
நம்முடைய தேகத்தில் சுவாசம் எதன் மூலம் நடைபெறுகிறது? பிராண சக்தியை மேனியில் பாதுகாப்பது எது? வியர்வை கோளங்களால் என்ன நன்மை ஏற்படுகிறது என்பதை கூறுவதே இப்பகுதி.
பஞ்ச இந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி இவ்வைந்தில் சரும பகுதியான நம்முடைய மேனியே மெய் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படுகிறது. யோகத்தில் மெய்ஞான உணர்வினை அளிக்க வல்லதும் மேனியே. சருமத்தின் ஆக்கமென்பது சப்த தாதுக்கலான சுக்கிலம், மஜ்ஜை, மாமிசம், நரம்பு, ரத்தம் ,எலும்பு, தோல் ஆகிய வரிசையில் கடைசியாக உள்ளது 'தோல் 'பகுதியாகும்.
நம் உடலில் உள்ளே அமைந்திருக்கும் பல்வேறு அவயங்களான இருதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், ரத்தம், எலும்பு, நரம்பு மண்டலம் போன்ற நூற்றுக்கணக்கான உடல் உறுப்புகளை எல்லாம் வெளி தெரியாமல் ஒரு போர்வையை போல் சுற்றி பாதுகாப்பாக வைத்துள்ளது தோல் பகுதியே என்பதால், இதைத்தான் தோலின் ஆகச் சிறந்த சிறப்பு என்று கூறுகிறோம்.
தோல் மூலம் தான் மனிதனுக்கு ரூபம் அல்லது ஒரு வடிவம் கிடைக்கிறது. அது ஆண் ஆனாலும் சரி, பெண்ணானாலும் சரி வெளித்தோற்றத்தை கண்டு ஏமாறுவதும், மயங்குவதும் மனிதனின் குணமாக மயக்கம் மட்டுமல்ல, மோகம் கொள்வதும் மேனியழகைக் கண்டு தான். உலக சரித்திரம் பலமுறை தடம் புரண்டு உள்ளதும் மேனியின் வெளிப்புறத் தோற்றத்தின் அழகைக் கண்டு தான்.
இப்படிப்பட்ட நம்முடைய உணர்ச்சிகளின் உறைவிடமும் தோல் பகுதியே. அடி, உதை போன்ற வலிகள், துன்பங்களை அனுபவிப்பதும் நம்முடைய மேனியே ஆகும். கோபம், ரோஷம், காமம், குரோதம் போன்ற கொடிய குணங்களின் வெளிப்பாடாகவும், ஆதிக்கமாகவும் திகழ்வது நம்முடைய மேனியே ஆகும்.
குறிப்பாக நம் முன்னோர்கள் தோல் பகுதியை மெய் என்று கூறியதன் காரணம் என்னவென்றால் உள்ளுணர்வு, இறை உணர்வு, ஆன்மீக உணர்வு, அகவுணர்வு போன்ற தெய்வீக உணர்வுகள் தோல் பகுதியில் குடி கொண்டுள்ளது. மனிதனுக்கு யோக சாதனையில் தெய்வீக ஞானத்தை அளிக்க வல்லது அவனுடைய 'உணர்வே' ஆகும். மனிதன் உணர்ச்சி வேகத்தில் கொடிய செயல்களையும் நிகழ்த்தி விடுபவன். எனவே உணர்ச்சியைத் தாண்டி 'சுய உணர்வின்' வசப்பட வேண்டும் என்பதே சித்த யோகத்தின் முக்கிய நோக்கமாகும்.
உயிர் என்பது பிராண சக்தியே. உண்மையில் உயிர் என்பது உடம்பில் உள்ளே தங்குவதில்லை. அது வெளியேறி விடுகிறது. பிராணசக்தி நம் மேனியை வெளிப்புறம் சுற்றி வருவதைத் தான் சித்தர்கள் செஞ்சுடர் விளக்கு என்கிறார்கள். மேலும் இந்த பிராண சக்தியானது நம்முடைய தோல் பகுதியில் இருக்கின்ற இலட்சக்கணக்கான துவாரங்கள் மூலமே வெளியேறுகிறது. சித்தர்கள் அதனையே மயிர்க்கால்கள் தோறும் பாயும் விந்தை என்கிறார்கள். இப்படி பிராண சக்தி வெளியேறாவிட்டால் நம்மால் கண், மூக்கு ,செவி, நாக்கு மெய் போன்ற பஞ்ச புலன்களையும் விழிப்பு நிலையில் இயக்க முடியாது.
அப்படி என்றால் பிராண சக்திக்கு ஓய்வு உண்டா? என்ற கேள்வி நம்முள் எழுவது உண்டு. இரவு பொழுதில் தூக்கம் நம் கண்களை தழுவும் போது பிராண சக்தியின் ஓட்டம் உடலுக்குள்ளே திரும்புகிறது. இதனால் புலன்கள் ஓய்ந்து அமைதி கொள்கின்றன. தேகத்தின் அசதிகள் நீங்கி மீண்டும் விழித்தெழும்போது உடல் புத்துணர்ச்சியை பெறுகின்றன. உறக்க நிலையில் விசுத்தி சக்கரத்தில் பிராண சக்தி ஓய்வு கொள்கிறது. கனவு நிலையில் நுண் உடல் மூலம் விழித்தெழும் பிராண சக்தி கனவுலகில் சஞ்சாரம் புரிவது நம் அனைவரின் அனுபவம் ஆகும்.
மேலும் நம்முடைய மூக்கு மட்டும் சுவாசிப்பதில்லை. தோல் பகுதியும் சுவாசித்துக் கொண்டு உள்ளது என்பதுதான் உண்மை. மூக்கு இரண்டு பங்கும், தோல் இரண்டு பங்கு என சுவாசித்தலில் நிகழ்வை சரிசமமாக நடத்தி வருகிறது.
நம் தோல் பகுதியில் அமைந்துள்ள லட்சக்கணக்கான ரோமங்களின் துவாரங்களே பிராண சக்தியை பாதுகாக்கிறது. மனிதனுடைய உடல் உஷ்ணத்தை வெளியேற்றும் வியர்வை கோளங்களும் அங்கேதான் உள்ளது. தோல் பகுதியின் வியர்வை கோளங்களின் மூலமாக வியர்வை அகற்றப்படுவதால் உடலின் சோம்பல், அசதி, தூக்கம் போன்ற தமோ குணம் கட்டுப்படுத்தப்படுகிறது.
பூதாகாசத்தை வெற்றி கண்ட பின் பிரணவாகாசம் மற்றும் சித்தாகாச நிலைகளை தொடும்போது தோல் பகுதியை சித்தர்கள் வெற்றி கண்டார்கள். மகான்கள், ஞானிகள், சித்தர்கள் யோக சாதனையின் மூலம் பிராண சக்தியை வெற்றி கண்டதால் அவர்களுடைய மேனி திருமேனி என அழைக்கப்படுகிறது. மேலும் தெய்வ சொரூபங்களின் மேனியும் திருமேனி என்றே 'திரு'நாமத்துடன் அழைக்கப்படுகிறது.