கன்னி ராசி: தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2026!

2026 பராபவ வருஷத்துக்கான தமிழ்ப் புத்தாண்டுப் ராசிபலன்!
Virgo - Tamil New year Rasi palan 2026
Virgo - Tamil New year Rasi palan 2026
Published on
Deepam strip
Deepam strip

ஒரு இரண்டரை வருஷம் ஆச்சா.. ஆயிருக்கும்… இல்லை.. இல்லை மூன்றரை வருஷமாச்சு நீங்கள் சிரித்துப் பேசி. ஆனால் பராபவ வருடம் நீங்கள் சிரிக்கப்போகும் சந்தோஷச் சிரிப்பு… கொளுத்தும் கோடையில் கொட்டும் மழைபோல் உள்ளுக்குள்ளும் சிரிக்க வைக்கப்போகிறது பார்த்துக்கொண்டே இருங்களேன்!

தொழில், வியாபாரம் நல்லபடியாகவே இருக்கும். தங்கள் துறையில் போட்டிகள் அதிகரித்தால்தான் என்ன? சக வியாபாரிகளால் மறைமுக எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வந்தால்தான் என்ன? நீங்கள் பாட்டுக்கு ஊதித் தள்ளிவிட்டு வெற்றியுடன் நிமிர்வீர்கள். வியாபாரத்தை முன்னிட்டு வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ள நேரிடும். புதிய முயற்சிகளை இந்த வருடத்தின் முதல்பாதியிலேயே மேற்கொள்வீர்கள்.  அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடியும். அதாவது தாமதமானாலும் நல்லபடியாக முடியும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர்கள். பொறுமைக்குப் பரிசு இல்லாமலா போகும்? ஆண்டின் பிற்பகுதியில் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மட்டுமின்றி, உறவினர்களின் ஒத்துழைப்பும் மனதுக்கு உற்சாகம் தரும். வேலைக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பொறுப்புகளில் முன்பைவிட நல்ல கவனமாக இருப்பீர்கள் என்பதால் கடந்த சில ஆண்டுகளைவிட வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

கடந்த சில ஆண்டுகளைவிடவும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். முக்கியக் காரணம், குடும்ப நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். யாருக்கேனும் திருமணம் நடந்தோ, வாரிசுகள் பிறந்தோ, ரேஷன் கார்டில் கூடுதல் நபரைச் சேர்ப்பீர்கள். வியாபாரத்தில் கூர்ந்த கவனம் காரணமாக, எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் உறவினர்களும் நண்பர்களும் மிகவும் உதவியாக இருப்பார்கள். உண்மையில் பல பேரின் அருமையை நீங்கள் இந்த ஆண்டுதான் உணரவே போகிறீர்கள்.

கணவன் - மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். திருமணம், வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் குடும்பத்தில் மட்டுமன்றி உடன் பிறந்தவர்களின் குடும்பத்திலும் குழந்தை பாக்கியம் ஏற்படும். ஆண் குழந்தைகள் நிறைந்த வீடாயின் பெண் குழந்தையின் வரவு உண்டு. ஆண்டின் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட சாத்தியம் உள்ளதால், பொறுமையுடன் இருப்பது மிகவும் அவசியம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கடந்த ஆண்டுகளைவிடவும் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். சந்தோஷச் சுற்றுலாவிற்கு வாய்ப்பு அதிகம்.

விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு என்பது மட்டுமன்றி உற்சாகம் வெளிப்படும் அளவுக்கு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். இதனால் இத்தனை காலம் உங்களுக்குள் ஒளிந்து விளையாடி உற்சாகம் மெல்ல வெளியே வந்து எட்டிப்பார்த்து, மற்றவர்களையும் சந்தோஷப்படுத்தும். வருடத்தின் பிற்பகுதியில் எதிரிகளால் பிரச்னைகளும், கடன் தொல்லைகளும் ஏற்படக்கூடும். ஆனாலும்,  உடனுக்குடன் சமாளித்துவிடுவீர்கள்.

வருட ஆரம்பத்திலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீங்களே வியக்கும் அளவுக்குப் பல கோயில்களுக்குப் போவீர்கள். புனிதக் குளங்களில் நீராடுவீர்கள். சிலருக்கு வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் தலங்களுக்குச் சென்றுவரும் வாய்ப்புகள்கூட உண்டாகும். குடும்பப் பெரியவர்களின் அறிவுரையின்படி நடந்துகொண்டு, அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆசிகளையும்தான்.

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசியல்வாதிகளின் வாழ்வில் புதிய மாற்றங்களும் உயர்வுகளும் ஏற்படும். பூர்விகச் சொத்துப் பிரச்னை சுமுகமாக முடியும் வாய்ப்பு ஏற்படும். பலப்பல ஆண்டுகள் முடியாமல் இழுத்துக்கொண்டிருந்த வழக்குகளும் வேறு பல பிரச்னைகளும் முற்றுப்புள்ளி வைத்துக்கொள்ளும். சகோதர வகையில் சில சின்னஞ்சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. தந்தையின் உடல் ஆரோக்கியம் பற்றிய கவலை நீங்கும்.

நீங்கள் ஆணாயிருப்பினும், பெண்ணாயிருப்பினும் பெண்களால் நன்மை உண்டாகும். குடும்பத்தில் யாருக்கேனும் புதிய ஆடை, ஆபரணங்களின் அபரிமித சேர்க்கை உண்டாகும். யார் கண்டார்கள். அது உங்களுக்கேகூட இருக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் கணவன் - மனைவி இருவரும் ஒருவரையொருவர் கலந்து ஆலோசித்து எடுப்பீர்கள். இதனால் நெருக்கமும் இணக்கமும் அந்நியோன்யமும் அதிகரிக்கும். இத்தனை காலமாய்ப் புரிதல் இல்லாமல் நடந்துகொண்டோமே என்று நினைப்பீர்கள்.  சகோதரர்  அல்லது சகோதரி வகையில் உதவிகள் கிடைக்கும். மனைவி அல்லது கணவர் வழி உறவினர்களால் நன்மைகள் ஏற்படும்.

நிதி சார்ந்த எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் தொடர்பான ஏற்பாடுகள் நல்லபடியாக நடந்து முடியும். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. நண்பர்கள் என்று நம்பி எல்லாரிடமும் எல்லா விஷயங்களையும் கொட்டாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். சகோதர சகோதரிகளின் வாழ்வு சிறக்கும். எல்லாமே நீங்கள் எதிர்பார்த்த வேகத்தில் நடக்கும் என்று சொல்வதற்கில்லை. அதனால் என்ன? நிதானமாக நடந்து முடிந்தால் அதுவும் ஓர் அழகுதானே?

குடும்பத் தேவைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். மகிழ்வித்து மகிழ்தல் என்பதன் உண்மையான பொருளை உணர்வீர்கள். தந்தைவழி உறவினர்களிடம்  எதிர்பார்த்த காரியம் சற்று அலைச்சலையும் செலவுகளையும் தந்தாலும் அனுகூலமாக முடியும். அலைச்சல் மற்றும் செலவில், அவர்கள் தவறு ஏதும் இல்லை என்பதையும் உணர்வீர்கள். அலுவலகத்தில் பெண்களால் நன்மை உண்டாகும். அவர்கள் உங்களின் சுமையைக் குறைப்பார்கள். மேலதிகாரியாக உள்ள பெண்கள் உங்கள் சிரமங்களைப் புரிந்து கொள்வதோடு சிறு பிழைகளையும் பொறுத்துப் போவதால் நிம்மதியாக உணர்வீர்கள். வீடு கட்டுவதில்.. அல்லது வாங்குவதில் இருந்த இழுபறியாக இருந்த நிலை மாறும். பூர்விகச் சொத்துப் பிரச்னையில் பொறுமையைக் கடைப்பிடித்தது  எவ்வளவு நல்லதாயிற்று என்பதை முதல் முறையாய் உணர்ந்து மகிழும்படியான ரிசல்ட் கிடைக்கும். சிலருக்குக் கடந்த ஆண்டுகளில் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். பெண்கள் சிலருக்கு மறுமணம் நல்லபடியாக முடிவதால் உங்களின் பெற்றோருக்கு நிம்மதி ஏற்படும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகத்தான் குறையும். உத்தியோகஸ்தர்கள் எடுக்கக் கூடிய காரியங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பொறுப்பும் சுமையும் கூடினாலும் அது சுமையாகத் தெரியாத அளவுக்கு நற்பலன்கள் கிடைக்கும்.

அலுவலகத்தில் இத்தனை காலமாக உங்களை மதித்து நிமிர்ந்து பார்க்காத, சக ஊழியர்களிடம் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் அவர்களின் ஒத்துழைப்பும் புதிய வகையில் கிடைக்கும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் இந்த ஆண்டின் முதல் பாதியிலேயே கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உங்களை உற்சாகப்படுத்தும். அலுவலகத்தில் உங்களுடைய எதிர்பார்ப்புகள் மெதுமெதுவாய் நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்டுக்கொண்டிருந்த பிரச்னைகள் நீங்கும். அவர்கள் வேறு வாய்ப்புக்கள் கிடைத்துக் கண்காணாத தொலைவுக்குப் போய்விடுவார்கள். குழந்தைகள் சம்பந்தமான புதிய முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணமோ அல்லது வீட்டை இடித்துக் கட்டும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஈடுபடலாம்.  அதிகத் தடைகளோ தாமதமோ இல்லாமல் முடியும்.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஆண்டு முழுக்கச் சாதகமாகத்தான் இருக்கும் என்றாலும் வருடத்தின் முற்பகுதியில் நன்மைகள் கூடுதலாக இருக்கும்.  பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். முன்னேற்றத்துக்கான வழிவகைகள் பிறக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்குச் சற்றே வாய்ப்பு உண்டு. பணியின் காரணமாகப் பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேருவீர்கள். நீங்கள் தப்பு செய்யாதவரைக்கும் உங்களுக்கு பிரச்னை எதுவும் வராது. அதில் சந்தேகம் எதுவும் வேண்டாம். உங்களின் மனதுக்குப் பிடிக்காத சில நல்ல காரியங்களைச் செய்ய வேண்டி இருந்தாலும் அதன் மூலம் நன்மை உண்டாகும். பயமோ கவலையோ வேண்டாம்.

எந்த விஷயமாவது நிதானப்போக்கில் நடந்தால் அது நிச்சயம் வெற்றிகரமாக முடியப்போகிறது என்று நீங்கள் உறுதியாக நம்பலாம்.

மற்ற ராசிபலன்களை படிக்க Click Here

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com