ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் கஜேந்திர மோட்சம் நிகழ்ச்சி நடத்திக் காட்டப்படும். முன்னொரு காலத்தில் திரிகுதா என்ற மலையடிவாரத்தில் உள்ள நீரோடையில் துர்வாச முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கந்தர்வன் அந்த நீரோடையில் கந்தர்வ பெண்களுடன் ஜலகீரிடையில் ஈடுபட்டான். இதனால் துர்வாச முனிவரின் தவம் கலைந்தது. இதனால் கோபம் அடைந்த முனிவர் கந்தர்வனை முதலையாக போகுமாறு சாபமிட்டார். உடனே கந்தர்வன் சாப விமோசனம் கேட்கும்போது விஷ்ணுவின் சக்கர ஆயுதம் மூலம் உனக்கு சாப விமோசனம் கிடைக்கும் என்றார்.
இதேபோல் இந்திரேதாயும்னா என்ற மன்னன் பெருமாளை வழிபடும்போது ஆச்சாரிய குறைவாக வழிபட்டதால் ஆத்திரமடைந்த அகத்திய முனிவர் அந்த மன்னனை யானையாக போகுமாறு சபித்தார்.
இதனால் அந்த மன்னர் கஜேந்திரன் என்ற பெயரில் யானையாக வாழ்ந்து வந்தார். ஒருநாள் கஜேந்திரயானை தடாகத்தில் பெருமாளுக்கு பூஜைக்காக தாமரை பூ பறிக்க சென்றது. அந்த தடாகத்தில் தான் சாபம் பெற்ற கந்தர்வன் முதலையாக இருந்தான். யானை தடாகத்தில் இறங்கிய போது முதலை அதன் காலை கவ்வி பிடித்துக்கொண்டது. யானை தப்பிக்க எவ்வளவோ முயன்றும் முதலை காலை விடவில்லை. இதனால் தவித்த கஜேந்திரயானை பெருமாளை வேண்டி ரங்கா ரங்கா என்று கூவி தன்னை காப்பாற்ற அழைத்தது. உடனே கருடன் மீது அமர்ந்து அங்கு வந்த பெருமாள் தனது சக்கராயுதத்தால் முதலையை அழித்து கந்தர்வனுக்கும் யானையாக இருந்த மன்னருக்கும் சாப விமோசனம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியே கஜேந்திரன் மோட்சம் என்று கூறப்படுகிறது.
அந்த நிகழ்ச்சி சித்ரா பௌர்ணமி நாளில் நடந்ததால் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் இந்த நிகழ்ச்சி நடத்திக் காட்டப்படுகிறது.