
2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கும் நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும் பூஜை செய்கிறோம். துர்க்கை என்றால் கோட்டை என்று பொருள். தீமையிலிருந்து பக்தர்களைக் காக்கும் கோட்டை போன்றவள் துர்காதேவி.
கலச பூஜை: 15ம் தேதி ஞாயிறன்று முதல் நாள் கலசம் வைத்து பூஜையைத் தொடங்குவது பல இல்லங்களில் சம்பிரதாயமாக உள்ளது. பலப்பல ரூபங்களை உடைய அம்மனை இயன்ற அளவு ஒன்பது நாட்களும் நியமமாக பூஜை செய்து வழிபடுவது வழக்கம். ஆலயங்களில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு ஒவ்வொரு வித அலங்காரமும் பல்வேறு வித நிவேதனங்களும் செய்து கொண்டாடி வழிபடுகிறோம். இன்றுதான் திருமலையில் ஸ்ரீனிவாச பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவங்கள் தொடங்கும்.
சாரதாராத்யா: ஐப்பசி, கார்த்திகை மாதங்களை உள்ளடக்கிய சரத் காலத்தில் சந்திரன் நல்ல புத்தியை அருளுவான். சரத் காலத்தில் வரும் தேவி நவராத்திரியில் ‘சாரதாராத்யா’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் கூறியபடி அம்மனை பூஜித்தால் மனம் ஒருமைப்படும். ஆன்மீக சாதகர்களுக்கும் மாணவர்களுக்கும் நிலையான, அசையாத மனநிலை வெற்றியை ஈட்டித் தரும்.
பஞ்சமீ பஞ்சபூதேசி: நவராத்திரியில் 19ம் தேதி வியாழக்கிழமையன்று பஞ்சமி திதி வருகிறது. ‘பஞ்சமீ பஞ்சபூதேசி’ என்று லலிதா சஹஸ்ரநாமத்தில் வர்ணித்தபடி வழிபாடு செய்வது சிறப்பானது. அதோடு மானசா தேவி ரூபத்திலும் தேவியை பூஜிப்பது வழக்கம். அன்றைய தினம் நாக பூஜை செய்வது நாக தோஷங்களை விலக்கியருளும்.
மூல நட்சத்திரம்: 20ம் தேதி வெள்ளிக் கிழமை மூல நட்சத்திரம் சேர்வதால் இன்று சரஸ்வதி தேவியை ஸ்தாபித்து மாணவச் செல்வங்கள் சரஸ்வதியை வழிபடுவது மிகச் சிறந்த பயனைத் தரும்.
த்ரி ராத்திரி விரதம்: ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் 21ம் தேதி சனிக்கிழமை தொடங்கி மூன்று நாட்கள் பூஜை செய்வர். இதற்கு த்ரி ராத்ரி விரதம் என்று பெயர்.
துர்காஷ்டமி: 22ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மகா அஷ்டமி அன்று துர்காஷ்டமியாக கொண்டாடுவது சிறப்பு.
சரஸ்வதி பூஜை: 23ம் தேதி திங்கட்கிழமை நவராத்திரியில் மிக முக்கியமான ஒன்பதாம் நாள். இன்று மகா நவமி. புத்தகங்களை வைத்து சரஸ்வதி பூஜையும், வாகனங்கள் தொழிற்சாலைகள் ஆயுதங்கள் கம்ப்யூட்டர்கள் போன்றவற்றிற்கு ஆயுத பூஜையும் சிறப்பாகச் செய்வது வழக்கம். நவராத்தியில் ஒன்பது நாட்களோ, கடைசி மூன்று நாட்களோ பூஜை செய்ய இயலாதவர்கள் கூட இன்று கட்டாயம் சரஸ்வதியை அர்ச்சனை செய்து வழிபட்டு அப்பம், சுண்டல் போன்றவற்றை நிவேதனம் செய்வர்.
விஜய தசமி: 24ம் தேதி விஜய தசமியன்று காலையில் சரஸ்வதி தேவிக்கு புனர்பூஜை செய்து வழிபட்டபின் மாணவர்கள் முதல்நாள் பூஜையில் வைத்த புத்தகங்களை எடுத்து படிப்பார்கள்.
சமீ பூஜை: பத்தாம் நாள் மாலையில் பக்தர்கள் சமீ விருட்சம் எனப்படும் வன்னி மரத்தை பூஜித்து பிரதட்சிணம் செய்வது வழக்கம். வன்னி மரத்தின் பெரிய கிளை ஒன்றை எடுத்து வந்து கோவிலில் ஒரு தொட்டியில் வைத்து சுற்றிலும் பக்தர்கள் அமர்ந்து அந்த மரக்கிளைக்கு பூஜை செய்வார்கள். பக்தர்கள் ஒவ்வொருவரும் தம் பெயரையும் கோத்திரத்தையும் ஒரு சிறு காகிதத்தில் எழுதி வன்னிமரத்தின் முள்ளில் செருகி வணங்குவார்கள். சமீ விருட்சம் பாவங்களையும் பகைவர்களையும் அழிக்கும் என்பது நம்பிக்கை. வன்னி மரத்தின் இலைகளை தங்கமாக எண்ணி ஒருவருக்கொருவர் கொடுத்துக் கொண்டு வீட்டில் பத்திரமாக வைப்பர். மாலையில் சற்று நட்சத்திரங்கள் தென்படும் வேளையை விஜய முகூர்த்தம் என்பர். இந்த நேரத்தில் தொடங்கும் வேலையும் செய்யும் பயணங்களும் வெற்றிகரமாக அமையும்
அபராஜிதா பூஜை: விஜய தசமியன்று சாயங்காலம் வடகிழக்கு திசையான ஈசான்ய திசையில் தூயமையாக உள்ள ஓர் இடத்தில் நீர் தெளித்து சந்தனத்தால் அஷ்டதள பத்மம் கோலமிட்டு மனதில் நினைத்த காரியத்தை சங்கல்பமாகக் கூறி, “ஜயா விஜயா சமேத அபராஜிதாயை நம:” என்று அபராஜிதா பூஜை செய்தால் நினைத்த காரியம் வெற்றிகரமாக அமையும்.
மங்களகரமான நவராத்தியின் ஒன்பது இரவுகளிலும் இறைவியை மறவாமல் நினைத்து வழிபட்டு நல்லாசிகளைப் பெற வேண்டியது நம் கடமை.