அதென்ன கோவிந்தா கலெக்க்ஷன்...?

 புரட்டாசி சனிக்கிழமை - சுவாரசியமான ஒரு விபரம்!

Thaligai worship...
Puratasi Saturdayimage credit - youtube.com
Published on

புரட்டாசி மாதத்தின் 30 நாளும் பெருமாள் வழிபாட்டிற்குரிய நாட்களாகும். இம்மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் விசேடமானவைகளாகும். தளிகை செய்வது, மாவிளக்கு போடுவதென அமர்க்களப்படும். பெருமாளுக்கு விரதம் இருந்து, அவன் நாமத்தை ஜெபித்து வழிபடுவது சிறப்பானதாகும்.

தளிகை வழிபாடு:

அன்றைய காலகட்டத்தில், புரட்டாசி மாதம் பிறக்கப் போகிறது என்றாலே,  எங்கள் கிராமத்து ஆண்டாளு மாமி வீடு பரபரப்பாக செயல்படும். அதுவரை பயன்படுத்திய பாத்திரங்களை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, வேறு பாத்திரங்களை இறக்கி வைத்து சுத்தம் செய்து புழங்குவார்கள். புதியதாக  ஒரு மண் அடுப்பு பண்ணி,  வீட்டையே புதிதாக மாற்றி வைத்து விடுவார்கள்.

அதிகாலை எழுந்து  கோயிலுக்குச் செல்ல  வேண்டுமென்ற மலைப்பே சிறுவர், சிறுமியர்களாகிய எங்களுக்கு புரட்டாசி மீது ஒரு வெறுப்பை உண்டாக்கிவிடும். ஆனால்,  அதற்கெல்லாம் பரிகாரம் போல புரட்டாசி சனிக்கிழமை தளிகை வழிபாடு,  ஆண்டாளு மாமி வீட்டில் சிறப்பாக நடைபெறும்.  

இரண்டாம் வார சனிக்கிழமைதான் தளிகை வழிபாடு செய்யும் வழக்கம். முதல் நாளே மாவிளக்குப் போட, அதிரசம் செய்ய என மாவிடிக்கத் தொடங்கும்போதே,  தளிகை விழா ஆரம்பமாகிவிடும்.

புரட்டாசி தளிகை வழிபாடு அன்று, அதிகாலையிலேயே  வரிசையாக எல்லோரும் குளித்து முடித்து, பெருமாளை வணங்கிவிட்டு பெண்கள் சமையல் வேலை பார்க்கத் தொடங்கி விடுவார்கள். ஆண்கள் பெருமாள் துதிகள், புராணம், பாராயணம் செய்ய ஆரம்பிப்பார்கள். காலை எந்த உணவும் சாப்பிடாமல் பெரியவர்கள்  உபவாசம். இருந்தாலும்,  குழந்தைகளுக்கு பசிக்கும் என்பதால், பழங்களை உண்ணக் கொடுப்பார்கள்.

கோவிந்தா கலெக்க்ஷன்:

தன் வீடு மற்றும் பக்கத்து வீட்டு பசங்க கைகளில்,  சில பாத்திரங்களைக் கொடுத்து "கோவிந்தா" கலெக்க்ஷனுக்கு மாமி  அனுப்புவார்கள். வீடு வீடாகச் சென்று, "கோவிந்தா" கோஷமிட வேண்டும்.  சிறு குழந்தைகள்  உடனே கிளம்ப, கொஞ்சம் விவரம் தெரிந்த பசங்கள், போக மாட்டேன் என்று முரண்டு பிடித்து நிற்கையில்,

இதெல்லாம் தெய்வ குத்தமாகிடும், நான் வேண்டிக்கிட்டேன். நீங்க போய்த்தான் ஆகணும்.

இதையும் படியுங்கள்:
பஞ்சம் போக்க பீமன் வழிபட்ட சிவாலயம் எங்கே இருக்கிறது தெரியுமா?

Thaligai worship...

மாமி சற்றே குரலை உசத்திய  பிறகுதான், குழந்தைகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு பசங்க,  தெரிந்த வீடுகளுக்கு மட்டும் போய் வாசலில் நின்று 'கோவிந்தா கோவிந்தா..' என்று கோஷமிட்டு அரிசியும் சில்லறைகளையும் வாங்கி வருவோம். அரிசியை சமையலுக்கு எடுத்துக்கொண்டு, சில்லறைக்காசை உண்டியலில் போடுவார்கள்.

(அன்றைய சம்பிரதாயம். இன்று மிஸ்ஸிங்)

பெருமாள் படத்திற்கு முன் 3 இலைகள் போட்டு 5 வகை கலந்த சித்ரான்னங்கள், மற்றும்  மிளகு உளுந்து வடை, சுண்டல், பாயாசம், பானகம் ஆகியவைகள் நைவேத்தியமாக வைக்கப்படும். மாவிளக்கு படைத்து விஷ்ணு சஸ்ரநாம பாராயணம் செய்து வழிபட்டபின், எல்லோருக்கும் சுவையான விருந்துச் சாப்பாடு கிடைக்கும். "கோவிந்தா கலெக்க்ஷன்" செய்தவர்களுக்கு, கூட ஒரு கரண்டி பாயாசம் கிடைக்க, ஜாலியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com