பழனி முருகன் தெரியும்... 'நடுப்பழனி' முருகன் தெரியுமா?

Nadupalani Murugan Kovil
Nadupalani Murugan Kovil
Published on

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தாலுக்காவில் அச்சரப்பாக்கத்தின் அருகில் உள்ளது பெருங்கரணை கிராமம். இங்கு 10 அழகிய ஆலமரங்களுக்கு இடையே கனகமலை எனும் நடுபழனி மலை அமைந்துள்ளது. அதன் மேற்கு அடிவாரத்தில் 45 அடி உயரத்தில், அற்புதமான முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலிக்கிறார்.

மலையின் கீழ்வாரத்தில் உள்ள ஸ்ரீ சுப்ரமண்ய ஸ்வாமி பாதங்கள் மிகச் சிறப்பாக அழகுடன் காட்சி தருகின்றன. மேலும், இதனருகே மேற்கு பக்கமான மலையின் உயரம் 300 அடியாகும். இதில் ஏறுவதற்கு, 128 வசதியான படிகளும், வாகனங்கள் மேலே செல்வதற்கு சாய்வான சாலை வசதியும் செய்யப்பட்டுள்ளது.

படிகள் மூலம் கோவிலுக்கு செல்வோர் முதலில் இடும்பன் சுவாமி சன்னதியையும், அதன் எதிரில் ஸ்ரீ ஆஞ்சனேயர் சன்னதியையும் காணலாம். சில படிகள் ஏற ஆலயம் வரும். கணபதி, தத்தாத்ரேயர் சன்னதிகளுக்கு, நடுநாயகமாக மரகதக் கல்லாலான ஸ்ரீ தண்டாயுதபாணி, கண் கவரும் வெள்ளி மயில் தோகை பின்புலத்தில் விரித்திருக்க, கிழக்கு நோக்கி அருள்மழை பொழிகிறார்.

ஆலய மஹா மண்டபத்தின் இடது புறத்தில், வள்ளி - தெய்வானை சமேதராய் ஷண்முகப் பெருமான் காட்சி தருகிறார். வலது புறம் விநாயகர், பிரம்மா. இது தவிர ருத்ரன் வடிவமான தத்ராத்ரேயர், லக்ஷ்மி, நாக தத்ராத்ரேயர சரஸ்வதி, பார்வதி வடிவமான அனகாலக்ஷ்மி ஆகியோரையும் தரிசிக்கலாம்.

வேம்பு மரத்தடியில் நாகப்பிரதிஷ்டையும், சரவணப் பொய்கை எனும் நீருற்றும் உள்ளன. இடது புறத்தில் உள்ள ருத்ராக்ஷ மண்டபத்தில் வள்ளி-தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி, மயிலின் மீதமர்ந்து தரிசனம் தருகிறார். அறுபடை வீடுகளின் புடைப்புச் சிற்பங்கள் அழகுடன் காணப்படுகின்றன. 

திருமணங்கள் விரைவில் தடையேதும் இல்லாது நடக்கவும், மக்கட்பேறு பெறவும், ஏனைய விருப்பங்கள் நிறைவேறவும் பக்தர்கள் இத்திருக்கோவிலில் முருகனை வேண்டிக் கொள்கின்றனர். தொடர்ந்து ஆறு செவ்வாய்க்கிழமை விரதமிருந்து வழிபட்டால் பலன் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்‌. இத்திருக்கோயிலில் பங்குனி உத்திரம், சஷ்டி, திருக்கல்யாணம், கார்த்திகை தீபம், ஸ்ரீ முத்துசுவாமி சித்தர் குருபூஜை ஆகிய விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் விழாக் காலங்களில்  சிறப்பு ருத்ராட்ச காவடி எடுத்து முருகனை வழிபடுவது இக்கோயிலின் சிறப்பு ஆகும். விரிவாக்கம் செய்யப்பட்ட அழகிய குளம் உள்ளது. விழாக் காலங்களில் அன்னதானம் உண்டு. பவுர்ணமி கிரி வலம் நடப்பதாகக் கூறுவர். விழாக்களில் ஏகதசருத்ரம் மற்றும் திருப்புகழ் பாராயணத்துடன் வேல்காவடி வழிபாடு நடைபெறுகிறது.

மலை உச்சியில், ஆலயம் அருகில், இத்தகைய அருட் கோவில் உருவாகக் காரணமாயிருந்த, ஐயா முத்துசுவாமி சித்தரின், ஜீவ சமாதி மண்டபமும் உள்ளது‌. மலை அடிவாரம், கணபதி, அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பரம் சுவாமிகள் ஆகியோர் திரு உருவங்கள் உள்ளன. ராஜேஸ்வரி அம்மன், நவ கிரகங்கள் சன்னதி ஆகியனவும் உண்டு. அடிவாரத்தில் சுவாமிகளின் நெருங்கிய நண்பர் முறப்பாக்கம் சுவாமிகளின் சமாதியும் காணப்படுகிறது‌.

சுமார் 4 ஆண்டுகள் இவ்விடத்தில் தவமிருந்த பொள்ளாச்சி ஐயா முத்துசுவாமி அவர்களின் கனவில், முருகப் பெருமான் , அழகிய குழந்தை வடிவத்தில் தோன்றினார். புண்ணியத்தலமான  பெருங்கருணையில உள்ள மலையில், தான், கோவில் கொண்டு, அருள உத்தேசித்திருப்பதை அவருக்கு  உணர்த்தினார். அதன்படி, பெரும் கருணையில், உள்ள மலையை, கண்டுபிடித்தார். அதன் உச்சியில், வேலாயுதத்தை நிறுவி, வழிபாடு செய்யத் தொடங்கினார். அன்னாரது 50 ஆண்டு கடின உழைப்பில் உருவானதுதான் இந்த நடுபழனி முருகன் திருக்கோவில் ஆகும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் மயில் தோகை வைக்கலாமா? என்னென்ன விளைவுகள் ஏற்படும்?
Nadupalani Murugan Kovil

மஹான் காஞ்சிப் பெரியவர் ஒருமுறை இங்கு வரும்போது, ஆலயத்தில் முருகப் பெருமான், சாட்சாத் பழனியிலுள்ள தண்டாயுதபாணியாகவே காட்சி கொடுக்க, இத்தலத்தை 'நடு பழனி' என்ற நாமகரணமிட்டு அழைத்தார். மேலும் மூலவர் சிலையை, மரகத சிலையாக வடித்து எடுத்து அங்கு, புத்தம் புதிய ஸ்ரீ தண்டாயுதபாணி, 1993 ஆம் ஆண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இப்படிப்பட்ட முருகப் பெருமானின் பேரருளைப் பெற்ற ஐயா முத்துசுவாமி சித்தர், பல சித்து விளையாட்டுகளை, பொது மக்களின் நன்மைக்காக மட்டுமே செய்து வந்தார்‌. இவர் தரும் விபூதி, பற்பல வியாதிகளைக் குணப்படுத்தும் என இங்கு பரவலாகச் கூறப்படுவதுண்டு. கூடு விட்டு கூடு பாயும் வல்லமையும் இவர் பெற்றிருந்தார் எனக் சொல்லப்படுகிறது.

சித்தர்களுக்கு, தனது காலம் முடியப் போகிறது எனத் தெரிந்துவிடும் என்பதற்கு, பல உதாரணங்கள் உண்டு. ஐயா முத்துசாமி சித்தருக்கும் அது தோன்ற, உடன் தனது கடமைகளை சரிவர செய்யத் தகுந்தவர் யார் என யோசிக்க, மைசூர் ஸ்ரீ கணபதி சச்சிதானந்த சுவாமிகளின் உருவம், மனக்கண் முன் வந்தது.

இதையும் படியுங்கள்:
அனுபவச் சுவடுகள் – 17 கிராமத்து ‘மண்’ வாசனை!
Nadupalani Murugan Kovil

உருவம் வந்தது மட்டுமல்ல ஐயா கணபதி சச்சிதானந்த சுவாமிகளும் சில காலங்களில் தானே நடுபழனிக்கு வந்து, தனக்கும் அதே போன்ற கனவு வந்தது எனக்கூறி, மனது பூரிப்படைந்தனர்‌. இவ்வளவு பெரிய ஆன்றோர் பெருமக்களின் அருள்பக்தியால் பசுமையான இப்பெருங்கரணையில், அற்புதமான இந்த  நடுப்பழனி முருகப்பெருமானை தரிசிக்கும் வாய்ப்பு நம் வாழ்நாளில் ஏற்பட்டுள்ளது.

வாய்ப்பும்,விருப்பமும் உள்ள ஆஸ்தீக பெருமக்கள் வாழ்வில் ஒரு முறையேனும் நடுப்பழனி முருகனை தரிசிக்க வேண்டும். இத்திருக்கோயிலுக்கு சென்று வருபவர்கள் வாழ்வில் ஏற்றத்தை பெறுவது நிச்சயமே.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com