
அம்பாள் மகாலெட்சுமியை வீடுகளில் எழுந்தருளச் செய்ய சுமங்கலிப் பெண்கள் விரதமிருந்து அவர்களால் பக்தி சிரத்தையோடு அனுஷ்டிக்கப்படும் பூஜையே வரலெட்சுமி நோன்பாகும். வரலெட்சுமி நோன்பு அல்லது மகாலெட்சுமி விரதம் என்றும் அழைக்கப்படுவது உண்டு.
அனைத்து செல்வங்களுக்கும் அதிபதியானஶ்ரீலெஷ்மி தேவியின் அருளைப் பெற வேண்டி இந்துப் பெண்கள் நோன்பு இருப்பதாகும்.
ஆடி மாதம் வளா்பிறையில் பெளா்ணமி வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமைகளில் சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவன் ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளோடும், சகல செல்வங்களைப் பெறவும் ,பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைத்திருக்கவும் மேற்கொள்ளப்படும் நோன்பே வரலெட்சுமி விரதத்தின் மகிமையாகும்.
அம்பாள் மகாலெட்சுமியானவள் இல்லந்தோறும் வியாபித்திருக்க வேண்டி விரதமிருந்து மேற்கொள்ளப்படும் நோன்பே வரலெட்சுமி நோன்பாக கொண்டாடப் படுகிறது.
மங்கலங்களை அள்ளித்தரும் அம்பாளுக்குாிய ஆடி மாதத்தில் வரும் மிக மிக முக்கியமான வழிபாட்டு நாளே வரலெட்சுமி விரதமாகும்.
மகாலெட்சுமியான வரலெட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியதாகவும், அவள் பக்தர்கள் வேண்டும் வரங்களை வாாி வழங்கியதாகவும், அவர்களின் விருப்பங்களை நிறைவேற்றித் தருபவளாகவும் புராணங்கள் கூறுகின்றன.
தமிழகம் தவிர பக்கத்து மாநிலங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நோன்பானது 8.8.2025ல் கொண்டாடப்பட உள்ளது.
நோன்பின் முதல் நாள் வீடு வாசல் பூஜை அறை இவைகளை நன்கு சுத்தம் செய்ய வேண்டும். வெளிவாசல் பகுதியில் சுவற்றிலும் பூஜை அறையிலும் வரலெட்சுமி அம்மன் படத்தை வரையலாம். பின்னர் இழைக்கோலம் போடவேண்டும். அன்று மாலை வாசல் மற்றும் பூஜை அறையில் மாவிலை தோரணம் கட்டவேண்டும்.
அன்று காலையிலிருந்தே நோன்பு செய்ய உள்ள பெண்கள் விரதம் இருப்பாா்கள். முடியாதவர்கள் கஞ்சி பழம் சாப்பிடலாம்.
முதல்நாள் இரவு வாசல் நிலைப்படி அருகில் தீபம் ஏற்றி வைத்து வரைந்த படத்திற்கு மஞ்சள் சந்தனம் குங்குமம் சாத்தவேண்டும். அதோடு பூஜை அறையில் தீபம் ஏற்றி வரைந்த படத்திற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், சாத்தவேண்டும்.
பின்னர், மனப்பலகையில் இழைகோலம் போட்டு வாழை இலையை போட்டு, நெல்லை பரப்பி, அதன்மேல் வெள்ளி சொம்பு, அம்பாள்படம் வரைந்தது அல்லது தாமிரம், வெங்கல சொம்பு வைத்து அதன் உள்ளே அாிசி, காதோலை கருகமணி, வெற்றிலை பாக்கு, இவைகளைப் போட்டு மாவிலை கொத்து வைத்து, மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து, அதன்மீது ஜாக்கெட்பிட் சாத்தி புஷ்பம் சாத்திடவேண்டும். பின்னர் பழம், பாக்கு, வெற்றிலை வைத்துவிட வேண்டும், கலசத்தில் காதோலை கருகமணி சாத்தலாம்.
அம்பாள் வெள்ளிமுகம் இருந்தாலும் கலசத்தில் சாத்துவதோடு, பவுன் ஆபரணங்கள் இருந்தாலும் சாத்தி தாழம்பூ வைக்கலாம் .
இருபுறமும் வாழைக்கன்றுகளையும் கட்டலாம். பின்னா்வெண் பொங்கல் துவரம் பருப்பு போட்டு, மிளகு,சீரகம், நெய்சோ்தது, மஞ்சள்பொடி போட்டு பொங்கலை தயாா் செய்துவிட வேண்டும்.
பின்னா் கலசத்தை எடுத்துக்கொண்டு வெளி வாசலில் இருந்து அம்பாள் பாடலை பாடிய படியே அம்பாளை பூஜை அறைக்கு அழைத்து வரவேண்டும்.
பின்னா் பூஜை அறையில் அலங்கரிக்கப்பட்ட கலசத்திற்கு தூப தீபம் காட்டி ஒரு கரண்டியை, தீபத்தில் காட்டி கருப்பு நிறமானதும் , எண்ணைய் தடவி அம்பாளின் கண்களைத்திறக்க வேண்டும்.
பின்னா் அம்பாள் அஷ்டோத்திரங்களை சொல்லி வெண்பொங்கல், பழம், வெற்றிலை, பாக்கு வைத்து நைவேத்தியம் செய்து விரத மிருந்த சுமங்கலிப் பெண்கள் அந்தப் பொங்கலை சாப்பிடவேண்டும்.
கோதுமை அப்பம், கொழுக்கட்டைக்கான தேங்காய்ப்பூரணம், இவைகளை தயாா்செய்து வைத்துக் கொள்ளலாம். பச்சை அரிசி மாவு இட்லி அம்பாளுக்கு உகந்ததால் மாவையும் அரைத்து வைத்துக்கொள்ளலாம்.
மறுநாள் காலை ஸ்நானம் செய்து ஒன்பது கஜம் சேலை உடுத்தி, தீபம் ஏற்றி மஞ்சள் பிள்ளாயாா் பிடித்து பூஜை செய்துவிட்டு கலசத்தற்கு அனைத்து வகையான புஷ்பங்களாலும் அலங்காரம் செய்து, விருப்பமான பழவகைகள், தேங்காய், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், பூரணக் கொழுக்கட்டை, உப்புக்கொழுக்கட்டை பச்சரிசிமாவு இட்லி, பயத்தம்பருப்பு பாயசம் ,மகா நைவேத்தியம், உளுந்துவடை, அப்பம் இவைகளை வைத்து வெள்ளை நூலில் மஞ்சள் பூசி, பூஜை செய்பவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப சரடுகள் தயாா் செய்து அதில் ஒன்றை கலசத்தில் சாத்தி விடவேண்டும்.
அம்பாளின் நாமாவளிகள், அஷ்டோத்திரங்கள் சொல்லி அம்பாள் பாடல்களைப் பாடி, பூஜையை பயபக்தியுடன் செய்ய வேண்டும்.
பின்னா் மஞ்சள் சரடில் புஷ்பம் கட்டி மஞ்சள்சரடை வலது கையில்கட்டிக் கொள்ள வண்டும் ,நம்மோடு நோன்பு செய்பவர்களும் கட்டிக்கொள்ள வேண்டும் புதிதாக திருமணம் ஆன மருமகள்களுக்கும் நோன்பு எடுக்கலாம். பின்னர் அம்பாளுக்கு தீப தூபம் காட்டி நைவேத்தியம் செய்ய வேண்டும்.
அதன்பிறகு வீட்டிலுள்ள பொியவர்களிடம் நமஸ்காரம் செய்து ஆசீா்வாதம் பெறுவதோடு அக்கம் பக்கத்திலுள்ள சுமங்கலிப் பெண்களை அழைத்து அவர்களுக்கு ஜாக்கெட்பிட் குங்கமம், மஞ்சள் கண்ணாடி வளையல்கள், வாயானங்கள் தேங்காய் வெற்றிலை, பாக்கு வைத்துக்கொடுக்கவேண்டும்.
மறுநாள் காலை அம்பாளுக்கு பழம் மற்றும் மகா நெய்வேத்தியம் செய்யலாம். அன்று மாலை தீபம் ஏற்றி அம்பாள் பாடல்களைப் பாடி, கடலைப்பருப்பு சுண்டல், தயிா்சாதம், வெற்றிலை பாக்கு பழம் , நைவேத்தியம் செய்து, தீப தூபம் காட்டி ஹாரத்தி எடுத்து கலசத்தை அரிசி வைத்துள்ள பாத்திரத்தில் வைக்கவேண்டும்.
மறுநாள் கலசத்தில் உள்ள அரிசியை சாதமாக வடித்து சர்க்கரை பொங்கல் செய்தும்கூட நைவேத்தியம் செய்யலாம். இந்த நோன்பு செய்வதால் அம்பாளின் அருள் இல்லமெங்கும் வியாபித்திப்பது நிச்சயம்.
வரலெட்சுமி நோன்பு கொண்டாடுவோம், அம்பாளின் அருளோடு மங்களகரமான வாழ்க்கை வாழ்ந்திடுவோம்"!