திருக்கயிலை மலையைத் தூக்கிய இராவணனால் ஏன் சிவதனுசை தூக்க முடியவில்லை?

இராவணன்
இராவணன்
Published on

பெரும் சிவபக்தனான இலங்காதிபதி இராவணன் தன்னுடைய தவ வலிமையால் சிவன் உறைந்த திருக்கயிலை மலையையே அசைத்துப் பார்த்தான். அவனது பக்தியை மெச்சிய சிவ பெருமான் இலங்கேஸ்வரன் என்ற பட்டத்தையும் அளித்தார். அந்தளவுக்கு பக்தியுள்ள இராவணனால் சிவனின் தனுசை மட்டும் தூக்க இயலவில்லை. அதன் காரணம் என்ன? 

சிவன் தனது ஆயுதமான தனுசை ஜனக மகாராஜாவின் முன்னோரான தேவநாதன் என்பவரிடம் ஒப்படைத்தார். சீதைக்கு சுயம்வரத்தை அறிவித்த மிதிலை நகர் அரசர் ஜனக மஹாராஜா அனைத்து நாட்டு அரசர்களுக்கு செய்தி அனுப்பினார். சீதையை மணம் செய்துக் கொள்ள விரும்புவோர் சிவதனுசை தூக்கி நாண் ஏற்ற வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

சுயம்வர விழாவில் இராவணன் உட்பட, பாரதமெங்கும் உள்ள அரசர்கள் பலரும் கலந்து கொண்டனர். இராவணனுக்கு சில நல்ல குணங்கள் இருந்தாலும் அவன் செய்த தீமைகள், அவன் செய்த நன்மைகளைப் புறக்கணிக்க செய்து விட்டன. என்னதான் இராவணன் பலம் வாய்ந்தவன் ஆனாலும், அந்த சுயம்வரத்தில் ராமரால் மட்டுமே சிவ தனுசை தூக்க முடிந்தது.

அந்த நேரத்தில், உலகப் பெரும் வலிமை மிக்கவர்களில் இலங்காதிபதி ராவணனும் ஒருவன். பல வித சாஸ்திரங்கள், வேதங்களை அறிந்தவன். பல ஸ்லோகங்களையும் இயற்றியுள்ளான். இதனால் அவனுக்கு எப்போதும் தனது சக்தியின் மீதும் அறிவாற்றலின் மீதும் பெரும் கர்வம் கொண்டிருந்தான். பிரம்மனின் பெயரன் என்பதாலும் சிவ பெருமானின் அருளைப் பெற்றதாலும் அவனுடைய ஆணவம் தலைக்கேறி இருந்தது.

இதையும் படியுங்கள்:
அஷ்ட ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் திருவண்ணாமலை கிரிவலப்பாதை அஷ்ட லிங்கங்கள்!
இராவணன்

தான் நினைப்பதை எல்லாம் அடைய முடியும் என்று அவன் நினைத்திருந்தான். சகல சாஸ்திரமும் அறிந்த இராவணன் அதற்கு முறைகேடாக நடக்கவும் அவனது ஆணவம் அவனை வழி நடத்தியது. அந்த ஆணவம் அவனை தர்மத்தில் இருந்து பிறழச் செய்தது. என்ன இருந்தாலும் தாய் வழியில் அசுரனான இராவணனுக்கு அவ்வப்போது அசுர குணம் தலைதூக்கிக் கொண்டே இருந்தது.

சீதையின் சுயம்வரத்தின் போது, ​​ஒவ்வொருவரும் சிவதனுசை தூக்க இயலாமல் தோற்றனர். ஆனால், இராவணன் உறுதியாக தன்னால் வெற்றி பெற இயலும் என்று இறுமாப்போடு இருந்தான். பல நாட்டு அரசர்கள் போட்டியில் தோற்று தங்கள் கர்வத்தினை இழந்து வெளியேறினர்.

ராவணனின் முறை வந்தபோது, ​​சிவதனுசை தூக்க எவ்வளவோ முயன்றும் அவனால்,அதை அசைக்கக் கூட முடியவில்லை. மிகப்பெரிய கைலாய மலையோடு ஒப்பிடுகையில் சிவ தனுசு மிகவும் சிறியது. பெரிய மலையை தூக்கும் பலசாலியால் சிவ தனுசை அசைக்க முடியவில்லை.

ஒவ்வொரு முறையும் இராவணன் சிவதனுசை தூக்க முயலும் போது அதன் எடைக் கூடிக் கொண்டே இருந்தது. இறுதியில் இராவணனுக்கு அவமானமாய் போய் விட்டது. அதன் பிறகு ராமரின் முறை வந்தது. ராமர் முதலில் இறைவன் சிவனை நினைத்து பிரார்த்தனை செய்தார். சிவதனுசை சுற்றி வணங்கி மரியாதை செய்தார். இறுதியில் தன் மொத்த பலத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து சிவதனுசை தூக்க இறைவனின் ஆசியை வேண்டினார். மனமகிழ்ந்து போன சிவபெருமான் ராமருக்கு தூக்கும் வலிமையை கொடுத்தார். ராமர் நாண் ஏற்ற சிவதனுசு உடைந்து போனது.  

இதையும் படியுங்கள்:
கார்த்திகை தீபம் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா?
இராவணன்

இராவணன் கயிலை மலையை அசைக்கும் போது சிவபெருமானின் மீது பக்தி கொண்டிருந்தான். அவனது பக்திக்கு முன் கயிலைமலை தூசி போல எடையற்று போனது. சிவதனுசை தூக்கும் போது ராவணனிடம் அகந்தை இருந்தது. தன்னால் எதுவும் முடியும் என்ற ஆணவம் தலை தூக்கியதால் இறைவன் அவனை கைவிட்டார். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com