

காசிக்கு அருகே உள்ள நர்தரா கிராமத்தில் 1918-ம் ஆண்டு டிசம்பர் 1-ம்தேதி பிறந்தார் யோகி ராம் சுரத்குமார்.
இவர் ஆரம்ப காலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். பின்னர் ஆன்மீகத் தேடல் காரணமாக குடும்பத்தை விட்டு பிரிந்து பல்வேறு இடங்களுக்கு சென்றார். காசி, உத்தரகாண்ட், ராமேஸ்வரம்... இறுதியாக திருவண்ணாமலை வந்து சேர்ந்தார்.
திருவண்ணாமலையில் விசிறி சாமியார் என அன்புடன் அழைக்கப்பட்டார். இவர் ராம நாமத்தின் மகிமை மூலம் பல வியாதிகளையும் பல அற்புதங்களையும் நிகழ்த்தியுள்ளார்.
பிச்சைக்காரர் என்று தன்னை அறிவித்துக் கொண்டாலும், எளிய உடையுடன் கையில் விசிறி உடன் காணப்பட்டார். இவர் பக்தர்களின் நோய்களை தீர்த்து அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார்.
பக்தர்கள் வாழ்வில் அதிசயத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினார். தன்னை நாடிவரும் பக்தர்களின் துயரங்களை போக்கினார். அவர் கையில் வைத்திருந்த விசிறியால் பக்தர்களை ஆசீர்வதித்தார்.
தீராத நோய்கள், மனக்கவலைகளை போக்கினார். ‘ராம நாமம்’ மந்திரத்தின் மூலம் பக்தர்களின் நோய்களையும் அவர்களது கோரிக்கைகளையும் நிறைவேற்றினார். 1959 முதல் திருவண்ணாமலையில் வசித்து வந்தார். 2001-ல் முக்தி அடைந்தார்.
இவரது ஆசிரமம் இன்றும் ஒரு ஆன்மீக தலமாக விளங்கி வருகிறது. அரவிந்தர், ரமண மகரிஷி, ராமதாசர் இவர்களை தன் குருவாக கொண்டார். நோயுடன் வருபவர்களுக்கு இவரது பார்வை பட்டாலே போதும் நோய்கள் பறந்து விடும். இவர் காசி மகான் என்று அழைக்கப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ம்தேதி இவரது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.
திருவண்ணாமலைக்கு அருளும் புகழும் சேர்த்தவர்கள் பட்டியலில் இவரும் இடம் பெற்றுள்ளார். ஞான குருவான, யோகி ராம் சுரத்குமார் தன்னை பிச்சைக்காரனாக அறிவித்துக் கொண்டாலும் பக்தர்கள் இவரை கடவுளின் குழந்தையாக கருதினர். இவரின் பார்வை பட்டாலே சகலமும் நடக்கும்.
காடு, மலை, கோவில் என எல்லா இடங்களிலும் சுற்றி திரிந்தார். இவர் சித்தி விளையாட்டுகளோ அல்லது உபநியாசமும் செய்தது இல்லை. இவரை அன்போடு அணுகி வருகிறவர்களுக்கு அமைதியும், ஆனந்தமும் கிடைக்கிறது.
பக்தர்களுக்கு கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்வார். எப்போதும் தன்னை முன் நிறுத்தியது கிடையாது. இதுவே இவரது ஞானத்தின் அடையாளம். கடவுளைத் தவிர எந்த செல்வமும் நிலையற்றது என உணர்த்தினார்.
எளிய ஆங்கிலத்தில் பேசுவார்.
சில சமயம் தமிழில் பேசுவார்.
மணிக்கணக்கில் சிரிப்பார்.
பல நாட்கள் மௌனத்தில் ஆழ்ந்து விடுவார்.
பக்தர்கள் எந்த உணவை கொடுத்தாலும், அதை சிரட்டை மூலம் வாங்கிக் கொள்வார். அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கி விடுவார். இங்கு வரக்கூடிய சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்புகளை கொடுத்தே சர்க்கரை நோயை குணப்படுத்தி உள்ளார்.
வெறும் பால் கொடுத்து பலரது வயிற்று வலிகளை நிரந்தரமாக போக்கி உள்ளார். இவரது பார்வை பட்டாலே கடன் பிரச்சினைகள், மனக்குழப்பங்கள், தீராத வியாதிகள் தீரும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை. இன்றும் நம்மிடையே ஞானசுரூபமாக வாழ்ந்து வருகிறார்.
எழுத்தாளர் பாலகுமாரன் இவரது தீவிர பக்தர். பகவான் ஸ்ரீ யோகி ராம் சுரத்குமார் சரிதம் என்ற நூலை எழுதி தன் அனுபவங்களை அதில் பகிர்ந்து உள்ளார்.
இது பல வாசகர்களின் ஆன்மீக வழிகாட்டியாக உள்ளது. இவரது ஆசிரமம் திருவண்ணாமலையில் ரமண மகரிஷி ஆசிரமம் அருகில் உள்ளது. 1994-ல் சச்சிதானந்த மகாராஜ் என்பவரால் இவரது ஆசிரமம் திறந்து வைக்கப்பட்டது. விசிறி சாமியார் 1959 முதல் இங்கு தங்கிவிட்டார். 2001-ல் தனது 82-வது வயதில் முக்தி அடைந்தார்.
இந்த ஆசிரமம் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் யோகியின் ஜீவசமாதி, தியான மண்டபம், பஜனை கூடம், அன்னதான கூடம், இலவச பள்ளி, இலவச மருத்துவமனை, கோசலை ஆகியவை அடங்கியுள்ளது.
தினசரி பஜனை நடைபெறுகிறது. அதேபோன்று இங்கு வரும் பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து விசிறி சாமியாரின் ஆசிகளை பெற்று செல்கின்றனர். காலை ஐந்து மணி முதல் 12 மணி வரையும், மாலை 3 மணி முதல் 8 மணி வரையும் ஆசிரமம் திறந்து இருக்கும்.
இங்கு வரும் பக்தர்கள் சுவாமியின் ஜீவ சமாதியின் முன்பு அமர்ந்து வேண்டிக்கொண்டால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும். தீராத பிரச்சனைகள், நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெற்று நிம்மதி கிடைக்கும்.