
வாழ்க்கையில் நம்மை நல்ல சக்திகள் ஒருபுறம் இழுத்தாலும், கெட்ட சக்திகள் இன்னொரு புறம் சேர்ந்து இழுத்துக் கொண்டேதான் இருக்கும். எந்தப் பக்கம் நாம் செல்லப் போகிறோம் என்பதை வைத்துதான் நம் வாழ்க்கை இருக்கிறது. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நேர்மறை ஆற்றல்களும், எதிர்மறை ஆற்றல்களும் கலந்துதான் இருக்கின்றன. எல்லா விஷயத்திற்கும், எதிர்மறையான ஒரு விஷயம் இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில், தரித்திரங்கள், பீடைகள் எனப்படும் துர்சக்திகளை நம்மிடமிருந்து விரட்டி அடித்து நல்ல சக்தி தருவதில் சித்தர் வழிபாடு சிறந்து விளங்குகிறது. சித்தர் வழிபாடு செய்வதன் மூலம் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
எடுத்த காரியங்கள் அனைத்திலும் தோல்வியை தழுவுபவர்கள், காலப்போக்கில் விரத்தியில் மூழ்கி விடுகிறார்கள். தொடர் தோல்விகள், அவமானங்கள், சறுக்கல்கள் என்று சந்தித்துக் கொண்டிருக்கும், உங்களது ஜாதகத்தில் கேது பகவான் சரியாக இருக்கிறாரா? என்று பாருங்கள். கேது பாதிப்பு அடைந்திருந்தால், ஜாதகருக்கு இதுபோன்ற பிரச்னைகள் தொடர்ந்து நடக்கும். எதை செய்தாலும் அதில் திருப்தி உண்டாகாது. எதையாவது செய்து முன்னேறலாம் என்றால், அதற்கான வழியும் கிடைக்காது.
நீங்கள் நினைத்ததை அடைவதில் பிரச்னைகள் இருந்தால் சமாளித்து விடலாம். ஆனால், அடையவே முடியாத சிக்கல்கள் இருந்தால் என்னதான் செய்வது? என்று குழம்பிப் போயிருப்பீர்கள். வாழ்க்கையே சூனியமாகத் தெரியும். ‘எல்லோரையும் போல நம்மாலும் சாதாரணமாக வாழ முடியாதா?’ என்று விரக்தியின் உச்சத்தை அடைய வைத்து விடுவார் இந்த தந்திரகார கேது பகவான். தரித்திரங்களும், பீடைகளும் நம்மை சோம்பேறித்தனமாக எப்போதும் வைத்துக் கொள்ளும்.
நாம் நினைத்தால் கூட நம்மால் சுறுசுறுப்பாக இயங்கி, வெற்றியின் பக்கம் செல்ல முடியாது தடுத்து நிறுத்தும். இப்படிப்பட்ட பிரச்னைகள் உங்களுக்கு இருந்தால், கண்டிப்பாக நீங்கள் சித்தர் ஜீவ சமாதி வழிபாட்டினை செய்யலாம். சித்தர்களுடைய ஜீவ சமாதிகளை தேடிச் செல்லுங்கள். எந்த சித்தர் உங்களுக்குப் பிடித்தாலும், அந்த சித்தரின் ஜீவ சமாதிக்கு செல்லுங்கள். பல திருத்தலங்களில் ஜீவசமாதி அடைந்த சித்தர்களைத் தேடி நாமாக சென்று வழிபட வேண்டும்.
சித்தர்கள் நம்மை அழைத்தால் அடிக்கடி நீங்கள் பட்டாம்பூச்சியை பார்ப்பீர்கள். அழகிய பட்டாம்பூச்சிகள் உங்களை அடிக்கடி ஈர்த்தால், சித்தர் உங்களை அழைக்கிறார் என்று அர்த்தம். சித்தரின் சமாதியை அடைந்ததும், உங்களுக்கு எத்தனை வயதோ, அந்த வயதின் எண்ணிக்கைக்கு ஏற்ப சித்தர் ஜீவசமாதியை வலம் வர வேண்டும். 20 வயது என்றால் 20 முறை சுற்றி வாருங்கள். 40 வயது என்றால் 40 முறை சுற்றி வாருங்கள்.
ஒவ்வொரு முறை சுற்றி வரும் பொழுதும் சமாதியின் முன்பு ஒரு கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும். இப்படி எத்தனை முறை சுற்றி வந்து கற்பூரத்தை ஏற்றி வைத்து வழிபடுகிறீர்களோ, அத்தனை நன்மைகளை உங்களுக்கு சித்தர் அருள்வார் என்பது நம்பிக்கை. சகல தரித்திரங்களும், பீடைகளும் நீக்கி, கேது பகவானின் தோஷங்களில் இருந்தும் நிவர்த்தி கொடுக்கக்கூடிய இந்த எளிய வழிபாட்டினை நீங்களும் செய்து பயனடையுங்கள்.