
ஆமையின் ஓடு சில்லுச் சில்லாக உடைந்து, ஒட்ட வைக்கப்பட்டது பற்றி பல விதமான ஆஃப்ரிக்க நாட்டுப்புறக் கதைகள் உள்ளன. அதன் தலை வழுக்கையானது பற்றிய கதை இது.
முற்காலத்தில் ஆமையின் தலை வழுக்கையாக இருக்கவில்லை. முடி இருந்தது.
அப்போது ஒரு சமயம் ஒரு நாயின் வீட்டில் கருணைக் கிழங்கு கஞ்சி காய்ச்சிக் கொண்டிருந்தார்கள். அதன் வாசனை காற்றில் பரவவே, மோப்பம் பிடித்து ஆமை நாயின் வீட்டுக்குச் சென்றுவிட்டது. அங்கே ஒரு பெரிய பாத்திரத்தில் கருணைக் கிழங்கு கஞ்சி காய்ச்சப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்ட அதற்கு, அதை முழுவதும் எப்படியாவது தானே பருகி விடவேண்டும் என்கிற பேராசை. உடனே நாயிடம் சென்று, “நான் உனக்கு ஒரு செய்தி கொண்டு வந்திருக்கிறேன். மன்னர் உன்னையும் உனது குடும்பத்தாரையும் உடனே காண விரும்புகிறார். அவசரம்,” என்றது.
நாயும் உடனே தனது குடும்பத்தாரை அழைத்துக் கொண்டு மன்னரைக் காணப் பாய்ந்து ஓடியது.
விரைவிலேயே நாய் திரும்பிவிடும் என்று ஆமைக்குத் தெரியும். ஏனென்றால், மன்னர் ஊரில் இல்லை. நாய் வருவதற்குள் கருணைக் கிழங்கு கஞ்சி முழுவதையும் குடித்துவிட வேண்டும் என்று ஆமை அவசரப்பட்டது. முடிந்தவரை வயிறு முட்ட கஞ்சி குடிக்கவும் செய்தது. இருப்பினும் அதற்கு ஆசை தீரவில்லை.
பெரிய பாத்திரத்தில் நாயின் குடும்பம் முழுவதற்குமாக சமைக்கப்பட்டதால் கஞ்சி இன்னும் நிறைய மிச்சம் இருந்தது. எனவே, அதில் இன்னும் கொஞ்சம் எடுத்து தன் வீட்டுக்குக் கொண்டு செல்லலாம் என நினைத்தது. திருட்டுக் கஞ்சி என்பதால், மற்றவர்களுக்குத் தெரியாமல் கொண்டு செல்ல வேண்டுமே! அதற்காக அது தனது தொப்பியில் கஞ்சியை ஊற்றி, மீண்டும் தலையில் கவிழ்த்துக் கொண்டது. எனவே வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு அது கஞ்சியைக் கடத்திச் செல்வது தெரியாது. ஆனால், விரைவில் தன் வீட்டுக்குச் சென்றாக வேண்டும். ஏனென்றால், கஞ்சி சூட்டைத் தலையில் பொறுக்க முடியவில்லை.
ஆமை நாயின் வீட்டை விட்டு வெளியேறுவதற் குள்ளாகவே நாய் குடும்பம் திரும்பி வந்துவிட்டது.
“மன்னர் ஏதோ வெளியூர் போய்விட்டாராம்” என்று நாய் சொல்ல, “அப்படியா? சரி, நான் கிளம்புகிறேன்” என விடை பெற முயன்றது ஆமை.
“இரு, இரு! எங்களோடு கருணைக் கிழங்கு கஞ்சி குடித்துவிட்டு செல்.” நாய் உபசரித்தது.
“பரவாயில்லை. நான் கிளம்புகிறேன்,” என்று ஆமை அங்கிருந்து செல்லப் பரபரத்தது.
“அட, இருப்பா! ஏன் சுடு கஞ்சியைக் காலில் கொட்டியது போலப் பதறுகிறாய்?” நாய் அதை வற்புறுத்தி இருக்கச் செய்ய முயற்சித்தது.
அதற்குள் தலையிலிருந்த கஞ்சியின் சூடு பொறுக்காமல் ஆமை துடித்து, தன் தொப்பியை எடுக்க வேண்டியதாயிற்று. அப்போது அதன் தலை முழுக்க இருந்த கருணைக் கஞ்சியைப் பார்த்த நாயும் அதன் குடும்பத்தாரும் திகைத்தனர்.
கஞ்சியின் சூடு காரணமாக ஆமையின் தலையில் இருந்த தலை முடி முழுவதும் கொட்டிவிட்டது. பிறகு அதன் தலையில் முடி முளைக்கவேயில்லை!