ராம நாமம் சொன்னால் என்னென்ன பலன் கிடைக்கும்?

ஸ்ரீராமர்...
ஸ்ரீராமர்...

ராம நாமம் செய்தப் பின்னர் அனுமனை வழிபட்டால், ஸ்ரீராமஜெயம் எழுதினால் துன்பங்கள் விலகும் என அனைவரும் கூறுவார்கள். அதை நாமும் பின்பற்றி வருகிறோம், ஆனால், ராம நாமத்தைச் சொல்வதாலும் கேட்பதாலும் என்னென்ன பலன் கிடைக்கிறது என்று இங்கு பார்ப்போம்.

நாரதர் வைகுண்டம் சென்று மகாவிஷ்ணுவிடமே ராம நாமத்தின் மகிமையைப் பற்றி கேட்டார். “ராம நாமத்திற்கு அப்படி என்ன மகிமை உள்ளது? அதைச் சொல்வதாலும் கேட்பதாலும் நமக்கு அப்படி என்ன பலன் கிடைக்கிறது? எனக்கு விளக்கமாகச் சொல்லி என் சந்தேகத்தைத் தீர்த்து வையுங்கள் சுவாமி” என பரந்தாமனிடம் கேட்டார்.

சற்று யோசித்த மகாவிஷ்ணு, “அதோ! அது பூமியில் ஒரு புழு நெளிந்துகொண்டிருக்கிறதா? அதன் காதில் போய் ராம நாமத்தைச் சொல்” என்றார்.

மகாவிஷ்ணு காரணமில்லாமலா சொல்வார் என நினைத்துக்கொண்டு நாரதரும் சென்று அந்தப் புழுவின் காதில் ராம நாமத்தைச் சொன்னார். உடனே அந்த புழுவின் உயிர் போய்விட்டது. பதறிப்போன நாரதர் மீண்டும் மகாவிஷ்ணுவிடம் வந்து நடந்த விஷயத்தைச் சொன்னார். அப்போதும் மகாவிஷ்ணு சாதாரணமாக “அப்படியா?” என கேட்டுவிட்டு, “சரி போகட்டும். அதோ பறந்துகொண்டிருக்கிறதே, அந்தப் பட்டாம்பூச்சியின் காதில் போய் ராம நாமத்தைச் சொல்” என்றார்.

நாரதரும் அப்படியே செய்ய அந்த பட்டாம்பூச்சியும் இறந்துவிட்டது. மீண்டும் வைகுண்டம் வந்த நாரதரிடம், “அதோ தெரிகிறதே! அந்த குடிசை வீட்டில் இன்னும் சற்று நேரத்தில் ஒரு பசு கன்றை ஈன்றெடுக்க போகிறது. அதன் காதில் சென்று ராம நாமத்தைச் சொல்” என்றார் மகா விஷ்ணு.

அனுமன்...
அனுமன்...

இந்த முறை சற்று தயக்கத்துடனேயே சென்ற நாரதர், பிறந்த கன்றுக்குட்டியின் காதிலும் ராம நாமத்தை சொல்ல, அதுவும் இறந்துவிட்டது. பதறி அடித்து ஓடி வந்து, நாரதர், “என்ன சுவாமி! இப்படி ஆகிவிட்டது? ராமநாமத்தின் மகிமையை பற்றி கேட்க வந்தால், ராம நாமத்தை ஒவ்வொரு உயிர்களின் காதிலும் சொல்ல சொன்னீர்கள். ஆனால் நான் சொன்னதும் அவை இறந்து விடுகின்றன. இதுவா ராமன் நாமத்தின் மகிமை?” என்றார்.

அதற்கு பதில் அளித்த மகாவிஷ்ணு, “குழப்பம் வேண்டாம் நாரதா. இந்த நாட்டின் மன்னருக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகிறது. இந்த முறை அந்தக் குழந்தையின் காதில் போய் ராம நாமத்தை சொல்” என்றார்.

நாரதரும் தயங்கி தயங்கி அரண்மனைக்கு வந்தார். அப்போது மன்னனுக்கு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் காதில் சென்று ராம நாமத்தைச் சொல்லிவிட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட வேண்டும் என நினைத்துத் திரும்பிய நாரதரிடம் பிறந்த குழந்தை பேசியது. “என்ன நாரதரே நலமா?” என விசாரித்தது. நாரதருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. பிறந்த குழந்தை பேசுகிறதா? எப்படி நடக்கும் இது? அதுவும் யாருடைய கண்ணுக்கும் தெரியாத என்னை அடையாளம் கண்டு நாரதா என்கிறது! இந்தக் குழந்தைக்கு எப்படி நான்தான் நாரதன் என்று தெரியும்? தன் மனத்திற்குள் அடுக்கடுக்காக கேள்வி கேட்டுக்கொண்டிருந்தார் நாரதர்.

நாரதரின் கேள்விகளை உணர்ந்து குழந்தை பதிலளித்தது. “என்ன நாரதரே என்னை தெரியவில்லையா? என்னுடைய இந்த நிலைக்கு நீங்கள்தானே காரணம். மண்ணில் புழுவாக நெளிந்துகொண்டிருந்த எனது காதில் ராம நாமத்தைச் சொல்லி என்னை புனிதம் அடைய வைத்தீர்கள். அதன் பயனாக அடுத்தப் பிறவியில் பட்டாம்பூச்சியாகப் பிறந்தேன். அப்போதும் விடாமல் என் காதில் ராம நாமத்தைச் சொன்னீர்கள். பிறகு கன்றுக்குட்டியாக பிறந்தபோதும் என் காதில் ராம நாமத்தைச் சொல்லி எனது நிலையை மேலும் உயர்த்தினீர்கள். நீங்கள் என் காதில் சொன்ன ராம நாமத்தின் பலனாக தற்போது இந்த நாட்டின் மன்னனுக்குக் குழந்தையாகத் தோன்றி அரிய மனித பிறவியைப் பெற்றுள்ளேன். நீங்கள் சொன்ன ராம நாமத்தை நான் ஒரு முறை என் காதில் கேட்டதற்கே இத்தனை உயர்வு எனக்கு கிடைத்திருக்கிறது” என்றது.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் உள்ள வித்தியாசமான கடற்கரைகள்… தகவல்கள்!
ஸ்ரீராமர்...

குழந்தையின் இந்தப் பேச்சைக் கேட்டு நேராக வைகுண்டம் வந்து மகாவிஷ்ணுவின் திருவடிகளைச் சரணடைந்த நாரதர், “ராம நாமத்தின் மகிமையை இப்போது புரிந்துகொண்டேன். ஒருமுறை காதில் கேட்ட புழுவிற்கே ராஜ பதவி கிடைத்திருக்கிறது என்றால், ராம நாமத்தின் பெருமையை உணர்ந்து பக்தியுடன் சொல்லும் மற்றவர்களுக்கு எத்தனை பெரிய உயர்வான இடம் கிடைக்கும் என்பதை சொல்ல வார்த்தைகளே இல்லையே!” என மெய்சிலிர்த்து போனார்.

பார்த்தீர்களா! ராம நாமத்தின் மகிமை இப்பொழுது தெரிந்ததா. ராம நாமத்தைச் சொன்னால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்று நாமும் உணர்ந்து ராம நாமத்தைச் சொல்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com