பிள்ளையார் மற்றும் முருகனில் யாருக்கு முதலில் திருமணம் நடந்தது? ஶ்ரீ சைலம் மல்லிகார்ஜுன சுவாமி கோயில் ஸ்தல வரலாறு!

Srisailam Mallikarjuna Swamy
Srisailam Mallikarjuna Swamy
Published on

12 ஜோதிர் லிங்கஸ்தலங்களுள் ஒன்றான மல்லிகார்ஜுன சுவாமி பிரம்மராம்பா தேவி கோயில் 18 சக்தி பீடங்களில் ஒன்றான, தேவியின் கழுத்து விழுந்த பீடமாக உள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஶ்ரீசைலம், நல்லமலை வனப்பகுதியின் நடுவில் கிருஷ்ணா நதிக்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மல்லிகார்ஜுன சுவாமியும் பிரம்மராம்பா தேவியும் நாடி வரும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர். 

புராண தலங்களுள் ஒன்றான இக்கோயிலின் மல்லிகார்ஜுன சுவாமி மற்றும் பிரம்மராம்பா தேவியின் சிலை சுயம்புவாக தோன்றியது. தேவாரம் பாடப்பெற்ற கோயில்களில் இதுவும் ஒன்று. அப்பர், சுந்தரர், சம்பந்தர் என மூவராலும் பாடப்பெற்ற சிறப்பு மிக்க ஸ்தலம் ஆகும்.

ஸ்தல வரலாறு:

  • இளவரசி சந்திரவதி சிவனை மணக்க விரும்பி இந்த கானகத்தில் மல்லிகை பூவால் இறைவனை தினமும் பூஜித்து அவரை அடைந்தாள். அதனால் இத்தல இறைவனுக்கு மல்லிகார்ஜுனர் என்ற பெயர் வந்தது.

  • இந்த தலத்தில் பிறந்த நந்திதேவர் தவமிருந்து சிவபெருமானை சுமக்கும் பாக்கியம் பெற்றார். இங்கு நந்தியே மலையாகவும் உள்ளார்.

  • சிவனும் பார்வதியும், பிள்ளையார் மற்றும் முருகனில் யாருக்கு முதலில் திருமணம் செய்ய வேண்டும் என்று ஆலோசனை செய்தனர். அதன் படி யார் முதலில் உலகைச் சுற்றி வருவார்களோ அவர்களுக்கே முதலில் திருமணம் செய்வதாக முடிவு செய்து போட்டியை தொடங்கினர் (தமிழ் நாட்டில் இப் புராணக்கதை ஞானப் பழத்திற்காக கூறப்பட்டது). முருகன் மயிலின் மீது ஏறி உலகம் சுற்றி கொண்டிருந்தார். பிள்ளையாரோ பெற்றோரைச் சுற்றி வந்தால் உலகை சுற்றுவதற்குச் சமம் என்று சொல்லி அம்மையப்பனை சுற்றி போட்டியில் வென்றார். அதனால் சித்தி புத்தி ஆகிய இருவரையும் இந்த தலத்தில் அவரே மணந்தார்.

  • கௌதம முனிவரின் தவத்தால் மூழ்கிய கங்கை நதி மல்லிகார்ஜுனன் கோயிலில் அருகில் பாதாள கங்கையாக வெளிப்படுகிறது. இதில் நீராடுவதால் பாவங்களை கங்கை போக்குகிறது.

  • மாடு மேய்க்கும் சிவ பக்தரான மல்லண்ணாவின் இறைபக்திக்கு இறங்கி வந்த சிவபெருமான், இந்த புனித ஸ்தலத்தில் அவருக்கு மல்லிகார்ஜுனனாக காட்சியளித்தார்.

  • பார்வதி தேவி தன்னை தேனீயாக மாற்றி மகிஷாசுரனுடன் போரிட்டு வென்ற பின் தேனீ வடிவிலேயே இக்கோவிலை அடைந்தார். பிரமராம்பா கோவிலில் உள்ள ஓட்டை வழியாக தேனீயின் ரிங்காரத்தை பக்தர்கள் கேட்கிறார்கள்.

  • சிவபெருமான் வேட்டைக்காரன் வடிவில் ஸ்ரீசைலம் காட்டிற்கு வந்து, ஒரு செஞ்சு பழங்குடியின பெண்ணைக் காதலித்து மணந்தார். அதனால் அவர்கள் மல்லிகார்ஜுனர் தங்கள் உறவினர் என்று அவரை செஞ்சு மல்லய்யா என்று அழைக்கின்றனர்.

  • சத்ரபதி சிவாஜி இங்குள்ள பிரம்மராம்பா தேவியை வழிபட்டு வந்தார். தேவி பவானி உருவம் கொண்டு சிவாஜிக்கு வீரவாளை பரிசளித்தார். சிவாஜி அந்த வாளைப் பெற்று எதிரிகளை அழித்து தர்மத்தை நிலை நாட்டி தனது ராஜ்ஜியத்தை நிறுவினார்.

இதையும் படியுங்கள்:
சீதையின் காலடித்தடம் எங்குள்ளது தெரியுமா?
Srisailam Mallikarjuna Swamy

கோயில் கட்டுமான வரலாறு:

கோவில் முற்றத்தில் பஞ்சப் பாண்டவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சத்யோஜாதா, வாமதேவா, அகோர, தத்புருஷா மற்றும் ஈசானன என்கிற பஞ்சலிங்கங்கள் உள்ளன. இக்கோயிலை கி.பி 1 இல் சாதவாகன பேரரசர்கள் கட்டுமானத்தை தொடங்கினர்.

சாதவாகன பேரரசை தொடர்ந்து, இக்ஷ்வாகுகள், பல்லவர்கள், சாளுக்கியர்கள், காகத்தியர்கள், ரெட்டிகள் கோயில் கட்டுமானத்தில் பங்களித்தனர். விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயர் மற்றும் சத்ரபதி சிவாஜி ஆகியோர் முறையே சன்னதி மற்றும் கோபுரத்தை கட்டினர்.  

இக்கோயிலில் சிவபார்வதி திருமணம், அர்ஜூன தவம், சந்திரவதி கதை, மார்கண்டேயன் கதை, தட்சனின் யாகம், சிவதாண்டவம், கஜாசுர சம்காரம், சிபி கதை, பாற்கடலைக் கடைதல், கண்ணப்பர் கதை, மகேசுவரர் விஸ்வரூபம், மகிடாசுரமர்தினி போன்ற பல சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

முகலாயர், கர்னூல் நவாப், ஹைதராபாத் நிஜாம் காலத்தில் இங்கு வழிபாடு நிறுத்தப்பட்டது. இடையில் சிவாஜி மற்றும் விஜய நகரப் பேரரசு காலத்தில் வழிபாட்டில் இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகுதான் இந்த கோவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com