
அந்தக் காலத்தில் அடர்ந்த வனப்பகுதியில் வசிஷ்டர் என்ற முனிவர் கடும் தவம் புரிந்தார். அந்த சமயத்தில் அருகில் உள்ள நாட்டிலிருந்து ஆட்சி செய்து வந்த கௌசிக மன்னன் தனது படை பரிவாரங்களுடன் காட்டிற்கு வேட்டையாட சென்றார். அவருக்கும் அவரது பரிவாரங்களுக்கும் கடுமையான பசி. உணவு கிடைக்காமல் வசிஷ்டர் தவம் செய்து கொண்டிருந்த ஆசிரமத்திற்கு வந்தார். அவரிடம், "உணவு கிடைக்குமா?" என்று கவுசிக மன்னர் கேட்டார்.
முனிவரும், 'சற்று பொறுங்கள்!' என்று கூறிவிட்டு ஆசிரமத்தின் பின்புறம் உள்ள காமதேனுவை அழைத்து, அதனுடன் பணிப் பெண்ணையும் அழைத்து மன்னருக்கும் அவரது படை வீரர்களுக்கும் நொடிப் பொழுதில் விருந்து வைத்தார். மன்னரும் அவரது படை வீரர்களும் ஆச்சரியப்பட்டார்கள். 'எப்படி இவ்வளவு குறுகிய நேரத்தில் உணவு பரிமாற முடிந்தது?' என்று முனிவரிடம் கேட்டார் மன்னர். "எல்லாம் காமதேனு பசு அருளால்" என்றார் வசிஷ்டர். மறுநாள் மன்னன் கௌசிகன் அந்த காமதேனு பசுவை அடைய படைவீரர்களை அனுப்பினார்.
வசிஷ்டர் கோபமுற்று படை வீரர்களை எரித்து சாம்பலாக்கினார். மன்னர் கௌசிகர் முனிவரிடம் வந்து, 'உங்களுக்கு எப்படி இது சாத்தியம். நானும் உங்களைப் போல் ஆக வேண்டும்?' என கேட்டுக்கொண்டார். முனிவருக்கு கடும் கோபம். 'அதெல்லாம் உன்னால் முடியாது. அதற்கு கடுமையான தவம் இருக்க வேண்டும்' என்று கூறி மறைந்தார்
கௌசிக மன்னரும் விடாமுயற்சி செய்து கடும் தவம் இருந்தார். விஸ்வாமித்திரர் என்ற நாமத்துடன் காட்டில் தவம் புரிந்து வந்தார். அவர்கள் தவத்திற்கு இடையூறாக தடாகை மற்றும் அரக்கர்கள் தொந்தரவு செய்து வந்தனர். விசுவாமித்திரர் ராமர், லக்ஷ்மணனை வேண்டி அழைத்து தடாகையை அழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
ராம, லக்ஷ்மணனும் தடாகையை அழித்தனர். இதன் மூலம் ராமர், லட்சுமணனுக்கு பித்ரு சாபம் பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டது. அதை விசுவாமித்திரர் தனது தவ மகிமையால் தீர்த்து வைத்தார். ராமர் லட்சுமணர் இருவரையும் அருகில் உள்ள கடலில் நீராடி விட்டு வந்து அவர்களுக்கு நவகலசயாகம் செய்து அவர்களின் தோஷத்தை நிவர்த்தி செய்தார். அந்த இடம் தான் தற்போது நெல்லை மாவட்டத்தில் ராதாபுரத்திலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் விஜயாபதி என்ற ஊரில் இருக்கும் விசுவாமித்திரர் கோவில் ஆகும்.
இங்கு விசுவாமித்திரரின் அருகில் மகாலிங்க சுவாமி அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. மகாலிங்க சுவாமிக்கும், அகிலாண்டேஸ்வரிக்கும் தனி சன்னதிகள் உள்ளன.
பித்ரு சாபம் பிரம்மஹத்தி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து நவகலச யாகம் செய்தால் அவர்களது 64 வகையான தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படும் என்பது ஐதீகம். இங்கு வரும் மக்கள் மகாலிங்க சுவாமி விசுவாமித்திரர் இவர்களை வணங்கி விட்டு அருகிலுள்ள தில்லை காளிக்கு பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். ஒவ்வொரு மாதமும் அனுஷம், விசாகம் நட்சத்திர போன்ற நாட்களிலும், பௌர்ணமி அன்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
ஆடி அமாவாசை, தை அமாவாசை அன்றும் இங்கு ஏராளமான மக்கள் கடலில் நீராடி விட்டு பித்ரு சாபம் நீங்க வழிபாடு செய்து வருகின்றனர்.
'விஜயம்' என்றால் வெற்றி 'பதி' என்றால் இடம். எனவே, இந்த ஊர் விஜயாபதி என அழைக்கப்படுகிறது. தமிழகத்திலும், இந்தியாவிலும் விசுவாமித்திரற்கு என்று தனிக்கோவில் வேறு எங்கும் கிடையாது. இத்திருத்தலத்திற்கு ஒருமுறை சென்று வந்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.