

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று வாமன அவதாரம். உருவத்தில் சிறிய அந்தணர் வடிவெடுத்து வந்தாலும், பின் விஸ்வரூபம் எடுக்கிறார். மகாபலிச் சக்ரவர்த்தியின் அகந்தையை அடக்க வாமன அவதாரம் எடுத்து வந்த திருமால், மகாபலியிடம் மூன்றடி மண் தானம் கேட்கிறார்.
வானளாவ வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து, ஒரு அடியால் பூமியையும், இரண்டாம் அடியில் வானுலகையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலியின் தலையில் வைத்து அளந்து, அவனை பாதாள உலகம் அனுப்பி, பின் தன்னுடன் சேர்த்துக்கொண்டார்.
திருமால் இங்ஙனம் விஸ்வரூபம் எடுத்து உலகை அளந்த திருக்கோலத்தில் அருளும் ஒரு சில ஆலயங்களுள் திருக்கோவிலூரும் (Thirukovilur Perumal) ஒன்று. ஆனால், இத்தலம் பல சிறப்புகளைக் கொண்டது.
திருக்கோவிலூர் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்களில் ஒன்று. (மற்ற நான்கு திருத்தலம் – திருக்கண்ணங்குடி, திருக்கண்ணன் கவித்தலம், திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை)
ஆதியில் கோபாலன் என்ற திருநாமத்துடன் கிருஷ்ணரே இங்கு கோவில் கொண்டிருந்தார். மிருகண்டு முனிவர், திருமாலின் உலகளந்த கோலத்தைத் தரிசிக்க விரும்பினார். பின் பிரம்மாவின் யோசனையின்படி திருக்கோவிலூர் வந்து கிருஷ்ணரை வழிபட்டு வந்தார். முனிவரும் அவரின் மனைவியும் அன்னதானமும் செய்து வந்தனர்.
ஒருநாள் பெருமாள் அந்தணர் உருவில் வந்து உணவு கேட்டார். இருந்த உணவெல்லாம் ஏற்கனவே தானம் செய்துவிட்டபடியால், கலங்கினார் முனிவர். அவர் மனைவி மித்ராவதியும், பசியுடன் வந்த அந்தணருக்கு உபசரிக்க உணவில்லையே என்று கலங்கி, திருமாலை மனமுருகி வேண்டினார்.
திருமாலின் அருளால் பாத்திரங்கள் அனைத்தும் உணவால் நிரம்பின. இறைவனின் கருணையை எண்ணிப் பூரித்தனர் மகரிஷியும் அவர் மனைவியும். மகிழ்வுடன் அந்தணருக்கு உணவளித்து உபசரித்தனர். திருமாலும் அவர்களுக்கு திரிவிக்கிரமராகக் காட்சியளித்து அருளினார்.
இத்திருத்தலத்தில் உள்ள திருமால் வேறெங்கும் இல்லாத பேரழகில் மரத்தால் ஆன மிகவும் பெரிய திரிவிக்கிரமராக அருள்கிறார். வழக்கத்திற்கு மாறாக இங்கு வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் கொண்டு அருள்கிறார். கருவறையில் சுயம்புவாக சுமார் 35 அடி உயரத்தில் மரத்தால் ஆன மூலவர், ஒரு காலைக் கீழே வைத்து, வலது காலால் உலகை அளந்தபடி விஸ்வரூப தரிசனம் தருவதுபோல அருள்கிறார்.
“பச்சை மாமலை போல் மேனி” என்பதற்கு ஏற்ப அழகிய பச்சை வண்ணத்தில் அருளும் திருமாலின் அழகைக் கண்டு குளிர ஒருநாள் போதாது. பெருமாளின் திருவடி அருகில் தாயார், மிருகண்டு மகரிஷி, மகாபலிச் சக்ரவர்த்தி ஆகியோர் அருள்கிறார்கள்.
மகாபலிச் சக்ரவர்த்திக்கு திருமால் இங்கு காட்சியளித்தது போல் முதலாழ்வார்களான பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவருக்கும் திருமால் அருளிய திருத்தலம் இது. வைணவ நெறியைப் பின்பற்றி, திருமாலின் திவ்ய க்ஷேத்திரங்களைத் தரிசித்துவந்த மூவரையும் ஓரிடத்தில் சேர்க்க விரும்பினார் திருமால். அவர் திருவுளப்படி மூவரும் திருக்கோவிலூர் வந்து சேர்ந்தனர்.
முதலில் வந்த பொய்கையாழ்வார் திருக்கோவிலைத் தரிசித்த பிறகு, இரவு நேரமாகிவிட்டதால் மிருகண்டு மகரிஷியின் ஆசிரமத்தில் இரவு மட்டும் தங்கிக்கொள்ள இடம் கேட்டார். இடைக்கழியில் (வராண்டா என்று இப்போது சொல்கிறோம்) மட்டும்தான் இடமிருந்ததால், அங்கே தங்கிக்கொள்ளச் சொன்னார் மகரிஷி. ஒருவர் மட்டும் படுத்துக்கொள்ளும் வகையில் இருந்த அந்த இடைக்கழியில், பொய்கையாழ்வார் படுத்துக் கொண்டார். சற்று நேரத்தில் பலத்த மழை பெய்யத் தொடங்கியது.
கொஞ்சம் நேரம் கழிந்திருக்கும். மழையில் நனைந்தபடி பூதத்தாழ்வார் அங்கு வந்து சேர்ந்தார். அவருக்கு இடமளிக்க வேண்டும் என்பதால், பொய்கையாழ்வார் எழுந்து உட்கார்ந்தார். “ஒருவர் படுக்கலாம், இருவர் உட்காரலாம்” என்று கூறி, பூதத்தாழ்வாருக்கு அமர இடமளித்தார். இருவரும் தாங்கள் பயணித்த திருத்தலப் பெருமைகளையும், பெருமாளின் பேரருளையும் போற்றிப் பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது மூன்றாவதாக பேயாழ்வார் வந்து சேர்ந்தார். இரவு நேரம், மழை வேறு. அதனால் இருக்கும் சிறிய இடத்தில் மூன்று பேரும் நின்றபடியே பொழுதைக் கழிக்கலாம் என்று எண்ணி, “ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்,” என்று சொல்லி, பேயாழ்வாரையும் வரவேற்று இடமளித்தார் பொய்கையாழ்வார்.
மூவரும் இருட்டில் நெருக்கி நின்றபடி திருமாலின் கல்யாண குணங்களைப் போற்றிப் பேசி மகிழ்ந்தனர். சிறிது நேரத்தில் மூவரையும் யாரோ நெருக்குவதுபோல உணர்ந்தனர். புதிதாக வந்தவர் யாராக இருக்கும் என்று மூவருக்கும் குழப்பமாக இருந்தது. வந்தவர் எதுவும் பேசவும் இல்லை. “வந்திருப்பது யார்?” என்று ஆழ்வார்கள் கேட்க, எந்த பதிலும் வரவில்லை. ஆனால் யாரோ அவர்களுடன் நன்றாக நெருக்கி நின்றிந்தார்கள்.
வந்திருப்பவர் யார் என்று அறிய பொய்கையாழ்வார் முதல் பாசுரத்தைப் பாடினார்.
“வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்யக் கதிரோன் விளக்காக – செய்ய
சுடராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடராழி நீங்குகவே என்று.”
எனப் பதிகம் பாடினார். இந்த வையகத்தை அகலாகவும் கடலை நெய்யாகவும், கதிரவனை ஒளியாகவும் கொண்டு இருள் நீங்க அவர் பாட, அடுத்து பூதத்தாழ்வார் பாடினார்.
“அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புருகு
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.”
அன்பை அகல் விளக்காகவும், இறைவன்பால் கொண்ட ஆர்வத்தை நெய்யாகவும், நற்சிந்தையைத் திரியாகவும் கொண்டு, தமிழால் நாராயணனுக்கு விளக்கேற்றுவதாக பூதத்தாழ்வார் பாடிமுடித்தார்.
இருவரும் பாடிமுடித்ததும் அங்கு ஒளி பரவியது. அந்த வெளிச்சத்தில் வந்திருக்கும் நாலாவது நபர் நாராயணனே என்பதை அறிந்துகொண்டார் பேயாழ்வார்.
“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரிச்சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன்பால் இன்று.”
என மூன்றாம் பாசுரத்தைப் பாடினார் பேயாழ்வார்.
மிருகண்டு மகரிஷிக்கும், மூன்று ஆழ்வார்களுக்கும் காட்சிதந்து அருளிய எம்பெருமான், அங்கேயே அப்படியே உலகளந்த பெருமாளாகத் தங்கிவிட்டார். ஆமாம், மிருகண்டு மகரிஷியின் ஆசிரம இடைக்கழிதான் இப்போது திருக்கோவிலூர் பெருமாள் நின்றருளும் கர்ப்பகிரகமாக உள்ளது.
திருமாலின் நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் நாற்பத்து மூன்றாவது திவ்யதேசம் இத்திருத்தலம். மகாவிஷ்ணு சுயம்பு மூர்த்தியாக இங்கே அருள்வதுபோல், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். வழக்கமாக சிவாலயங்களில் தான் துர்க்கையைத் தரிசிக்க முடியும். ஆனால், இங்கு விஷ்ணுதுர்க்கையையும் தரிசிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணரும் தனிச் சந்நிதியில் அருள்கிறார்.