மன்னிக்கும்படி நாரதரிடம் வேண்ட அவரோ துர்வாச முனிவரிடம் முறையிட்டால் நல்ல வழி பிறக்கும் என்று கூறி அனுப்பினார்.
துர்வாசரோ வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து முருகனை வழிபடச் சொல்ல, அதன்படி வழிபாடு செய்து அழியாத பேறு பெற்றான் பகீரதன். அப்படி பகீரதன் வழிபட்ட சிறப்புக்குரிய ஆலயமே இந்த வல்லக்கோட்டை முருகன் ஆலயம்.
நேர்த்திக் கடன் மற்றும் திருவிழாக்கள்
பால்குடம் எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல் போன்றவற்றை நேர்த்திக் கடனாகவும், காது குத்துதல், திருமணங்கள் ஆகியவைகளை இங்கு செய்வதாகவும் வேண்டிக் கொண்டு செய்கிறார்கள். கந்த சஷ்டி, மாதாந்திர கிருத்திகை, ஆடி கிருத்திகை, தமிழ் புத்தாண்டு, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறுகின்றன.