
'திருவாரூரில் பிறக்க முக்தி, காஞ்சியில் வாழ முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி' என்பது ஆன்மிக முதுமொழி. முக்தி அளிக்கும் திருத்தலங்களில் காஞ்சி என்றழைக்கப்படும் காஞ்சி மாநகரமும் ஒன்று என்பதை இதன் மூலம் நாம் நன்கு அறிய முடிகிறது. திசையெட்டும் கோயில்கள் என்பது காஞ்சி மாநகரத்திற்கே உரிய சிறப்பு. காஞ்சியில் நூற்றியெட்டு சிவத்தலங்கள் அமைந்துள்ளன. எல்லா தலங்களுமே பழமையானவை. சக்தி மிக்கவை. பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம் ஆகிய ஐந்து பஞ்சபூதத்தலங்களில் காஞ்சி மாநகரம் பிருத்வித் தலமாகும்.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருத்தலத்தில் உள்ள மூலலிங்கம் மணலால் ஆனது. ஒருசமயம் கையிலாயத்தில் ஈசனின் கண்களை விளையாட்டாக பார்வதிதேவி மூடினாள். இதனால் ஈரேழு லோகங்களும் இருளில் மூழ்கின. ஈசன் தன் நெற்றிக்கண்ணைத் திறந்து இருளை அகற்றினார்.
பார்வதிதேவி விளையாட்டாக இச்செயலைச் செய்தாலும் இதனால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கு பிராயச்சித்தமாக ஈசன் பார்வதிதேவியிடம் பூலோகத்திற்குச் சென்று தன்னை நினைத்து தவமியற்றுமாறு ஆணையிட்டார்.
பார்வதிதேவியும் பூலோகத்திற்குச் சென்று காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் இருந்த ஒரு மாமரத்தின் கீழ் மணலால் ஒரு லிங்கத்தை உருவாக்கி வைத்து பஞ்சாக்னியின் மத்தியில் நின்றபடி தவமியற்றத் தொடங்கினாள்.
பார்வதிதேவியின் தவவலிமையை இவ்வுலகிற்கு உணர்த்த விரும்பிய ஈசன் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தினார். கம்பா நதியில் வெள்ளத்தை உருவாக்கி பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். மணலால் உருவான லிங்கமல்லவா ? வெள்ளத்தில் மணல் லிங்கம் கரைந்து அடித்துச் செல்லாதவாறு பார்வதிதேவி அந்த மணல்லிங்கத்தை ஆரத்தழுவிக் கொண்டார்.
அம்பாள் பார்வதிதேவி அணைத்த சிவன் என்ற காரணத்தினால், ஈசனுக்கு 'தழுவக்குழைந்த நாதர்' என்ற பெயர் ஏற்பட்டது. ஈசன் மாமரத்தின் கீழ் தோன்றி பார்வதிதேவிக்கு காட்சி கொடுத்து அங்கேயே திருமணம் செய்து கொண்டார். பார்வதிதேவிக்கு வரங்களை அளித்து இரண்டு நாழி நெல்லும் கொடுத்து முப்பத்தி இரண்டு அறங்களைச் செய்த வருமாறு ஆணையிட்டார்.
ஆதுலர்க்குச் சாலை, ஒதுவார்க்குணவு, அறுசமயத்தார்க்குண்டி, பசுவிக்கு வாயுரை, சிறைச்சோறு, ஐயம், திண்பண்டம் நல்கல், அறவைக்சோறு, மகப்பேறு விந்தல், மகவு வளர்த்தல், மகப்பால் வளர்த்தல், அறவைபிணஞ் சுடுதல், அறவைத்துரியம், கண்ணம், நோய்க்குமருந்து, வண்ணார், நாவிதர், கண்ணாடி, காதோலை, கண்மருந்து, தலைக்கெண்ணெய், பெண்போகம், பிறர் துயர்காத்தல், தண்ணீர்ப்பந்தல், மடம், தடம், சோலை, ஆவுரிஞ்சுதரி, விலங்கிற்குணவு, எறுவிடுத்தல், விலைகொடுத்து உயிர் காத்தல், கன்னிகாதானம் இவையே 32 அறங்களாகும். அவ்வாறே பார்வதிதேவி காமாட்சி என்ற பெயர் தாங்கி காமகோட்டத்தில் அமர்ந்து அறங்களைச் செய்தார் என்பது ஐதீகம்.
ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலின் கருவறையில் ஈசன் மணல்லிங்கமாக காட்சி தருகிறார். லிங்கத்திருமேனியில் அம்பாள் கட்டியணைத்தத் தடத்தைத் தற்போதும் காணலாம். இத்தலத்தில் ஈசனுக்கு புனுகு மற்றும் வாசனைப் பொருட்களைப் பூசி வெள்ளிக் கவசத்தைச் சாற்றி வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆவுடையாருக்கு மட்டுமே அபிஷேகம் நடைபெறுகிறது.
ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள தீர்த்தமே கம்பா நதியாகும். முற்காலத்தில் ஒரு நதியாக ஓடிய கம்பா நதி தற்போது குளமாக காட்சியளிக்கிறது. இத்தலத்தின் ஸ்தல விருட்சம் மாமரம். காமகோட்டமே காமாட்சி அம்பாள் திருக்கோயிலாகும். காஞ்சிபுரத்திற்குச் செல்லும் போது ஸ்ரீஏகாம்பரேஸ்வரரை வழிபட்டு குளமாக காட்சியளிக்கும் கம்பா நதியை தரிசித்து வாருங்கள்.