

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வள்ளியூரில், மலையைக் குடைந்து குடவரை கோவில் அமைத்திருக்கிறார்கள். இது சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான குடவரை கோவிலாகும். "குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்" என்பது முருகப் பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில், முருகப்பெருமான் வள்ளியூர் பூரணகிரி குகைக் கோவிலில் வள்ளி, தெய்வானையுடன் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய குகைக் கோவில் இதுதான். இந்த கோவிலில் கருவறையை வலம் வர முடியாது; கிரிவலம் மட்டுமே வர வேண்டும். இங்கு வள்ளியம்மைக்குத் தனிச் சன்னதி உண்டு. இத்தலத்தில் முருகப்பெருமான் 'சுப்பிரமணிய சுவாமி' என்று அழைக்கப்படுகிறார்.
திருத்தணியில் வள்ளியை மணம் முடித்த முருகப்பெருமான், மகேந்திர மலையின் கிழக்குப் புறத்தில் உள்ள இந்தக் குன்றில் குடியேறியதால் இந்த ஊர் 'வள்ளியூர்' என்று அழைக்கப்படுகிறது. அந்த மலையின் துண்டுகள் விழுந்து உருவான மலையே வள்ளியூர் என்றும் கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் கிரவுஞ்ச அரசன் மலை உருவில் இருந்தான். அகத்திய முனிவரின் சாபம் காரணமாக, முருகப்பெருமானின் வேல் பட்டு கிரவுஞ்ச மலை மூன்று துண்டுகளாகச் சிதறியது. அந்த அசுரனின் தலைப் பாகம்தான் வள்ளியூர் குன்று என்று புராணங்கள் கூறுகின்றன.
மற்ற கோவில்களில் முருகப்பெருமான் குன்றின் மீது நின்று அருள்பாலிப்பது வழக்கம்; ஆனால், இங்கு குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பதே இதன் தனிச் சிறப்பாகும். அகத்திய முனிவர் வழிபட்ட பெருமைமிக்க தலம் இது. மேலும், அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலமாகவும் இந்த வள்ளியூர் முருகப்பெருமான் கோவில் விளங்குகிறது.
முருகப்பெருமான் கருவறையில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். தேவ வடிவத்தில் இருந்த முருகப்பெருமானைப் பிம்ப வடிவத்தில் எழுந்தருளுமாறு தேவேந்திரன் வேண்டினார். அதன்படி முருகப்பெருமானும் பிம்ப வடிவத்தில் மாறி, வள்ளி தெய்வானையுடன் அருள்பாலித்தார். தேவேந்திரனும் ஆகம முறையில் பிம்ப பிரதிஷ்டை செய்து முருகப்பெருமானை வழிபட்டார்.
அன்றைய தினம் கார்த்திகை மாதத்துக் கடைசி வெள்ளிக்கிழமையாக இருந்ததால், வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி தேவேந்திரனுக்குக் காட்சியளித்தார். அதுவே இன்றளவும் ஐதீகமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள முருகப்பெருமான் நான்கு கரங்களைக் கொண்டுள்ளார்:
வலது மேற்கரத்தில்: வள்ளிக்குக் பிடித்த தாமரை மலர்.
இடது மேற்கரத்தில்: தெய்வானைக்குக் பிடித்த நீலோற்பவ மலர்.
வலது கீழ்க்கரத்தில்: அபய முத்திரை.
இடது கீழ்க்கரத்தை: இடுப்பில் வைத்தபடி கல்யாண கோலத்தில் நின்றபடி அருள்பாலிக்கிறார்.
சுவாமியின் முன்புறம் வைரம் பதித்த வஜ்ரவேல் மின்னுவதைக் காணலாம். வள்ளி, தெய்வானை இருவரும் இந்த கோவிலில் அமுதவல்லி, சுந்தரவல்லியாகவே காட்சி தருகிறார்கள். வள்ளிக்குத் தனிச் சன்னதி இருப்பது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
இத்தலத்தில் ஒரு குளம் அமைக்க வேண்டும் என்று வள்ளி வேண்டுகோள் விடுத்தாள். அதற்காக முருகப்பெருமான் தன் கைவேலை ஊன்றி ஒரு தீர்த்தத்தை உருவாக்கினார்; அதுவே 'சரவணப் பொய்கை' என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் கிழக்கு வாசலில் மிகப்பெரிய தெப்பக்குளமும், அதன் மையப்பகுதியில் மண்டபமும் உள்ளது. இக்குளத்தில் நீராடி கிரிவலம் வந்தால் நோய் நொடிகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
சரும நோய்கள் தீர: இங்கு ருத்ர ஜபம் செய்து, சந்தனக் காப்பு அலங்காரத்தோடு முருகப்பெருமானை வணங்கினால் சரும நோய்கள் நீங்கும் என்கிறார்கள்.
புத்திர பாக்கியம் பெற: குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள சுப்ரமணியசுவாமியை வேண்டிக்கொண்டு, கிரிவலப் பாதையைச் சுற்றி வந்து வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.
திருச்செந்தூர் முருகன் பன்னீர் அபிஷேகப் பிரியர் என்றால், வள்ளியூர் முருகனோ பாலாபிஷேகப் பிரியர். தெப்பத் திருவிழா காலங்களில் சுவாமியுடன் வள்ளி மட்டும்தான் வீதி உலா செல்வார்; மூலஸ்தானத்தில் மட்டுமே அவர் தெய்வானையுடன் அருள் பாலிப்பார். வைகாசி மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் வைகாசி விசாகத் திருவிழா இங்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், திருநெல்வேலியிலிருந்து சுமார் 42 கிலோ மீட்டர் தொலைவில் இந்த வள்ளியூர் சுப்பிரமணியசுவாமி கோவில்(valliyur-subramanya-swamy-temple) அமைந்துள்ளது.