பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஏன் தெரியுமா?

பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஏன் தெரியுமா?
Published on

பாம்பு என்ற பெயரைக் கேட்டதும் நம் மனதில் பயமும் நடுக்கமும் ஏற்படுகிறது. சிலருக்கு பயத்தில் வியர்த்துக் கொட்டத் தொடங்கிவிடும். பாம்புகளின் விஷத்தைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

உலகிலுள்ள மொத்த பாம்பு இனத்தில் சுமார் 25 சதவிகிதப் பாம்புகள் விஷத்தன்மை உடையவை. இந்தியாவில் காணப்படும் பாம்புகளில் நாகப்பாம்பு (Cobra), கட்டுவிரியன் (Russels Viper), விரியன் வகைகள் (Vipers), பவளப்பாம்புகள் (Coral Snakes) மற்றும் கடல்பாம்புகள் (Sea Snakes) ஆகிய ஐந்து வகைகயே அதிக நச்சுடைய பாம்புகளாகும். பிளாக் மாம்பா (Black mamba) எனும் ஒரு வகைப் பாம்பானது ஒரு முறை கடிக்கும் போது வெளியேறும் விஷமானது சுமார் நூறு நபர்களைக் கொன்றுவிடும். உலகின் மிகக் கொடிய விஷத்தன்மை உடைய பத்து பாம்புகளில் ஏழு வகையான பாம்புகள் ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றன”

பாம்பு ஒருவரைக் கடித்தால் கடித்தது எந்த வகைப் பாம்பு என்பதை நாம் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். நல்லபாம்பு ஒருவரைக் கடித்தால் அப்பாம்பின் விஷமானது நரம்பின் வாயிலாகப் பரவும். நல்லபாம்பு கடித்த இடத்தில் எரிச்சல் ஏற்படும். வாய்க்குமட்டலும் பேச்சுத் தடுமாற்றமும் ஏற்படும். வாயில் எச்சில் வழியும். மயக்கம் ஏற்படும். வாயில் நுரை தள்ளும். சிறிது சிறிதாக மூச்சுக் குறைந்து பின்னர் மரணம் ஏற்படும். நல்லபாம்பு கடித்தால் அரைமணி நேரத்தில் மரணம் ஏற்படும்.

விரியன் பாம்புகளின் விஷமானது நேரடியாக இதயத்தைத் தாக்கும். விரியன் பாம்பு கடித்த இடத்திலிருந்து இரத்தம் ஒழுகும். கடித்த இடத்தில் வீக்கம் ஏற்படும். உடல் வியர்க்க ஆரம்பிக்கும். உடல் சில்லென்று மாறும். இரத்த அழுத்தமானது குறைந்து மாரடைப்பு ஏற்பட்டு மரணம் நிகழும். மிகவேகமாகச் சிகிச்சையினை மேற்கொண்டால் பாம்பு கடித்தவரை காப்பாற்றி விடலாம்.

பாம்புகளின் விஷமானது விளக்கெண்ணையைப் போல வழவழப்பாக காணப்படும். மேலும் விஷமானது பெரும்பாலும் மஞ்சள் நிறத்திலேயே காணப்படும். ஒரு பாம்பின் விஷப்பையில் சராசரியாக 0.1 மி.லி. முதல் 1.5 மி.லி. விஷம் மட்டுமே காணப்படும். அதிகபட்சமாக 5 அல்லது 6 மி.லி. விஷம் காணப்படுகிறது. பொதுவாக பாம்புகள் கடிக்கும் போது தனது விஷப்பையிலிருந்து மொத்த விஷத்தையும் வெளியேற்றுவதில்லை. சிலவகைப் பாம்புகள் விஷத்தை வெளியேற்றாமல் வெறும் கடிக்க மட்டுமே செய்கின்றன.

பாம்புகளின் விஷமானது இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் வகை விஷமானது நரம்புமண்டலத்தைத் தாக்கி மூளை நரம்புகள் இதயம் போன்றவற்றை செயலிழக்கச் செய்துவிடும். இரண்டாவது வகை விஷமானது இரத்த மண்டலத்தைத் தாக்கி இதயம், சிறுநீரகம் போன்ற பாகங்களில் இரத்தக்கசிவை ஏற்படுத்தும். இரத்தத்தின் உறைபண்பை மாற்றவும் செய்யும்.

இதையும் படியுங்கள்:
மகிழ்வுடன் செயல்படுங்கள்! மனம் மகிழுங்கள்!
பாம்பு என்றால் படையும் நடுங்கும். ஏன் தெரியுமா?

ஆஸ்திரேலியா நாட்டில் காணப்படும் ஐலாண்ட் தைபான் (Inland Taipan) மற்றும் ஆசியாவில் காணப்படும் ஹீக் நோஸ்டு சீஸ்நேக் (Hook-nosed seasnake) வகைப் பாம்புகள் அதிகவிஷத்தன்மை உடைய பாம்புகளாகும்.

நீளமான பாம்பு வகைகளில் அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்பு இந்தியா, பிலிப்பைன்ஸ், மலேசியா மற்றும் சீனா போன்ற நாடுகளில் காணப்படும் இராஜநாகமாகும். இப்பாம்புகளின் விஷச்சுரப்பிப் பையில் சுமார் 6 மி.லி. அளவிற்கு விஷம் காணப்படுகிறது. மேலும் ஒரு முறை இப்பாம்பு தாக்கினால் அதிக அளவில் விஷமானது உடலுக்கும் சென்றுவிடும். கடிபட்டவரைக் காப்பாற்றுவது கடினம்.

பாம்பு இனத்தில் நீளமான விஷப்பற்களை உடைய பாம்பு காபூன் வைபர் (Gaboon Viper) வகைப் பாம்பாகும். இப்பாம்புகள் ஆப்பிரிக்கா நாட்டில் வாழ்கின்றன. இவற்றின் விஷப் பற்கள் சுமார் ஆறு சென்டிமீட்டர் நீளத்திற்கு வளர்கின்றன.

அயர்லாந்து நாட்டில் பாம்புகள் இல்லை. நியுசிலாந்து நாட்டில் பாம்புகள் வாழ்கின்றன. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் நியுசிலாந்து நாட்டில் விஷப்பாம்புகள் இல்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com