
பக்குவம் மற்றும் மனமுதிர்ச்சி என்பவை வயதைப் பொறுத்து வரையறுக்கப்படுவதில்லை. ஒருவர் தனது உணர்ச்சிகளை எவ்வாறு கையாளுகிறார், தன்னையும் பிறரையும் எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பதைப் பொறுத்து இருக்கிறது. இந்தப் பதிவில் மனமுதிர்ச்சியின் ஆறு கொள்கைகளைப் பற்றி பார்ப்போம்.
1. உங்களைக் கட்டுப்படுத்துங்கள்; பிறரையல்ல: மனப்பக்குவத்தின் முதல் அடையாளமே ஒருவர் தன்னை எவ்வாறு கட்டுப்படுத்திக் கொள்கிறார் என்பதில் உள்ளது. பிறரைக் கட்டுப்படுத்த எப்போதும் முயலக் கூடாது. மற்றவர்கள் நாம் எதிர்பாராத விதத்தில்தான் நடந்து கொள்வார்கள். சூழ்நிலைகளும் நமது விருப்பங்களுக்கு ஏற்றவாறு இருக்காது. பிறர் தமது விருப்பப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பதை நிறுத்துவது ஒருவருடைய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமாகும். தன்னுடைய உணர்ச்சிகள், நடத்தை பற்றிய தெளிவான புரிதல் இருக்கும் மனிதர்களுக்கு எப்போதும் மன அமைதி இருக்கும். அது அவர்களுக்கு உள்ளார்ந்த மன பலத்தையும் தரும்.
2. எதையும் எதிர்பாராதீர்கள்; எல்லாவற்றையும் பாராட்டுங்கள்: எதிர்பார்ப்பு எப்போதும் ஏமாற்றத்தில்தான் முடியும். எதையும் எதிர்பாராமல் முடிந்த அளவு பிறரைப் பாராட்டினால் மகிழ்ச்சியும் மனநிறைவும் கிடைக்கும். தினசரி வாழ்க்கையில் பார்க்கும் விஷயங்களிலும், சந்திக்கும் மனிதர்களிடத்திலும் ஒவ்வொரு விதமான அழகைக் காணலாம். மனிதர்களின் சிறிய கருணைச் செயல்களையும் மனதாரப் பாராட்ட வேண்டும். இது ஏற்றத்தாழ்வுகளை ஏற்றுக்கொள்ள வைக்கும் மனநிலையை தரும். சாதாரண வாழ்க்கையைக் கூட மிகவும் சிறப்பான வாழ்க்கையாக மாற்றும்.
3. சிறந்தவற்றை செய்தல்: வாழ்வில் எதுவும் உடனே கிடைத்து விடாது என்ற மனப்பக்குவம் வேண்டும். தினமும் நமது செயல்களை சிறப்பாக செய்து வர வேண்டும். தொடர்ந்த செயல்களின் விளைவாக அதற்கான நல்ல பலன் கிடைக்கும். நிதானமும் பக்குவமும் நம்பிக்கையும் வைத்து செயல்பட்டால் முன்னேற்றம் உறுதி.
4. குறைவாக எதிர்வினை செய்தல்: பிறருடைய செயல்களுக்கு அல்லது வார்த்தைகளுக்கு உடனே எதிர்வினை புரியாமல் நமது உணர்ச்சிகளை அடக்கப் பழக வேண்டும். மனப்பக்குவம் உள்ள நபர்கள் இந்தக் கலையைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்கள். உடனே எதிர்வினையாற்றாமல் இருப்பது என்பது அவர்களைப் புறக்கணிப்பதல்ல. அவர்களை அமைதியான மனதுடன் எதிர்கொள்ள உதவுகிறது. அமைதி, பொறுமை, உற்றுக்கவனித்தல் போன்றவை கட்டுக்கடங்காத கோபத்திற்குப் பதிலாக இருக்க வேண்டும். இதனால் மிகவும் புத்திசாலித்தனமாக ஒருவரால் எதிர்வினையாற்ற முடியும். தன்னுடைய மன அமைதியை காப்பாற்றிக் கொள்ளவும் உறவுகளை வளர்த்துக் கொள்ளவும் முடியும்.
5. எல்லாவற்றையும் சொல்வதை நிறுத்துங்கள்: நமது எண்ணங்கள், கனவுகள், போராட்டங்கள் போன்ற எல்லாவற்றையும் பிறரிடம் பகிர்வதை நிறுத்துங்கள். இது மரியாதையை இழக்கச் செய்யலாம். எனவே, சில விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்வது முக்கியம். அப்போதுதான் ஒருவர் தன்னுடைய லட்சியங்களையும் குறிக்கோளையும் அடைய முடியும். இது பிறரிடமிருந்து எதையும் மறைப்பது என்று பொருள் அல்ல. தன்னுடைய உள் உலகத்தை பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்வது என்று அர்த்தம். மிகவும் நம்பிக்கைக்குரிய நபர்களிடம் மட்டும் பகிரலாம்.
6. நண்பர்களை புத்திசாலித்தனமாக தேர்ந்தெடுத்தல்: நம்மைச் சுற்றியுள்ள நண்பர்கள்தான் நமது வளர்ச்சியை அதிகரிக்கிறார்களா அல்லது தடுக்கிறார்களா என்பதை முடிவு செய்பவர்கள். சுயமரியாதையுள்ள, நம்பிக்கைக்குரிய நண்பர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள்தான் உங்களுடைய மதிப்பை அறிந்தவர்கள். எப்போதும் நேர்மறை எண்ணத்தைக் கொண்டு உங்களுடைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எனவே, சரியான நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது என்பது வாழ்க்கையில் எடுக்கும் மிகவும் முக்கியமான முடிவுகளில் ஒன்றாகும்.
மனப்பக்குவம் மற்றும் மனமுதிர்ச்சி என்பது வாழ்க்கையின் கடைசி நிலை அல்ல. இது வாழ்க்கை முழுவதும் வரக்கூடிய ஒரு பயிற்சியாகும். இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள ஆறு விதிகளையும் கையாண்டால் ஒருவரால் எந்த வயதிலும் மனமுதிர்ச்சியுடன் வாழ முடியும் என்பது உறுதி.