விஷ்ணுக்கு உகந்த ஏகாதசிகளில் விரதம் இருந்து வழிபடு வந்தால் வாழ்வில் வளம் பெறலாம். இப்போது யோகினி ஏகாதசியை பற்றி விரிவாக பார்க்கலாம்.
குபேரன் சிவபூஜை செய்யும்போது, அவனுக்கு பூஜைக்கான பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின் பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை. பூஜையின்போது பூக்கள் இல்லாததைக் கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான். தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு விதமான குஷ்ட ரோகங்கள் வரட்டும் என்று சபித்தான். ஹேமமாலியைக் குஷ்ட ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். சாபத்தின் விளைவாக ஹேமமாலி அளகாபுரியை விட்டு உடலெங்கும் வெண்குஷ்ட ரோகம் பீடிக்க அவமானத்துடன் பூவுலகில் வீழ்ந்தான்.
உண்பதற்கும், குடிப்பதற்கு எதுவும் கிடைக்காத, அடர்ந்த, பயத்தைக் கொடுக்கும் வனாந்தரத்தில் கண் விழித்தான். நெடு நாட்கள் இப்படியே துன்பத்தில் சென்றன. இரவுப் பொழுதிலும் வலியால் உறக்கம் வராமல் அல்லலுற்றான். கோடையின் கடுமையான உஷ்ணத்திலும், பனியின் கடுமையான குளிரிலும் தாங்க வொண்ணா இன்னலுற்றான்.
இத்தனை துன்பம் அனுபவித்தாலும், சிவபெருமானின் மீதான பக்தி குறையாமல் இடைவிடாது தொழுது வந்தான். அதனால் அவனது புத்தி தடுமாறாமல், செய்யும் காரியத்தில் நிலைத்து இருந்தது. செய்த பாபகர்மத்தினால் விளைந்த சாபத்தின் காரணமாக இன்னலுற்றாலும், சிவபெருமானிடம் கொண்ட பக்தியால், தன் முந்தைய பிறவியை பற்றிய நினைவு மாறாமல் இருந்தது. இப்படியே பல நாட்கள் அங்குமிங்கும் அலைந்து திரிந்து, மலை, வனாந்தரம், சமவெளி ஆகியவற்றை கடந்து, ஹேமமாலி பிரம்மாண்டமாகப் பரவி நிற்கும் இமாலய பர்வதத்தை அடைந்தான்.
அங்கு அதிர்ஷ்டவசமாய் அவனுடைய சிவபக்தியின் பலனாக, மஹாதபஸ்வியான ரிஷி மார்க்கண்டேயரின் ஆசிரமத்தைக் கண்டான். ரிஷி மார்க்கண்டேயரை, பிரம்மாவின் பிரதிபிம்பம் என்றே கூறுவர். அவரது ஆசிரமமானது பிரம்மசபை போன்று அழகுற விளங்கியது. ஆசிரமத்தில் ரிஷி மார்க்கண்டேயர், தன் ஆசனத்தில் மிகவும் பொலிவுடனும், தேஜஸூடனும் மற்றுமொரு பிரம்ம தேவன் போல் அமர்ந்திருக்க, ஹேமமாலி பாவம் செய்த குற்ற உணர்ச்சியால் வெட்கப்பட்டு தூரத்தில் நின்றுகொண்டு, ரிஷிக்கு தன்னுடைய பணிவான வணக்கத்தையும்,வந்தனத்தையும் செலுத்தினான்.
"நீ ஆஷாட மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியன்று அதன் விதிமுறைப்படி உபவாசம் இருந்து விரதத்தை கடைபிடித்தால், பகவான் மஹாவிஷ்ணுவின் அருளுக்குப் பாத்திரமாகி உன்னுடைய சாபத்திலிருந்து விடுபடலாம்" என்றார் மார்க்கண்டேயர். இதைக் கேட்டதும் நன்றி உணர்ச்சியுடன் ரிஷி மார்க்கண்டேயரின் கால்களில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்து நன்றியையும், வணக்கத்தை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான் ஹேமமாலி.
ரிஷி, தன்னை நமஸ்கரிக்கும் ஹேமமாலியை கைதூக்கி எழுப்பி, அவனுக்கு அருளாசி வழங்கி அனுப்பினார். ஹேமமாலி, விவரிக்க இயலாத ஆனந்தம் ததும்ப ஆசிரமத்திலிருந்து வெளியேறினான். ரிஷி மார்க்கண்டேயர் சொல்லியபடி, ஹேமமாலியும் கிருஷ்ணபட்ச ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைகளின்படி கடைபிடித்தான். அதன் பலனாக சாபம் விலகி, தன் அழகான யக்ஷ தோற்றத்தைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், இழந்த அனைத்தையும் மீண்டும் பெற்று வீடு திரும்பி, தன் மனைவியுடன் சந்தோஷமாக வாழலானான்.
யோகினி ஏகாதசி விரத உபவாசம், எண்பத்தெட்டு ஆயிரம் பிராமணர்களுக்கு போஜனம் செய்வித்த புண்ணியத்தை வழங்கும் சக்தி பெற்றது. எவரொருவர் இப்புண்ணிய நாளில் விதிமுறைப்படி விஷ்ணு பூஜை செய்து, உபவாச விரதத்தைக் கடைபிடிக்கிறாரோ, அவர் விஷ்ணுவின் அருளால் தங்களுடைய பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று புண்ணிய பக்திமான் ஆவார்.