ஆண்டாள் திருமணமத்திற்கும் சுவையான ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கும் என்ன தொடர்பு?

Srivilliputhur palkova
Srivilliputhur palkova
Published on

நாம் தினந்தோறும் பல்வேறு வகையான இனிப்புகளை சாப்பிட்டாலும் சில இனிப்புகளை சுவைக்கும் போது மட்டும் அதன் ஒரிஜினல் சுவை மூளையில் மணி அடித்தது போல் நினைவுக்கு வரும். அப்படி ஒரு இனிப்பு பலகாரம் தான் பால்கோவா; அதுவும், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!

75 ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி சுவை மாறாமல் செய்யப்படும் இந்த பால்கோவாவின் வரலாற்றினை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

ஆண்டாள் திருமணம் முடிந்து தாய் வீட்டிற்கு வந்த போது பல்வேறு சடங்குகள் நடைபெற்றதாம். அப்படி நடைபெற்ற ஒரு சடங்கில் சுண்டக்காய்ச்சிய பாலில் வெல்லம் சேர்த்து ஆண்டாளுக்கு படைத்தார்களாம். அப்படி ஆண்டாளுக்கு படைக்கப்பட்ட அந்த திரட்டு பாலும், இப்போது நடைமுறையில் உள்ள பால்கோவாவின் தயாரிப்பு முறைக்கும் அதிகமான ஒற்றுமை இருப்பதால் இதுவே பால்கோவாவின் வரலாறு என எழுதப்பட்டதாம். 

ஆனால் தமிழ்நாட்டில் 1940 ஆம் ஆண்டுகளுக்கு பின்பு தான் பால்கோவா பிரபலம் அடைந்ததாம். அதற்கு இன்னொரு காரணம் என்னவென்றால் இத்தகைய காலகட்டங்களில் நாட்டில் பால் உற்பத்தியை பெருக்குவதற்காக மத்திய அரசால் வெண்மை புரட்சி என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிக அளவிலான கூட்டுறவு பால் பண்ணைகள் ஏற்படுத்தப்பட்டன. இதனால் பாலின் உற்பத்தியும் அதிகமாக பெருகியது. அதன் பின்பு தான் இந்தப் பாலை வைத்து பால்கோவா தயார் செய்து இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்தார்களாம். 

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. இயற்கையாகவே இங்கு வளரும் தாவரங்களை உண்ணும் மாடுகளின் பாலுக்கு என்று ஒரு தனி சுவை உள்ளதாகவும் மக்களால் நம்பப்படுகிறது. மேலும் பால்கோவா தயாரிப்பு முறைக்கு விறகு அடுப்பையே இவர்கள் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதிலும் குறிப்பாக அடுப்பு எரிக்க முந்திரி பருப்பை எடுத்த பின்பு அதன் ஓடுகளையே எரிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள். இத்தகைய முந்திரி பருப்பின் ஓடுகள் மிக அதிக நேரம் நின்று எரியும் தன்மை வாய்ந்தவை. 

சட்டியை அடுப்பில் வைத்து நன்கு சூடானவுடன் பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து சுண்டக்காய்ச்சி அதனுடன் சிறிதளவு முந்திரிப்பருப்பும் சேர்த்து இறக்கினால் சுவையான பால்கோவா ரெடி. பார்ப்பதற்கு எளிமையான தயாரிப்பு முறையாக இருந்தாலும், இதனை தயாரிப்பதற்கு கடின உழைப்பு தேவை. இதன் சுவைக்கு இந்த கடின உழைப்பும் ஒரு முக்கிய காரணம் என்று  மக்கள் நம்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்படும் காரணம் தெரியுமா?
Srivilliputhur palkova

ஆரம்பத்தில் பால்கோவா தயாரிப்பானது சிறு தொழிலாக தான் ஏற்படுத்தப்பட்டதாம். பால் அதிகமாக மீந்து போவதால் அதனை பதப்படுத்த வழி இல்லாததால் பால்கோவா தயார் செய்து விற்பனை செய்தார்களாம். குடிசைத் தொழிலாக தொடங்கிய பால் கோவா தயாரிப்பு முறை தற்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் நூற்றுக்கணக்கான கடைகளுக்கு மேல் உள்ளன என்ற அளவில் வளர்ந்துள்ளது. ஒரு கடையில் மட்டும் 600 முதல் 1000 கிலோ வரையிலான பால்கோவா உற்பத்தி செய்யப்படுகிறது. இவை அனைத்தும் அன்றன்றைக்கே விற்பனையாகி விடுகின்றன. 

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. 2019 ஆம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் தவிர வேறு எந்த ஊரிலும்  ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா என்ற பெயரில் இதனை தயாரிக்க முடியாது. 

இனிமேல் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றால்  ஆண்டாளின் ஆசி பெற்ற  கையோடு ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவையும் சுவைத்து பாருங்கள்! சூடிக்கொடுத்த சுடர்கொடியாளின் கைபட்டால் தித்திக்காத இனிப்புதான் ஏது!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com